பக்கங்கள்

சனி, பிப்ரவரி 01, 2020

பழமொழி நானூறு (128) காட்டிக் கருமம் கயவர் மேல் !

மீன் உலர் களத்துக்குப் பூனை காவலா ?




மரத்தடியில் கண்களை மூடி அமர்ந்திருந்தார், அவ்வூரில் நெடு நாள்களாகத் தங்கியிருக்கும் ஒரு முனிவர். ஊராருக்கு நல்வழி காட்டி நல்வாக்குச் சொல்லிவரும் ஞானி அவர் !  முனிவரை அணுகிய பெண்ணொருத்தி, ”ஐயா ! இன்று நான் வெளியூர் செல்கிறேன் ! திரும்பிவர நான்கு நாள்களாகும். ஆனால் ஈரம் காயும் முன் வயலில் நெல் விதைத்தாக வேண்டும். எனக்கு வேறு துணையில்லை.  பக்கத்துத் தெரு பகலவன் எனக்கு அறிமுகம் ஆனவர் தான். ஆனால் நேர்மையானவர் என்று சொல்வதற்கில்லை ! அவரிடம் நெல் விதைப்புப் பணியை ஒப்படைத்துச் செல்லலாமா ? தாங்கள் எனக்கு நல்வழி காட்டுங்கள்என்று பணிவுடன் கேட்டாள். அதற்குத் துறவி சொல்லும் மறுமொழியைப் பாருங்கள் !)

மாவடு போன்ற கண்களும் மயில் போன்ற சாயலையும் உடைய பெண்ணே ! உனக்கு ஒன்று தெரியுமா ? ”

கீழ்மைக் குணம் படைத்த எந்த மனிதனும் நம்பத் தகுந்தவன் அன்று ! நேரம் வரும் போது நம்மைக் காட்டிக் கொடுக்க அவன்  தயங்க மாட்டான் ! அப்படிப்பட்டக் கயமைக் குணம் படைத்த கீழ்மகனை நம்பி, தான் செய்ய வேண்டிய பணிகளை ஒப்படைக்கும் எவனும் சிறந்த மனிதனாக இருக்க முடியாது ! ”

மீன்கள் உலர்கின்ற களத்தில் அதற்குப் பூனையைக் காவலாக வைக்க எந்த அறிவுள்ள மனிதனும் துணியமாட்டான் ! கீழ்மகனை நம்பித் தனது பணிகளை அவனிடம் ஒப்படைத்து விட்டு, அவன் செப்பமாகச் செய்து முடிப்பான் என்று நம்பி வாளாவிருக்கும் எவனும் மீனுக்குப் பூனையைக் காவலாக வைக்கும் தவறைச் செய்தவன் ஆவான் !”

இத்தகைய கருத்துடைய பாடலை எழுதிய புலவர் பெயர் முன்றுறை அரையனார். பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்றான பழமொழி நானூறில் இடம் பெற்றுள்ள இப்பாடல்பூசையைக் காப்பிடுதல் புன்மீன் தலைஎன்னும் பழமொழியை  உள்ளடக்கி அமைந்துள்ளது.  இதோ அந்த பாடல்:-

----------------------------------------------------------------------------------------------------------

காட்டிக்  கருமம்   கயவர்மேல்  வைத்தவர்
ஆக்குவர்  ஆற்றஎமக்  கென்றே  அமர்ந்திருத்தல்
மாப்புரை நோக்கின்  மயிலன்னாய் ! பூசையைக்
காப்பிடுதல்  புன்மீன்  தலை !

----------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:
-------------------------

(மா + புரை) மாப்புரை = மாவடு போன்ற; நோக்கின் = கண் உடைய; மயிலன்னாய் = மயில்போன்ற அழகுடைய பெண்ணே ! எமக்கு என்றே = எமக்காக; ஆற்ற = முழுமையாக (திறம்பட); கருமம் ஆக்குவர் = பணியாற்றுவார்; கயவர் மேல் காட்டி வைத்தவர் = கீழ்மக்கள் மீது நம்பிக்கை வைத்தவர்; பூசையை = பூனையை; தலை = அதிகாரம் கொடுத்து ; காப்பிடுதல் = காவலுக்கு வைத்தல்; புன்மீன் = மீன் உலர் களம்.

---------------------------------------------------------------------------------------------------------

கருத்துரை:
--------------------

தான் செய்ய வேண்டிய பணியை நம்பத் தகாத வேறொரு ஆளிடம் ஒப்படைத்து விட்டு, ஓய்வெடுப்பவன், மீன்கள் உலரும் களத்திற்குப்  ஒரு பூனையைக் காவலுக்கு வைத்தவனுக்கு  ஒப்பாவான் !


---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி:2051: சுறவம் (தை)18)
{01-02-2020}
---------------------------------------------------------------------------------------------------------
    
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !

---------------------------------------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .