எட்டு அடிகளில் இராமாயணம் !
(இது எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என்னும் பாவகையைச் சேர்ந்தது என்பதால், இலக்கணப்படி இப்பாடலுக்கு நான்கே அடிகள் தாம் !)
-----------------------------------------------------------------------------------------------------------
தமிழைத் துளக்கமறக் கற்றுத் துறை போகிய புலவர் பெருமக்கள் இருபதாம் நூற்றாண்டின்
முன்பாதிவரை, தமிழகத்தில் நிரம்ப இருந்தனர். அவர்கள்
இயற்றிய பாடல்கள் தமிழ்ச்சுவை நாடுவோர்க்குத் தித்திக்கும் தேனாக இனித்தன என்றால் அது
மிகையில்லை !!
------------------------------------------------------------------------------------------------------------
அத்தகைய புலவர் பெருமக்களுள் ஒருவர் இயற்றிய பாடலைப் பாருங்கள் :-
-----------------------------------------------------------------------------------------------------------
தாதையார் சொலராமன் காடு போதல்
.....சார்ந்துளபொன் மானெனுமா
ரீசன் சாதல்
சீதையார் பிரிவெருவை மரணம் பானு
.....சேயொடுநட் புக்கோடல்
வாலி வீடல்
ஓதநீர்க் கடற்பரப்பை யனுமன்
தாண்டல்
.....உயரிலங்கை நகரெரியால்
வேவக் காண்டல்
பாதகராம் அரக்கரெலா மிறக்கத் தாக்கல்
.....பாக்கியரா மாயணச்சீர்க்
காதை யீதே !
----------------------------------------------------------------------------------------------------------
இந்தப் பாடலின் பொருளை ஒருவாறு ஊகித்திருப்பீர்கள். ஆம் ! எட்டு
வரிகளில் இராமாணக் கதையையே சொல்லிவிட்டார் இந்தப் புலவர் !
பாடலைச் சீர் பிரித்துத் தருகிறேன்; மீண்டும்
படியுங்கள் !
-----------------------------------------------------------------------------------------------------------
தாதையார் சொல, ராமன் காடு
போதல்,
.....சார்ந்து உள பொன்மான்
எனும் மாரீசன் சாதல்,
சீதையார் பிரிவு, எருவை மரணம், பானு
.....சேயொடு நட்புக் கோடல், வாலி வீடல்,
ஓதநீர்க் கடற்பரப்பை அநுமன் தாண்டல்,
.....உயர் இலங்கை நகர் எரியால் வேவக் காண்டல்,
பாதகராம் அரக்கர் எலாம் இறக்கத் தாக்கல்,
.....பாக்கிய ராமாயணச் சீர்க் காதை ஈதே !
----------------------------------------------------------------------------------------------------------
பாடலின் பொருள் உங்களுக்கு விளங்கியிருக்கும். இருந்தாலும் அதைத் தொகுத்துத் தருகிறேன் !
----------------------------------------------------------------------------------------------------------
தந்தை தசரதன் கட்டளைப்படி இராமன் காட்டுக்குச் செல்லல், மாயப் பொன் மான் மாரீசன் மடிதல், சீதை இராமனிடமிருந்து பிரிக்கப்பட்டு இலங்கைக்குக் கொண்டு
செல்லப்படல் , சீதையை இராவணன் தூக்கிச் செல்கையில் அவனுடன் சண்டையிட்டு
எருவை என்னும் ஜடாயு மடிதல், பானு எனப்படும் சூரியனின் மகனாகிய சுக்ரீவனுடன் இராமன் நட்புக்
கொள்ளுதல், வாலி இராமனால் வீழ்த்தப்பட்டு இறத்தல், ஆரவாரம் மிக்க கடற்பரப்பை அநுமன் ஆகாய வழியில் தாண்டி இலங்கை
செல்லல், இலங்கை
நகரமே அநுமனால் தீக்கு இரையாக்கப்படல், இராமனுக்கும் இராவணனுக்கும் இடையில் நடந்த போரில் அரக்கர் குலமே அழிந்து
போதல், சீதையை மீட்டுவரும் பேற்றினை இராமன் பெறுதல் – இவையே இராமாயணத்தின் கதை நிகழ்வுகள் !
-----------------------------------------------------------------------------------------------------------
கம்பர் 12,000 விருத்தப் பாக்களினால் இராமாயணக் கதையைக் காவியமாகப் படைத்தார். இப்புலவரோ
எட்டே அடிகளில் இராமாயணக் கதையைச் சொல்லிவிட்டார். இத்தகைய
அரிய பாடலைப் படைத்த புலவரின் பெயர் வரலாற்றில் பதிவாகாமற் போய்விட்டது என்பது வருத்தம் தரும் செய்தியே !
----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, துலை (ஐப்பசி),16]
{01-11-2020}
----------------------------------------------------------------------------------------------------------
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை !
----------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .