பக்கங்கள்

சனி, ஜூன் 20, 2020

சிந்தனை செய் மனமே (56) தன்னலச் சேற்றில் புரளும் தமிழகத் தலைவர்கள் !

எனக்குப் பதவி கிடைப்பதற்காக நீ உழைப்பாயாக ! 


இந்திய நாடு விடுதலை பெற்ற பின்பு, நடுவணரசும் மாநில அரசுகளும் இந்தியப் பேராயக் கட்சியின் (INDIAN NATIONAL CONGRESS) தலைமையிலேயே இயங்கி வந்தன.  விடுதலைக்காகப் போராடிய தலைவர்கள் ஆட்சியில் அமர்ந்தனர். காலப்போக்கில் பேராயக் கட்சியின் தலைவர்களும் அமைச்சர்களும் அதிகார மயக்கத்திற்கு ஆளாயினர் !

ஆட்சியின் போக்கும், அமைச்சர்களின் செயல்பாடுகளும் மக்களுக்கு மனநிறைவைத் தரவில்லை. எல்லா மாநிலங்களையும் சமமாகக் கருத மறுத்தனர். பலமொழிகள் பேசும் மக்கள் வாழும் நாட்டில் அனைத்து மொழிகளையும் சமமாகக் கருத வேண்டிய நடுவணரசு இந்திக்கு மட்டும் முதன்மை இடம் தந்து போற்றத் தொடங்கியது. பார்ப்பனர் போன்ற  முன்னேறிய வகுப்பினர் ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்றித் தங்களுடைய மேலாண்மையை நிலை நிறுத்தத் தொடங்கினர் !

இப்படிப்பட்ட ஒரு காலக்கட்டத்தில், சமூக நீதி, மொழிச் சமத்துவம், மாநிலங்களுக்கு அதிகாரப் பகிர்வு ஆகிய கொள்கைகளை வலியுறுத்தித் திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியது. அந்தக் காலக் கட்டத்தில் இவ்வாறு ஒரு கட்சி தோன்றுவதற்கான தேவையும் இருந்தது !

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு சீர்திருத்தத் திருமணச் சட்டம், பெண்களுக்குச் சொத்தில் சமவுரிமை, பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு, நில உச்ச வரம்புக் குறைப்புச் சட்டம், அனைத்து வகுப்பினரும் அர்ச்சகர் ஆகும் உரிமைச் சட்டம், இருமொழிக் கொள்கை, தமிழ் வழிக் கல்வி ஆகிய முற்போக்கு நடவடிக்கைகள் எடுத்தாலும், பல பிரச்சினைகளில் கொள்கைகளை விட்டுக் கொடுத்துச் செயல்படலாயிற்று !

பதவிகளில் அமர்ந்த பிறகு தி.மு.. தலைவர்களின் மனப்பாங்கு மாறலாயிற்று. பதவி ஆசை அவர்களையும் பற்றிக் கொண்டது. அமைச்சர் பதவிகளும் ஒரு சிலருக்கே, மாவட்டச் செயலாளர் பதவிகளும் ஒரு சிலருக்கே, கட்சிப் பதவிகளும் ஒரு சிலருக்கே  என்னும் போக்கு வலுவடைந்தது. பகுத்தறிவுக் கொள்கைகளைக் கைவிட்டனர்.  சொத்துச் சேர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடலாயினர் !

மக்கள் மன்றத்துக்கு வராமலேயே, திரைப்படக்  கவர்ச்சியால் ம.கோ.இரா. (M.G.R.) வுக்கு செல்வாக்குப் பெருகுவதற்கு அன்றைய தி.மு.. தலைவர்களின் செயல்களும் சொற்பொழிவுகளுமே காரணமாக அமைந்தன. மனதுக்குள் கனன்று கொண்டிருந்த முதலமைச்சர் பதவி ஆசையால் கட்சியை உடைத்துக் கொண்டு வெளியே வந்தார் ம.கோ.இரா. (M.G.R.)  ! ஆனால் அதற்கு அவர் சொன்ன காரணம் வேறு !

கட்சித் தலைவர்கள் தவறு செய்தால், கட்சிக்கு உள்ளிருந்து கொண்டே போராட வேண்டும். தவறு செய்பவர்களை கட்சியின் உள்ளிருந்து கொண்டே தட்டிக் கேட்க வேண்டும். பொதுநல வேட்கை கொண்ட கட்சி உறுப்பினர்களைத் திரட்டி, தனக்கு வலுச் சேர்த்துக் கொண்டு கட்சியிலும் ஆட்சியும் காணப்படும் தவறுகளைக் களைய முற்பட வேண்டும் !

.கோ.இரா. இதைச் செய்யாமல் தனிக் கட்சி கண்டது அப்பட்டமான தன்னலம் ! பதவி ஆசைக்கு ஆட்பட்டு ம.கோ.இரா. 1972 –இல் தனிக்கட்சி கண்டாரே அன்றி புதிய கொள்கைகளை முன்னிறுத்திப் புதிய கட்சி காணவில்லை !

அடுத்ததாக வைகோ, மறுமலர்ச்சித் திமு.. என்று ஒரு கட்சியைத் தொடங்கினார். இந்தியப் பேராயக் கட்சி, தி,மு.க ஆகியவற்றுக்கு மாற்றாகப் புதிய கொள்கைகள் எதையும் முன்னிறுத்தித் தனிக் கட்சிக் கண்டாரா ? இல்லை ! தி.மு.க தலைவர் மீது சினம் கொண்டு வெளியே வந்தார் !

கட்சித் தலைவர் தவறு செய்தால் கட்சிக்குள் இருந்து போராட வேண்டும். அதை விடுத்துக் கட்சியை விட்டு வெளியே வந்து தனிக் கட்சி கண்டது அப்பட்டமான தன்னலம் ! தனக்கு ஒரு பதவி வேண்டும், தான் எப்போதும் ஊடக வெளிச்சத்தில் இருக்க வேண்டும் என்ற தன்னலமன்றி வேறொன்றுமில்லை !

மருத்துவர் இராமதாசு ஏன் தனிக் கட்சி தொடங்கினார் ? இந்தியப் பேராயக் கட்சியும், தி.மு..வும் குறிப்பிட்ட வகுப்பினருக்குப் பதவி கொடுக்காமல் புறக்கணித்து வந்தனவா ? இல்லையே ! அவர்களைக் கொடுமைப் படுத்தி வந்தனவா ? இல்லையே ! இந்தியப் பேராயக் கட்சி மற்றும் தி.மு.கவுக்கு மாற்றாக இவர் என்ன புதிய கொள்கைகளை முன் வைத்தார் ? ஒன்றுமில்லையே !

குறிப்பிட்ட வகுப்பு மக்களின் முன்னேற்றத்திற்காக என்று சொல்லி ஒரு அமைப்பைத் தொடங்கி, பிறகு அதைக்  கட்சியாக மாற்றி அரசியல் களத்தில் இயங்கி வரும் அவரால் ஆட்சிக்கு வர முடிந்ததா ? ஒரு சிறிய வட்டத்திற்குள் தன்னை ஒடுக்கிக் கொண்ட அவரால் பிற மக்களின் ஆதரவை எப்படிப் பெற முடியும் ? 

தன்னை நம்பி வாக்களித்து வரும்  மக்களுக்கு அவர் என்ன நன்மைகளைச் செய்திருக்கிறார் ? 20% இட ஒதுக்கீடு தராமல் போராட்டத்தை நசுக்கியதும் துப்பாக்கிச் சூடு நடத்தியதும், அதில் 20 பேர் அளவுக்கு இறந்ததும்  .கோ.இரா ஆட்சியில் அல்லவா ? இன்று அவர்களுடன் கூட்டணி சேர்ந்திருப்பது எந்த வகையில் ஞாயம் ?

தான் ஆட்சிக்கு வந்தவுடன் 20% இட ஒதுக்கீடு அறிவித்து ஆணையிட்டதும், துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்திற்குப் பொருளாதார உதவி அறிவித்ததும்  முதலமைச்சராக இருந்த கருணாநிதி அன்றோ ! மறுபடியும் திரு இராமதாசு போராட்டம் நடத்துவார் என்று பயந்து கொண்டா கருணாநிதி இந்த ஆணைகளை வெளியிட்டார் ?  

திரு.இராமதாசு கட்சி தொடங்கியது அரசியல் அரங்கில் தனக்கு எப்போதும் ஒரு செல்வாக்கு இருக்க வேண்டும், ஊடக வெளிச்சத்தில் எப்போதும் இருக்க வேண்டும்  என்னும் ஆசையால் விளைந்த அப்பட்டமான தன்னலமன்றி வேறென்ன ?

நடிகர் விசயகாந்த் ஏன் தனிக் கட்சி தொடங்கி நடத்தி வருகிறார் ? அவரது கட்சியின் கொள்கை என்ன ? ஆட்சியில் இருப்பவர்கள் தவறு செய்தால், அதைக் கண்டித்து மக்களைத் திரட்டிப் போராட வேண்டும்; சிறைக்குச் செல்ல வேண்டும். ,தனிக் கட்சி தொடங்கி இருக்கக் கூடாது !

தனிக் கட்சித் தொடங்கி இவர் என்ன சாதித்தார் ? எதுவுமே இல்லை ! அப்புறம் ஏன் தனிக் கட்சி ? தனிகட்சியைத் தொடங்கி இன்னும் நடத்தி வருவது அரசியல் களத்தில் தனக்கு ஒரு செல்வாக்கு இருக்கிறது என்பதைக் காட்டிக் கொள்ளும் அப்பட்டமான தன்னலம் அன்றி வேறென்ன ?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருட்டிணசாமி, , கொங்குநாடு மக்கள் கட்சித் தலைவர் ஈசுவரன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், இசுலாமிய இயக்கங்களின்   தலைவர்கள் எல்லாம் தனித் தனிக் கட்சிகள் நடத்தி வருவது மக்களுக்காகவா ? இல்லை ! அரசியல் அரங்கில் தங்களையும் ஒரு தலைவராக முன்னிலைப் படுத்திக் கொள்ளும் அப்பட்டமான தன்னலம் அன்றி வேறென்ன ? 

தமிழ் நாட்டு அரசியல் களம் இந்த அழகில் நாற்றம் எடுத்துக் கொண்டிருக்கையில் நடிகர் சீமான் தனிக் கட்சித் தொடங்கி நடத்தி வருகிறார். இவர் பார்வையில் கருணாநிதி தெலுங்கர்; வைகோ தெலுங்கர், விசயகாந்த் தெலுங்கர், கடம்பூர் இராசு தெலுங்கர், மதுசூதனன் தெலுங்கர்; திருமாவளவன் தெலுங்கர்; இவர் மட்டுமே தமிழர் !

தமிழ் நாட்டைத் தமிழன் தான் ஆள வேண்டும் என்கிறார் ! சரி ! யார் வேண்டாமென்றது ? அப்புறம் ஏன்  கன்னடியரான செயலலிதாவை இவர் ஏன் ஆதரித்தார் ?   

தமிழ் நாட்டில் வாழும் தெலுங்கர்கள், கன்னடியர்கள், மலையாளிகள், மராட்டியர்கள், பீகாரிகள், வங்காளிகள் போன்றோரின்  வாக்குகள் இல்லாமல் சீமான் ஆட்சிக்கு வந்து விட முடியுமா ? அது எப்படி இயலும் ? 

மொழி அடிப்படையில் மக்களைப் பிரித்துப் பார்க்கும் இவர், நாளை சாதி அடிப்படையில் மக்களைப் பிரிவினைப் படுத்தும் இன்னொரு தலைவர் தோன்றினால் என்ன செய்வார் ? தனக்கு ஒரு மேடை, கைதட்டச் சில தொண்டர்கள், எப்போதும் தான்  ஊடக வெளிச்சத்தில் இருக்க வேண்டும் என்னும் பேராசை, என்பது  அப்பட்டமானத் தன்னலமின்றி வேறென்ன ?

நடிகர் கமலகாசன் சில ஆண்டுகளாக மக்கள் நீதி மையம் என்னும் தனிக் கட்சியை நடத்தி வருகிறார். இவர் கட்சியின் கொள்கை என்ன ? யாருக்கும் தெரியாது ! இவர் எந்த மக்களுக்காக உழைக்கப் போகிறார் ? தெருவோர மக்களுக்காகவா இந்தத் திரைப்பட முதலாளி போராட்டம் நடத்தி அவர்களின் வாழ்வை மேம்படுத்தப் போகிறார் ?

விசுவரூபம் படத்திற்கு இவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு ? உண்மையைச் சொல்லத் துணிவு இல்லாத இத்தகைய கருப்புப் பண மனிதர்கள் வந்து தான், கையில் தம்பிடிக் காசு இல்லாத ஏழை எளியவர்களை முன்னேற்றப் போகிறார்களா ?

நடிகர் இரசினி காந்த் விரைவில் கட்சி தொடங்கி ஆட்சிக்கு வரப் போகிறேன் என்று அறிவித்திருக்கிறார் ! பிழைப்புக்காகத் தமிழ்நாட்டுக்கு ஓடி வந்தவர்கள் எல்லாம் உத்தமர்களாக மாற்றுரு புனைந்து கொண்டு உலாவர முயல்கிறார்கள் !

கோடிகோடியாகக் கருப்பும் வெள்ளையுமாகச் சேர்த்து வைத்திருக்கும்  இத்தகைய கோட்டான்கள் தமிழ் நாட்டு மக்களுக்காக இது வரைச் செய்தவை என்ன ? அள்ளிக் கொடுக்க வேண்டாம், கிள்ளிக் கூடக் கொடுக்காத  இந்தக் கருமிகள் ஆட்சி பீடத்தில் அமர்ந்து நம்மை ஆளப் போகிறேன் என்று அறிவிப்பது தன்னலத்தின் உச்சமல்லவா ?

நடிகர் ம.கோ.இரா அ...தி.மு.க தொடங்கி ஆட்சியில் அமர்ந்து ஒருப்படியாக மக்களுக்குச் செய்தவை ஒன்றுமில்லை. அவரது வாரிசு செயலலிதா, மக்களுக்கு ஒன்றும் செய்யாவிட்டாலும் நிறையப் புரட்சிகளைச் செய்திருக்கிறார். தன் கட்சிக்காரன் எதிர்க் கட்சிக் காரனுடன் பேசக் கூடாது, அவன் எதிரில் வந்தால் வணக்கம் சொல்லக் கூடாது, அவன் வீட்டில் பெண் கொடுக்கவோ எடுக்கவோ கூடாது  என்று எத்தனையோ புரட்சிகள் !

செயலலிதாவின் வாரிசுகளான ஒ.பி.எஸ், .பி.எஸ் சாதித்திருப்பவை ஏராளம். நடுவணரசுக்கு அடி பணிந்து தலையாட்டிப் பொம்மைகளாக இயங்கி வருவதே ஒரு சாதனை தானே ! தமிழ் நாட்டின் உரிமைகளை எல்லாம் முற்றிலும் விட்டுக் கொடுத்து விட்டார்களே !.

தமிழ் நாட்டுக்கோ, தமிழுக்கோ ஒரு இம்மியளவில் கூடத் தன் உழைப்பை நல்காத தினத் தந்தி முதலாளிசெல்வச் சீமான்பல கோடிச் செல்வர் -சிவந்தி ஆதித்தனுக்கு அரசின் செலவில் மணி மண்டகம் அமைத்திருப்பதும், அவர் பிறந்த நாளை இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என அறிவித்திருப்பதும் ஏழைகளுக்கான நலத் திட்டங்களில் ஒன்று தானோ ?

கோமாளித் தனத்திற்கு அளவே இல்லையா ? இவர்களுக்கு ஒரே கொள்கை தான் !  ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு, அனைத்து வளங்களையும் துய்க்க வேண்டும் ! ஏழேழு தலைமுறைகளுக்கும் சொத்துச் சேர்க்க வேண்டும் ! அவ்வளவு தான் !

தமிழனிடமிருந்த ஒற்றுமையைக் குலைத்து, எந்தப் பிரச்சினையானாலும் தமிழன் ஓரணியில் திரளமாட்டான் என்று உலகுக்குப் பறைசாற்றி, தமிழக உரிமைகளை நடுவணரசு பறித்துக் கொள்ளக் காரணமாக அமைந்தவர்கள் அல்லவா தி.மு.., .தி.மு.., பா..., தே.மு.தி.., .தி.மு.., வி.சி.., பு..., ... மற்றும் இன்ன பிறக்  கட்சித் தலைவர்கள் !

காவிரி, முல்லைப்பெரியாறு, கச்சத் தீவு, ஈழப் பிரச்சினை, மொழிப் பிரச்சினை, கரிமநீரக எடுப்பு (HYDRO CARBON EXTRACTION), தூத்துக்குடித் தாமிர ஆலை (STERLITE),  எந்தப் பிரச்சினையானாலும் இந்தத் தலைவர்கள் ஓரணியில் திரளுவதே இல்லை ! இவர்கள் தான் மக்கள் நலனுக்காக உழைப்பவர்களாம் ! இவர்களை நம்பி, வாக்களிக்கும் நாம் தான் முட்டாள்கள் ஆக்கப்படுகிறோம் !

நண்பர்களே ! ஒன்றைத் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். இப்போது இருக்கும் எந்தத் தலைவரும் தமிழனுக்காக வாழவில்லை; தங்களுக்காக வாழ்கிறார்கள் !   மக்களுக்காக உழைக்க வில்லை; தங்கள் தன்னலத்திற்காக உழைக்கிறார்கள் ! தமிழ் நாட்டில் இரண்டே கட்சிகள் தான் இருக்க வேண்டும். மற்றவை எல்லாம்  வாக்குச் சீட்டுகள் மூலம் அழிக்கப்பட வேண்டும் !

இரண்டு கட்சிகள் என்னும் நிலை உருவாகும் போது, அரசியல் வாதிகள் எல்லாம் அறுபது அகவையில் அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டும் ! கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். இதற்குச் சட்டம் கொண்டு வர இந்தத் தன்னலவாதிகள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் ! 

மக்கள் தான் வாக்குச் சீட்டுப் புரட்சி மூலம் இதைச் செய்து காட்ட  வேண்டும் ! இங்கிலாந்தில் இருப்பது போல், அமெரிக்காவில் இருப்பது போல் இரு கட்சி ஆட்சி முறை வந்தாலொழிய நமக்கு விடிவு காலமே இல்லை !

அதுவரையில் உதிரிக் கட்சிகளுக்கு வாக்களித்து, நம் தலையில் நாமே மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளாமல் இருந்தால் சரி !

தமிழ்ப் பணி மன்றத்தில் அரசியல் கட்டுரையா எனச்சிலர் வியப்படையக் கூடும். தமிழர்களிடையே ஒற்றுமையைக் குலைத்து, தமிழின் அழிவுக்கு வழிகோலி வரும் இந்தத் தலைவர்களைப் பற்றி எழுதுவதில் தவறே இல்லை. இதுவும் ஒரு தமிழ்ப் பணி தான் !

--------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்
[தி.பி.2051,மீனம்(பங்குனி)24]
{06-04-2020}
-------------------------------------------------------------------------------------------------------
       தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .