பக்கங்கள்

திங்கள், பிப்ரவரி 10, 2020

பெயரியல் ஆய்வு (05) - இந்திரன் !

இந்திரன் என்னும் பின்/முன்னொட்டுப் பெயர்கள் - பொருளென்ன ? 



ஒவ்வொரு மனிதனும் தன் பெயருக்கான பொருளை அறிந்து வைத்திருத்தல் இன்றியமையாத் தேவை. தமிழ் நாட்டில் எத்துணைப் பேர் இப்படித் தன் பெயரின் பொருளைத் தெரிந்து வைத்திருப்பார்கள் என்றுக் கருதுகிறீர்கள் ?


கடைத் தெருவில்  சிலர் கூட்டமாக நின்று கொண்டிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் அருகில் சென்று, இங்கிருப்பவர்களில் யார் யாருக்கு உங்கள் பெயரின் பொருள் தெரியும் என்றுக் கேட்டுப் பாருங்கள். பெரும்பாலானோர் ஏதோ கடவுள் பெயர் என்றுத் தெரியும்; ஆனால் பெயரின் பொருள் எல்லாம் தெரியாது என்பார்கள். ஒரு சிலர் மட்டுமே தம் பெயரின் பொருளைச் சொல்வார்கள் !


தமிழ்நாட்டு மக்களின் பெயர்களில் 90% வடமொழிப் பெயர்களாகவே அமைந்திருப்பதைக் காணலாம். அடிநிலை மக்களின் பெயர்கலியன், வீரன், அஞ்சான், குஞ்சு, காளி...” போன்ற தமிழ்ப் பெயர்களாக இருக்கும். இத்தகைய பெயர்கள் 5% இருக்கும். ஆனால் அவை மதிப்புக் குறைவான பெயர்கள் என்னும் கண்ணோட்டம் இடைநிலை மக்களிடமும். மேல்நிலை மக்களிடமும் இருப்பதால், அப்பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்கு வைப்பதில்லை !


அறிவழகன், வில்லாளன், முல்லைவழுதி, நாவுக்கரசு போன்ற அழகிய தமிழ்ப் பெயர்களை 5% மக்களிடம் நாம் காணமுடியும். தமிழ் உணர்வு என்றால் என்ன விலை என்று கேட்கக் கூடிய அரசியல் தலைவர்களே இப்போது எங்கும் நிறைந்து இருப்பதால், மக்களுக்கும் தமிழ் உணர்வு  இல்லாமற் போய்விட்டது. அதனால் மக்களும் தமிழ்ப் பெயர்களை வைத்துக் கொள்வதில்லை !


பொருளையே புரிந்து கொள்ளாமல் வடமொழிப் பெயர்களைத் தம் குழந்தைகளுக்கு வைக்கும் பெற்றோர், அப்பெயர்களின் பொருள் புரிய வந்தால், நிலைகுலைந்து போவார்கள் ! அவற்றுள் சிலவற்றை மட்டும் பார்ப்போமா !


-------------------------------------------------------------------------------------

பெயர்.............நேரடிப் பொருள்......மறைமுகப் பெயர்

-------------------------------------------------------------------------------------


அகோரம்........அழகில்லாதவன் ......(சிவன்)
பூவராகன்.......நிலப் பன்றி...................(திருமால்)
நாகசுந்தரம்....அழகிய பாம்பு................................
மாருதி..............குரங்கு...........................(அநுமான்)
மாத்ருபூதம்...தாய்ப் பேய்.....................................
நந்திதேவன்...காளை மாடு...............(சிவனூர்தி)
கோபால்..........மாடு மேய்ப்பவன்....(திருமால்)
வைரவன்........நாய்..................................(நாயூர்தி)
பைரவி.............நாய்க்குட்டி...................(துர்க்கை)
சுடலை............சுடுகாடு...........................(சிவன்)


-------------------------------------------------------------------------------------

இப்படி மதிப்புக் குறைவான பெயர்களைச் சூட்டிக் கொண்டு வலம் வரும் தமிழ் மக்கள் நூறாயிரக்  கணக்கில் இருக்கின்றனர் !


சரி ! இந்திரன் என்னும் பெயருக்கு உங்களுக்குப் பொருள் தெரியுமா ? இப்பெயருக்குப் பல பொருள்கள் உள்ளன. வானவர் தலைவன், தலைவன், அரசன், புலவன், கடவுள், விநாயகன், கேட்டை மீன்,  என்றெல்லாம் பொருள் கூறுகிறது தமிழ் அகரமுதலி !


இராசேந்திரன் என்றால் அரசர்களுக்கு எல்லாம் அரசன் (சக்கரவர்த்தி) – மன்னர் மன்னன் என்று பொருள். இராசராசன் என்றாலும் அதே பொருள்தான். நாகேந்திரன் என்றால் நாகங்களின் தலைவன் என்று பொருள். இவ்வாறு இந்திரன் என்னும் சொல்லை முன்னொட்டாகவோ, பின்னொட்டாகவோ கொண்டு அமைந்துள்ள வடமொழிப் பெயர்களையும் அவற்றுக்கான தமிழ்ப் பெயர்களையும் பார்ப்போமா !


-------------------------------------------------------------------------------------------

வடமொழி..................................தமிழ்

-------------------------------------------------------------------------------------------


இராசேந்திரன்.................மன்னர் மன்னன்
இராசராசன்......................கோவேந்தன் (கோ = அரசன்)
மகேந்திரன்......................பேரரசு (மகா = பெரிய)
நாகேந்திரன்.....................அரவரசு (அரவம்பாம்பு)
குபேந்திரன்......................செல்வப் பெருந்தகை
புவனேந்திரன்.................பூவரசு (புவனம் = உலகம் = பூ).
தர்மேந்திரன்...................அறவரசு (தர்மம் = அறம்)
கசேந்திரன்......................வேழவேந்தன் (கசம் = வேழம்)
ஞானேந்திரன்................அறிவுக்கரசு (ஞானம் = அறிவு)
விசயேந்திரன்.................வெற்றி வேந்தன் (விசயம் = வெற்றி)
சுரேந்திரன்.......................விண்ணரசு  (சுரர் = வானவர்)
சுசீந்திரன்.........................மதியரசு (சுசி = நிலவு, மதி)
நரேந்திரன்.......................பூவேந்தன் (நரன் = மனிதன்)
இந்திரகுமாரி..................இளவரசி (இந்திரன் = அரசன்)
இந்திரகுமார்...................இளவரசன் (குமார் = மகன்)


------------------------------------------------------------------------------------------

தமிழன் என்று சொல்லிக் கொண்டு, நம் பெயர்களை வடமொழிப் மொழி பெயர்களாக வைத்துக் கொள்வது தலைக்குனிவான செயல் அல்லவா ? நம் பெற்றோர்கள் தான் அந்தத் தவற்றைச் செய்துவிட்டனர். நாமாவது நம் பிள்ளைகள், பெயரன் பெயர்த்திகளுக்கு நல்ல தமிழ்ப் பெயரை வைக்கலாமே !


---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(Veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணிமன்றம்
[ திபி: 2051, சுறவம்,18]
(01-02-2020)

----------------------------------------------------------------------------------------------------------
              
 தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

---------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .