பக்கங்கள்

சனி, ஏப்ரல் 04, 2020

பல்வகை (25) பாராட்டுங்கள் ! நீங்களும் பாராட்டப்படுவீர்கள் !

பிறரிடம் காணும் நற்குணங்களைப் பாராட்டுங்கள் ! அவர்களது உழைப்பைப் பாராட்டுங்கள் !



அன்பின் வழியது உயிர்நிலை, அஃதிலார்க்கு என்பு தோல் போர்த்த உடம்பு. அன்பு செலுத்துபவனே உயிருள்ள மனிதன்; அவ்வாறு இல்லாதவன் எலும்பும் தோலும் போர்த்திய உயிரற்ற பிணம். எத்துணைச் சினம் இருந்தால் வள்ளுவர் இப்படிச் சொல்லியிருப்பார் !

அன்பு மனதில் இருந்தால் போதாது; அதை வெளிப்படுத்தவும் வேண்டும் ! அன்பின் வெளிப்பாடு பல வழிகளில் தோன்றுகின்றன. நமக்குக் காவலாக இருக்கும் ஞமலி (DOG) வாஞ்சையுடன் நம்மைப் பார்க்கிறது. அதை மெல்லத் தடவிக் கொடுக்கிறோம். அது நமது அன்பின் வெளிப்பாடு

பால் கொடுக்கும் ஆமா (COW) கழுத்தில் விரல்களால் வருடுகிறோம். அதுவும் நன் அன்பின் வெளிப்பாடு. வளர்ப்புப் புறாவைக் கையில் எடுத்து அதன் சிறகுகளைத் மெல்லத் தடவிக் கொடுக்கிறோம். அதுவும் நமது அன்பின் வெளிப்பாடுதான்.

ஐந்தறிவு படைத்த உயிரினங்களிடம் ஏதோவொரு வகையில் நமது அன்பை வெளிப்படுத்துகிறோம். ஆறறிவு படைத்த மாந்தர்களிடம் நாம், நமது அன்பை எவ்வாறு வெளிப்படுத்துகிறோம் ?

மனிதர்களிடம் நமது அன்பை வெளிப்படுத்துகின்ற வழிகளில் ஒன்று தான் பாராட்டுதல் ! வாய்ப்பு வருகையில் மனதாரப் பாராட்டுங்கள் ! அது தான் நமது அன்பை முழுமையாக வெளிப்படுத்தும் !

பரிசுகள் தரவேண்டாம்; பகட்டான ஆடை அணிகலன்கள் தரவேண்டாம்; பாராட்டுங்கள் ! பிறரிடம் காணும் நற்குணங்களைப் பாராட்டுங்கள் ! அவர்களது உழைப்பைப் பாராட்டுங்கள் ! அவர்களது திறமையைப் பாராட்டுங்கள் ! அதுவொன்றே உங்கள் அன்பை முழுமையாக வெளிப்படுத்தும் வலிமையான கருவியாகும் !

நாள்தோறும் சுவையாகச் சமையல் செய்வதில் சலிப்பின்றி உழைக்கும் மனைவியை, மனதாரப் பாராட்டுங்கள். அடுத்த வேளை உணவை இன்னும் சுவைபடச் சமைக்க வேண்டும் என்னும் உந்தலுணர்வு அவரிடம் தானாகத் தோன்றும். மனைவியின் உழைப்பிற்கு நீங்கள் கொடுக்கும் மதிப்பு மிக்க பரிசு, பாராட்டுரையன்றி வேறெதுவும் இருக்கமுடியாது ! அதுதான் மனைவியின் பால் நீங்கள் செலுத்தும் அன்பின் வெளிப்பாடு !

மாதாந்திரத் தேர்வில் 60 % மதிப்பெண்கள் எடுக்கும் உங்கள் மகன் / மகளைப் பாராட்டுங்கள். அவர்கள் மனம் மகிழ்ச்சியடையும். ”உன்னிடம் திறமை இருக்கிறது; அடுத்த தேர்வில் 80 % எடுக்க முயற்சி செய்; அது உன்னால் முடியும்” என்று சொல்லிப் பாருங்கள். அவர்கள் படிப்பில் வளர்ச்சி காண்பார்கள். பாராட்டுரை தான் மகன் / மகளிடம் நீங்கள் காட்டும் அன்பின் வெளிப்பாடு !

உங்கள் வீட்டுப் பணியாளிடம் “உனக்குத் தந்த வேலையை மிகச் செம்மையாகச் செய்து முடித்திருக்கிறாய்; உன் திறமை கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்; பாராட்டுகள்” என்று சொல்லிப் பாருங்கள். அடுத்த நாள் அவர் தனது வேலைகளை இன்னும் துப்புரவாகவும் செவ்வையாகவும் செய்து முடித்திருப்பார். உழைப்பவருக்கு நீங்கள் தரும் மதிப்பு, அவரது திறமைகளைப் பாராட்டுவது தான்.

பணம் ஈட்டித் தராத பலன்களைப் பாராட்டு உங்களுக்கு ஈட்டித் தரும். ஏன் தெரியுமா ? பாராட்டு என்பது உரியவரிடம் நாம் அன்பு வைத்திருக்கிறோம் என்பதை வெளிப்படுத்துவது மட்டுமன்றி அவரை நாம் உயர்வாக மதிக்கிறோம் என்பதையும் வெளிப்படுத்துகிறது.

மனைவியைப் பாராட்டுங்கள் – அவர் உழைப்பை நீங்கள் மதிக்கிறீர்கள் என்பதற்கு அடையாளமாக ! மகன் / மகளைப் பாராட்டுங்கள் - அவர்களது திறமையில் உங்களுக்கு மதிப்பும் நம்பிக்கையும் இருக்கிறது என்பதற்கு அடையாளமாக ! பணியாளைப் பாராட்டுங்கள் – அவரது உழைப்பை நீங்கள் மதிக்கிறீர்கள் என்பதற்கு அடையாளமாக !

தமிழ்ப் பணி மன்றத்தில் தங்கள் கருத்துகளை, இடுகைகளாகப் பதிவு செய்யும் நண்பர்களைப் பாராட்டிக் கருத்துரை (COMMENTS) எழுதுங்கள் – அவர்கள் உழைப்பை நீங்கள் மதிக்கிறீர்கள் என்பதற்கு அடையாளமாக ! அவர்கள் மீது நீங்கள் அன்பு வைத்திருக்கிறீர்கள் என்பதற்கு அடையாளமாக !

தேடித் தேடி, தேனீ போல ஓடியோடி, உழைத்து, தேன் துளிகளாய் நல்ல நல்ல செய்திகளை உங்களுக்குப் படைக்கும் அவர்களுக்கு நீங்கள் என்ன செய்துவிட முடியும் – பாராட்டுவதைத் தவிர ! பல நண்பர்கள் பாராட்டுவதில் கருமித்தனம் படைத்தவர்களாக இருக்கிறார்கள். விழைவு (LIKE) மட்டும் தெரிவிப்பவர்கள் எல்லாம் இந்த வகையினரே !

இடுகை பிடித்திருக்கிறது என்று விழைவு (LIKE) தெரிவிப்பவர்கள், கூடுதலாக சில நொடிகள் எடுத்து கருத்துரையும் (COMENT) எழுதுங்களேன் ! என்ன குறைந்து விடப்போகிறது ? எழுத்துகள் மூலம் பாராட்டுங்கள் ! அது தான் உங்கள் அன்பின் வெளிப்பாடாக அமையும் !

இடுகைகளைப் படித்து விட்டு, ஒவ்வொன்றாகப் படித்து விட்டு, கருத்துரை எதுவும் சொல்லாமல் கணினியை / எழினியை (MOBILE) மூடி வைக்கும் நண்பர்களே ! பிறரை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் ; அப்போது தான் நீங்களும் மதிக்கப்படுவீர்கள். பிறரது உழைப்பை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்; அப்போது தான் நீங்களும் மதிக்கப் படுவீர்கள் !

இடுகைகள் செய்வோர் மீது அன்பு வையுங்கள்; அப்போது தான் உங்கள் மீதும் மற்றவர்கள் அன்பு வைப்பார்கள். அன்பின் வழியது உயிர்நிலை; அஃதிலார்க்கு என்பு தோல் போர்த்த உடம்பு !

-------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[13-12-2018}

-------------------------------------------------------------------------------------------------------------

             தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .