பக்கங்கள்

செவ்வாய், ஜூலை 07, 2020

சிந்தனை செய் மனமே (66) கொத்தடிமைகள் !

குறைந்த ஊதியம் ! நிலையற்ற பணி !   ஆதரவற்ற தொழிலாளர்கள் !


உழைப்புக்கு ஏற்ற ஊதியமும், உண்பதற்கு அரை வயிற்றுச் சோற்றுக்கு வழியும்  இல்லாமல், செங்கற் சூளைகளிலும், கருங்கற் சுரங்கங்களிலும், கோழிப் பண்ணைகளிலும் நேரம் காலம் இல்லாமல் உழைத்துக் கொண்டிருந்த இலக்கக் (இலட்சக்) கணக்கான கொத்தடிமைகளை மீட்டெடுத்து அவர்களுக்கு மறு வாழ்வு அளித்தார் இந்திராகாந்தி !

ஆனால் இன்றைய ஆட்சியாளர்களின் கொள்கைப் போக்கு இதற்கு நேர் மாறாகச் சென்று கொண்டு இருக்கிறது. மீண்டும் கொத்தடிமைகளை - படித்த கொத்தடிமைகளை உருவாக்கும் வகையில் மாநில அரசு மற்றும் நடுவணரசுகளின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன ! எப்படி என்று வியப்படைகிறீர்களா ? ஆய்வு செய்வோம் வாருங்கள் !

நாட்டு விடுதலைக்குப் பின்பு நடுவணரசின் சார்பில் பல தொழிற்சாலைகள் திறக்கப்பட்டு, பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது. அஞ்சல் துறை, இருப்பூர்தித் துறை, செய்தித் தொடர்புத் துறை, சுரங்கத் துறை, துறை, வானிலைத் துறை, விண்வெளித் துறை, தொழில் துறை, வனத்துறை எனப் பல்வேறு துறைகளின் பணிகளும் விரிவாக்கப்பட்டு, வேலை வாய்ப்புகள் அளிக்கப்பட்டன !

மாநில அளவிலும், பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிலையங்கள் எனப் பலவும் தோற்றுவிக்கப்பட்டு, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது. வேளாண் துறை, உள்ளாட்சி துறை, மீன்வளத் துறை, தோட்டக்கலைத் துறை, பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, தொழில் வணிகத் துறை எனப் பல துறைகளிலும் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்புப் பெற்றனர் !

தமிழ்நாட்டில், அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த கல்வி என்னும் தளமானது  .கோ.இரா (M.G.R) ஆட்சிக்கு வந்த 1977 ஆம் ஆண்டு முதல் தனியாருக்கும் இடங்கொடுக்கத் தொடங்கியது ! கோவை செ.அரங்கநாயகம் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்பு பல நூறு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் தனியாரால் தமிழகமெங்கும் தொடங்கப்பட்டன !

தனியார் ஆசிரியப் பயிற்சிப் பள்ளிகளின் எண்ணிக்கை 600 எண்ணிக்கையைக் கடந்தது. இதன் விளைவு, அரசு நடத்தி வந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் பல இழுத்து மூடப்பட்டன ! அங்கு ஆசிரியப் பயிற்றுநராகப் பணியாற்றும் வாய்ப்பு பல இளைஞர்களுக்குப்  பறி போயிற்று !

வேலை தேடித் தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியை நாடியவர்களின் கல்விச் சான்றுகளை வாங்கி வைத்துக் கொண்டு, மிகக் குறைந்த ஊதியத்தில் அவர்களிடம் ஆசிரியப் பயிற்றுநராக வேலை வாங்கினர் ! காலப்போக்கில், ஆசிரியப் பயிற்சி பெற்ற வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை பல்லாயிரக் கணக்கில் பெருகியதால் ஆசிரியப் பயிற்சி நிறுவனங்களில் சேர்க்கை குறையத் தொடங்கியது. இதனால் பல தனியார் ஆசிரியப் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டன. 2017 –ஆம் ஆண்டில் தனியார் ஆசிரியப் பயிற்சிப் பள்ளிகளின் எண்ணிக்கை 279 ஆகக் குறைந்து போயிற்று ! ஏப்ரல் 2018 நிலவரப்படி இடைநிலை ஆசிரியர் பயிற்சியை முடித்துவிட்டுக் காத்திருப்போர் எண்ணிக்கை 2,62,681 ஆக உயர்ந்திருந்தது !

அடுத்து,  மூலை முடுக்கெல்லாம் பொறியியற் கல்லூரிகளைத் தொடங்க ம.கோ.இரா (M.G.R)  அரசு தனியாருக்கு இடம் தந்தது. மாட்டுக் கொட்டில், ஊர்திச் சீரகம் (MOTOR VEHICLE WORKSHOP) கோழிப் பண்ணைக் கொட்டகை எல்லாம் பொறியியற் கல்லூரி என்னும் பெயர்ப் பலகைகளைத் தாங்கி நின்றன.  ஏறத்தாழ 650 தனியார் தற்பொருள் (SELF FINANCING) பொறியியற் கல்லூரிகள் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டன !

இங்கும் தமது கல்விச் சான்றுகளை ஒப்படைத்துவிட்டு, மாதம் உருபா எட்டாயிரம், பத்தாயிரம் என்னும் மிகக் குறைந்த ஊதியத்தில் இளம் பொறியாளர்கள் ஆயிரக் கணக்கில் அமர்த்தப்பட்டு, இன்றும் கொத்தடிமைகளாகப் பணி புரிந்து வருகின்றனர் ! 2020 –ஆம் ஆண்டில் தற்சார்புப் பொறியியற் கல்லூரிகளின் எண்ணிக்கை 537 ஆகக் குறைந்திருக்கிறது !

தமிழ்நாட்டில் பதின்மப் பள்ளி (MATRICULATION SCHOOL), இடைநிலை வாரியப் பள்ளி (C.B.S.E. SCHOOL) என்ற பெயர்களில் பலநூற்றுக் கணக்கில் பள்ளிகளைத் தனியார் துறையில் தொடங்கிட இசைவாணை வழங்கப்பட்டது. இதன் விளைவாக அரசுப் பள்ளிகளில் போதிய மாணவர்கள் சேராமல், பல பள்ளிகள் மூடப்பட்டன !

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களில் வெட்புலம் (VACANT) ஏற்படும் போதெல்லாம் அவை நிரப்பப் படாமல் பணிநிரவல் என்னும் முறையில், ஆசிரியர்கள் அங்கும் இங்குமாகப் பந்தாடப்பட்டனர். ஆயிரக் கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் நீக்கப்பட்டன. ஆசிரியர் வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்களின் வேலை வாய்ப்பு பகற்கனாவாகிப் போயிற்று !

தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு  இணையான ஊதியம் வழங்கப்படுவதில்லை. அவர்களது கல்விச் சான்றுகளை வாங்கி வைத்துக் கொண்டு, குறைந்த ஊதியத்தைக் தந்துவிட்டுக் கொத்தடிமைகளாக வேலை வாங்கப்படுகிறது !

காவல் துறை, கல்வித் துறை, மின்துறை உள்பட அனைத்துத் துறைகளிலும், வெபுலமாகும் பணியிடங்கள் நிரப்பப் படுவதே இல்லை. அங்கெல்லாம் ஒப்பந்த அடிப்படையில் குறைந்த ஊதியத்திற்கு ஆள்கள் அமர்த்தப் பட்டு வேலை வாங்கப்படுகிறது. அரசுத் துறைகளிலேயே உழைப்புச் சுரண்டல் (LABOUR EXPLOITATION) உருவாகி இருக்கிறது !

கூரியர்சேவைக்கு நடுவணரசு பச்சைக் கொடி காட்டிய பிறகு, அஞ்சல் துறை முற்றிலுமாக நொடித்துப் போய்விட்டது. பல்லாயிரக் கணக்கான இளைஞர்களுக்கு வேலை அளித்து வந்த அஞ்சல் துறை, தனது கிளை அலுவலகங்கள் பலவற்றை மூடிவிட்டுத் தன் இறுதிக் காலத்தை நோக்கி  விரைந்து கொண்டிருக்கிறது. கூரியர் நிறுவனங்களில் வேலை செய்வோர் கைந்நிறையவா ஊதியம் வாங்குகிறார்கள் ? ஆயிரத்துக்கும் ஐந்நூற்றுக்குமாய் உழைத்துக் கொண்டிருக்கும் கொத்தடிமைகள் இங்கு ஏராளம் ஏராளம் !

வானூர்திச் சேவையில் தனியாரை நுழைய விட்ட பிறகு, நடுவணரசு நடத்தி வந்தஏர் இந்தியா”, “இந்தியன் ஏர்லைன்ஸ்ஆகியவை தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. இவற்றை விற்றுவிட்டு, வானூர்திச் சேவையை முற்றிலும் தனியார் மயமாக்கிட நடுவணரசு முயன்று வருகிறது. தனியார் நிறுவனம் என்றாலே அங்கு மிகக் குறைந்த ஊதியம் அதிக நேர உழைப்பு என்பது தானே எழுதப் படாத விதி !

இருப்பூர்தித் துறையின் மீது இப்போது அரசின் பார்வை பதிந்து இருக்கிறது. சில இருப்பூர்தி நிலையங்களையே (RAILWAY STATIONS) நடுவணரசு தனியாரிடம் ஒப்படைத்துவிட்டது. குறிப்பிட்ட ஊர்களுக்கு இடையே அமைந்துள்ள தடங்களையே (RAILWAY LINES) தனியாரிடம் ஒப்படைத்து அங்கு இருப்பூர்திகளை இயக்கும் உரிமையை அவர்களிடம் வழங்கி இருக்கிறது ! குறைந்த ஊதியத்துக்கு உழைக்கும் கொத்தடிமைகள் கூட்டம் இருப்பூர்தித் தளத்தில் கால் பதிக்கப் போகிறது !

இந்தியா முழுவதும் மின் வழங்கல் பணியை நடுவணரசு தனியாரிடம் ஒப்படைக்க நடவடிக்கையைத் தொடங்கிவிட்டது. இந்தமேதாவித் தனமானமுடிவால் நாடெங்கும் வேலை இழக்கப் போகும் மின்துறை ஊழியர்கள் எத்தனை இலக்கங்கள் (இலட்சங்கள்) என்பது நடுவணரசுக்குத் தெரியாதா ?

ஆடத் தெரியாதவள் அரங்கம் கோணலாக இருக்கிறது என்று சொன்னாளாம் !  ஆளத் தெரியாதவர்கள் ஆட்சியில் அமர்ந்துகொண்டு எல்லாத் துறைகளிலும் அரசின் கட்டுப்பாட்டை விட்டுக் கொடுத்துவிட்டுத் தனியார் மயமாக்க முனைகிறார்கள் !

அரசுத் துறை நிறுவனங்களானஇந்திய எண்ணெய் நிறுவனம்”, “பாரத கல்லெண்ணெய் நிறுவனம்”, “இந்திய நிலக்கரி நிறுவனம்”, “இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்”, போன்ற பல நிறுவங்களின் பங்குகள் தனியாரிடம் விற்கப்பட்டு வருகின்றன. இவற்றில் உள்ள அரசின் பங்கு 49% ஆகக் குறையும்போது, அவற்றின் ஆட்சியுரிமை தனியாரிடம் கைமாறிப்போகும். நேரு காலத்தில் உருவாக்கிய தொழிற்சாலைகளும், அரசு நிறுவனங்களும் தனியார் கைகளுக்குப் போகப் போகின்றன !

சேலத்தில் உள்ள இரும்பாலையைத் தனியாரிடம் விற்பதற்குச் சில ஆண்டுகளாகவே  முயற்சி நடக்கிறது. தொழிலாளர்களின் எதிர்ப்பால் அது  தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது.  நடுவணரசின் உடைமைகளாக உள்ள அனைத்து நிறுவனங்களும், தொழிற்சாலைகளும்  தனியார் கைகளுக்குப் போய்விட்டால் அங்கு அரசின் சட்டதிட்டங்கள் செல்லுபடியாகாது. குறைந்த ஊதியம், அதிக நேர உழைப்பு என்பது தானே தனியாரின் கோட்பாடு ! அப்புறம் என்ன ? நாடெங்கும் கோடிக்கணக்கான கொத்தடிமைகள்; நூறாயிரக் கணக்கான பணமுதலைகள் !

நடுவணரசை பணக்காரர்கள் ஆட்டுவிக்கிறார்கள்; அவர்கள் கட்டளைக்கு ஏற்ப நடுவணரசு ஆடுகிறது ! கோடிக்கணக்கான மக்களைக் கொத்தடிமைகளாக்கும் கொள்கை முடிவுகள் ஒன்றன் பின் ஒன்றாக வரத் தொடங்கியுள்ளன. மக்கள் விழித்துக் கொண்டு கேள்வி கேட்டால், எல்லைப்பகுதியில் பதற்றம், போர் மூளும் சூழ்நிலை என்னும் தோற்றத்தை உருவாக்கி, மக்களை மறக்கடிக்கச் செய்கிறார்கள் !

காந்தியார் அயல் நாட்டவரிடமிருந்து நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்தார்; அவரது வழித் தோன்றல்கள் நாட்டைப் பணமுதலைகளிடம் விற்றுக் கொண்டிருக்கிறார்கள் !

சிந்தனை செய் மனமே ! சிந்தனை செய் ! நீ சிந்திக்கத் தொடங்கினால் தான் ஆட்சியாளார்களின் அட்டூழியத்திற்கு ஒரு முடிவு வரும் ! நாடு கொத்தடிமைகளின் கூடாரமாக ஆவதற்கு முன் சிந்தனை செய் !

---------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, ஆடவை (ஆனி),23]
{07-07-2020}
----------------------------------------------------------------------------------------------------------
      தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
---------------------------------------------------------------------------------------------------------






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .