பக்கங்கள்

வெள்ளி, செப்டம்பர் 11, 2020

சிந்தனை செய் மனமே (79) நூறாண்டு காலம் வாழலாம் !

ஓய்வுக்குப் பிந்திய காலத்தை எவ்வாறு அமைத்துக் கொள்வது என்று  திட்டமிடாதவர்கள்  திணறிப் போகிறார்கள் !

 

மனிதர்கள் தம் பிழைப்புக்காக எதையாவது செய்து வருவாய் ஈட்டியே தீர வேண்டியிருக்கிறது. வருவாய் இல்லாத வாழ்க்கை  ஓட்டை விழுந்த படகு போன்றது; விரைவில் மூழ்கிப் போகும் !

வருவாய் ஈட்டுவதற்கான வழிமுறைகள் பல உள்ளன ! சிலர் வேளாண்மையில் ஈடுபடுகிறார்கள்; சிலர் தொழில் செய்கிறார்கள்; சிலர் கூலி வேலையில் ஈடுபடுகிறார்கள்; சிலர் பேச்சுத் திறமையால், முதலீடே இல்லாமல் வருவாய் ஈட்டுகிறார்கள்; இன்னும் சிலர் தொழிலகங்களிலும் அரசுத் துறைகளிலும் பணியேற்கிறார்கள் !

இவர்களுள் இறுதியாகக் குறிப்பிடப்பட்டுள்ள வகையினருக்கு வருவாய் என்பது அவர்கள் பெறும் சம்பளம் மட்டுமே ! சிறுபகுதியினருக்கு மட்டும் சம்பளம் தவிர்த்த பிறவகை முறையற்ற வருமானங்களும் உண்டு !

அரசுத் துறையிலோ, தனியார் துறையிலோ பணி ஏற்க வேண்டுமானால் அதற்கென்று  சில தகுதிகள் வரையறுக்கப்படுகின்றன. குறிப்பிட்டக் கல்வித் தகுதி, உடல் நலத் தகுதி, அகவை மேல்வரம்பு ஆகியவை அவற்றுள் சில !

இவை மூன்றும் தானே அடிப்படைத் தகுதிகள் ! அப்புறம் என்னஅவற்றுள் சிலஎன்று உட்குறிப்பு வைத்து எழுதுகிறீர்கள் என்று கேட்கத் தோன்றுகிறதா ? ஆமாம் ! இவை மூன்று மட்டுமே இருப்பவர்களுக்கு எல்லாம் வேலை கிடைத்து விடுகிறதா என்ன ? ஊட்டச் சத்துஇல்லாவிட்டால் இன்றைய இந்தியாவில் யாருக்குமே வேலை கிடைக்காது !

தேர்வாணைக் கழகம் மூலம் ஒருவர் அரசுத் துறை ஒன்றில்  பணியில் அமர்ந்து விடுகிறார் ! காலையில் புறப்பட்டு அலுவலகம் செல்கிறார்; மாலையில் வீடு திரும்புகிறார். திருமணம், பிள்ளை குட்டிகள், கடன் உடன் வாங்கி ஒரு வீடு என்று அவரது வாழ்க்கைச் சக்கரம்  சீராக ஓடிக் கொண்டிருக்கிறது !

உனக்கு அகவை 58 நிறைவடைகிறது ! இனி நீ அலுவலகம் வரத் தேவையில்லை ! உன் பணியில் தொடர்வதற்கான தகுதியை  இழந்து விட்டாய் என்று சொல்லி ஒருநாள் அவர் வீட்டுக்கு அனுப்பப்படுகிறார் !

அவர் மனதில் ஒரு வினா எழுகிறது ! எனக்கு அகவை 58 தானே நிறைவடைகிறது  ! அகவை 80 ஆகியும் பணியில் தொடரும் அமைச்சர்களும், குடியரசுத் தலைவர் போன்றோரும் இருக்கும் நாட்டில் எனக்கு ஒரு சட்டம், அவர்களுக்கு ஒரு சட்டமா ? இது தான் சம நீதியா ? இந்த வினாவுக்கு யாரும் மறுமொழி சொல்ல அணியமாக இல்லை ! ஏனென்றால் சட்டம் இயற்றும் உரிமை 58 அகவையைக் கடந்தும் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்போரிடம் அல்லவா இருக்கிறது !

இந்த வினாவை அப்படியே விட்டுவிட்டு, வேறு சிந்தனைக்கு வருவோம் ! அகவை 25 அல்லது 30 –ல் அரசுப் பணியில் சேரும் ஒருவரது வாழ்க்கை முறையைப் பற்றிச் சிறிது அலசுவோம் !

இந்த அலுவலரின் வாழ்விடத்திற்கும், அவரது அலுவலகத்திற்கும் இடையில் உள்ள தொலைவைப் பொறுத்து அவர் காலையில் கண் விழிக்கும் நேரம் அமைகிறது. அலுவலகத்திற்குப் புறப்படும் நேரம் அமைகிறது; மாலையில் வீடு திரும்பும் நேரமும் அமைகிறது !

இப்படியே அன்றாடம் அவரது வாழ்க்கை முறை அமைந்து காலப்போக்கில் ஒரு எந்திரமயமான  வாழ்வுக்கு அவர் பழக்கப்பட்டுப் போகிறார். அவர் உடலும் மனமும் இந்த எந்திரமயமான வாழ்வுக்கு இணக்கமாக்கப்படுகின்றன !

அகவை 58 நிறைவு ! பணி ஓய்வு ஆணையைப் பெற்றுக் கொண்ட அவர் இனி அலுவலகம் செல்ல வேண்டியதில்லை. ஒரு நாளின் உட்கூறுகளான  24 மணி நேரத்தில், அவர் விழித்திருக்கும் நேரம் மட்டும் ஏறத்தாழ 16 மணி நேரமிருக்கலாம்.  இந்தப் 16 மணி நேரத்தை பணி ஓய்வுக்குப் பிறகு எப்படிக் கழிப்பது ?

அன்றாடச் செய்தித் தாள்களைப் படிப்பதில்  ஒரு மணி நேரம் ஓட்டலாம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் மூன்று மணி நேரம் செலவழிக்கலாம். பிற பணிகளில் ஒரு இரண்டு மணி நேரம் கடத்தலாம். எஞ்சிய பத்து  மணி நேரத்தை எவ்வாறு கடத்துவது ?

ஓய்வுக்குப் பிந்திய காலத்தை எவ்வாறு அமைத்துக் கொள்வது என்று முன்னதாகவே திட்டமிடாதவர்கள் இதில் திணறிப் போகிறார்கள். மாதாமாதம் சம்பளம் வாங்கிக் கொண்டு வருகையில் வீட்டில் உள்ள உறுப்பினர்கள அவருக்கு அளித்த முதன்மை இடம் இப்போது மெல்ல மெல்லச் சரியத் தொடங்குகிறது !

அவர் மகன் ஏதாவதொரு வேலைக்குச் சென்று  பெயரளவுக்கு  வருமானம் ஈட்டத் தொடங்கிவிட்டால், அவர் நிலை இரண்டாம் இடத்திற்குத் தள்ளப் படுகிறது. வீட்டில் உள்ளோர் உங்களுக்கு ஒன்றும் தெரியாது ! நீங்கள் சும்மா இருங்கள் ! ” என்று அவரை  அழுத்தி வைக்கும் போது அவர்  மனதில் ஒரு நலிவு உருவாகிறது !

பொழுது போகாமல் இன்னற்படத் தொடங்குகிறார். பல்லாண்டு காலமாகப் பழகிப் போன அலுவலக வாழ்க்கை முறையிலிருந்து சட்டென்று ஓய்வுகால வாழ்க்கை முறைக்கு மாறிக் கொள்ள அவரால் முடிவதில்லை ! ஏதோவொன்றை இழந்துவிட்ட உணர்வு அவரைத் துன்புறச் செய்கிறது !

மனதில் குடி கொண்டுவிட்ட  இந்த உணர்வு அவரை உள்ளத்தால் நோயாளி ஆக்கிவிடுகிறது. உள்ளம் பழுதுபடும் போடு அது உடலிலும் எதிரொலிக்கிறது. உடலும் உள்ளமும் ஒருசேரத் தளர்வடைகிறது. விளைவு ?  விரைவில் அவர் வாழ்நாள் முடிந்து போகிறது. பதவியிலிருந்து ஓய்வு பெற்ற சில ஆண்டுகளுக்குள் இறப்பு நேர்வதற்கு இதுவே முதன்மைக் காரணம் !

பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு, ஒவ்வொருவரும் ஏதாவதொரு வேலையில் தம்மை ஈடு படுத்திக் கொள்ள வேண்டும். அந்த வேலை வருவாய் தரக் கூடியதாகவும் இருக்கலாம்; அல்லது வருவாய் இல்லாத  குமுகாயப் பணிகளாகவும் இருக்கலாம்; அல்லது இலக்கியச் சார்பு, முகநூல் (FACE BOOK), சிட்டுரை (TWITTER) போன்ற ஊடகச் சார்புப் பணிகளாகவும் இருக்கலாம் !

இத்தகைய பணிகளில் ஈடுபடுகையில் மனதிற்கு மகிழ்ச்சி கிடைக்கிறது, நண்பர்களுடன் அளவளாவுவது போன்ற  உணர்வு கிடைக்கிறது; தனிமை என்னும் சிறையிலிருந்து மீட்சியும் கிடைக்கிறது ! இவ்வாறு தம் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வோர் மகிழ்ச்சி உணர்வுகளால் ஊக்கம் பெறுகிறார்கள். அஃது அவர்கள் உடலில் எதிரொலிக்கிறது. உள்ளமும், உடலும் தளர்வடையாமால் பாதுக்காக்கப்படும் போது அவர்கள் வாணாளும் நீட்டிப்பு அடைகிறது !

ஓய்வுக்குப் பின்பு வீட்டிற்கு உள்ளேயே தன் வாழ்க்கை வட்டத்தைச் சுருக்கிக் கொண்டுள்ள நண்பர்களே ! உங்களுக்கு ஒன்று சொல்கிறேன் ! தனிமை தான் உங்கள் எதிரி என்பதை உணருங்கள் ! முன்பத்தி ஒன்றில் குறிப்பிட்டிருப்பது போல பத்து மணி நேரத்தைக் கழிக்க வழிவகை தேடிக்கொள்ளுங்கள் !

இலக்கிய ஆய்வுகளில் உங்களை ஈடுபடுத்திப் பாருங்கள்; மொழி ஆய்வுகளில் முனைப்பாக  ஈடுபட்டுப் பாருங்கள்; முகநூல்  (FACE BOOK) கணக்குத் தொடங்கி நண்பர்களுடன் மனதால் உரையாடுங்கள்; சிட்டுரைப் (TWITTER) பதிவுகளைச் செய்து பாருங்கள்; அழைப்பு வந்தால் பேசுவேன்; அவ்வளவு தான் ! என் எழினியை எப்படிப் பயன்படுத்துவது என்று கூட எனக்குத் தெரியாது என்று வெள்ளந்தியாகச் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்;  உங்கள் எழினி உங்களது உற்ற தோழன் என்பதை உணருங்கள்!  இதுவே நூறாண்டு காலம் வாழ்வதற்கான எளிய வழி !

----------------------------------------------------------------------------------------------------------
 ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
(தி.பி: 2051, மடங்கல் (ஆவணி),05)
{21-08-2020}
-----------------------------------------------------------------------------------------------------------
            தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
-----------------------------------------------------------------------------------------------------------




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .