பக்கங்கள்

புதன், ஜனவரி 22, 2020

பல்வகை (21) முகநூல் - பயன்படுத்திக் கொள்ளத் தெரியாத தமிழர்கள் !

பொழுது போக்குவதற்கென்றே முகநூலில் உலவும் மடிமையாளர்கள்  !



முகநூல் என்பது சிற்றூர்களில் கூடும் சந்தை  போன்றது. என்னிடம் உள்ள பட்டறிவை (அநுபவம்), அறிவுச் செல்வத்தை  நான் அங்கு உங்கள் பார்வைக்கு வைக்கலாம். உங்களுக்குத் தேவையானவற்றை நீங்கள் வாங்கிச் செல்லலாம். உங்களிடமுள்ள பட்டறிவை, அறிவுச் செல்வத்தை நீங்கள் அங்கு பார்வைக்கு வைக்கலாம். அவற்றிலிருந்து எனக்குத் தேவையானவற்றை நான் வாங்கிக் கொள்ளலாம். சந்தைக்கும் முகநூலுக்கும் உள்ள ஒரே வேறுபாடு, சந்தையில் பணம் புழங்கும்; முகநூலில் கொள்வன, கொடுப்பன  எல்லாமே இலவயம்; அவ்வளவு தான் !


இத்தகைய பயன் மிகுந்த முகநூலைப் பலருக்குப் பயன்படுத்திக் கொள்ளத் தெரிவதில்லை. சிலர் பாடல் (கவிதை) என்ற பெயரில் ஏதேதோ எழுதிப் படைக்கிறார்கள்; நேற்று எழுதிய பாடலை இன்று கேட்டால், எழுதியவருக்கே சொல்லத் தெரியாது. காற்றில் பறந்து செல்லும் எருக்கம் பஞ்சுகளாகப் பாடல்கள் முகநூலில் பறக்கின்றன !


வேறு சிலர், தமிழ் நாட்டில் பிறந்து, தமிழைப் படித்து, தமிழால் வளர்ந்து, தமிழால் அறிவூட்டம் பெற்று, “கவிஞர்என்ற பட்டத்தையும் சூட்டிக்கொண்டுசப்பானிய மொழிக்குச் சேவை செய்கிறார்கள். யார் இவர்கள் ? இவர்கள் தான்ஹைக்கூகவிஞர்கள் ! உண்பது தமிழ்ச் சோறு; உழைப்பது சப்பானிய மொழிக்கா ?


ஹைக்கூஎன்று சொல்ல இவர்களுக்கு எப்படி மனம் வருகிறது ? “துளிப்பாஎன்று சொல்லலாம்; அல்லதுசிந்தியல் தேன்பாஎன்று சொல்லலாம் ! இரண்டையும் விடுத்துஹைக்கூவாம் ! ஹைக்கூ ! ”ஹைக்கூவைப் பரப்புவதற்குப் பத்துக்கும் மேற்பட்ட முகநூற் குழுக்கள் ! தாய்மொழி உணர்வு இவர்களிடம் துளிக்கூட இல்லையே ! தாய்மொழி மீது பற்று இல்லாதவர்கள் தமிழர்களென்று எப்படிச் சொல்லிக் கொள்வது ! உலகம் இவர்களைப் பார்த்து நகைக்காதா !


அறிவைத் தேட வேண்டிய மாந்தர்கள் பொழுது போக்குவதற்கென்றே  நூற்றுக் கணக்கான முகநூற் குழுக்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட முகநூற் குழுவின் பக்கத்தைத் திறந்தாலே போதும் ! நம் கண்களில் படுபவைஹாய் மச்சான் ! எப்பிடி இருக்கே”?,   மாப்ளே ! நேத்திக்கு படம் பாத்தேன். என்னமா நடிச்சிருக்கான் அந்த ஒல்லிப் பிச்சான். சூப்பர்ரா” ! இன்னும் இவை போன்ற திருவாசகங்கள் தான் ! தமிழ் நாடு ஒருப்படுமா (உருப்படுமா) ?


தமிழுக்குச் சேவை (?) செய்வதற்கென்றே பல முக நூற் குழுக்கள் இயங்குகின்றன. ஒவ்வொன்றும் ஒரு விதம் ! ஒருவர் ஐயம் கேட்கிறார், “ஐயா பரிபாடலில் எத்தனை முறை சோறு என்ற வார்த்தை வருகிறது ?”. இதைத் தெரிந்து கொண்டு இவர் என்ன செய்யப் போகிறார் ? வார்த்தைஎன்பது தமிழ்ச் சொல் அன்று என்பதைக் கூடத் தெரியாத இவர்  பரிபாடலுக்குள் ஏன் நுழைய வேண்டும் ?


முகநூல் நண்பர் யாருக்காவது பிறந்த நாள் வந்து விட்டால் போதும் ! வாழ்த்து மழை தான் ! பெய்யும் மழை தமிழ் மழையாக இருந்தால் போற்றலாம்; ஆங்கில மழையாகவன்றோ அவை இருக்கின்றன ! HAPPY BIRTH DAY என்னும் சொற்களுடன் விதவிதமான படங்களை வெளியிட்டு, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இவர்கள் எல்லாம் இங்கிலாந்தில் பிறந்த எலிக் குஞ்சுகள் போலும் ! தமிழைப் புறக்கணிக்கும் இந்த வேக்காடு குறைந்த சோற்றுப் பருக்கைகள், நான்கு நிமிடமாவது ஆங்கிலத்தில் உரையாட வல்லவர்களா என்றால் அதுவும் இல்லை !


மடலாட்டக் கலைஞர்கள் (CRICKET PLAYERS) விராட் கோலியும், உரோகித் சர்மாவும்  ஆளுக்கு 7 கோடி உருபா ஆண்டுச் சம்பளம் வாங்கிக் கொண்டு மடலாடுகிறார்கள். அதைக் காணத் தன் உழைப்பிலிருந்து அல்லது தன் தந்தையின் உழைப்பிலிருந்து 1500 முதல்  5000 உருபா வரை கொட்டிக் கொடுத்து நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டு  உள்ளே சென்று கரவொலி எழுப்பி ஆட்டத்தில் கட்டுண்டு மயங்கிப் போகிறார்கள் சுவைஞர்கள் (ரசிகர்கள்)  ! கோலியும், சர்மாவும் ஏனையோரும் பணம் வாங்காமல் நாட்டுக்காக விளையாடும் ஈகிகளா (தியாகிகளா) என்னசுவைஞர்கள் தம் பணத்தைக் கொட்டிக் கொடுக்க !


நுழைவுச் சீட்டு வாங்குவதற்காக இரவு 3-00 மணியிலிருந்து கண் விழித்து வரிசையில் காத்துக் கிடக்கும் இந்தச் சுவைஞர்கள், கோலியும் சர்மாவும் ஏனையோரும்  செல்வச் சீமான்களாக  உயர்ந்திட, நுழைவுச் சீட்டு என்ற பெயரில் பெருந்தொகையைச் செலவிடுவதே அறிவு மழுங்கிய செயல் ! அத்துடன் அமைதியடையாமல் இந்தச் சுவைஞர்கள் முகநூலுக்குள் நுழைந்து, செய்கின்ற அலம்பல் இருக்கிறதே, அதுவும் அறிவின்பாற் பட்ட செயலாக இல்லை !


விராட் கோலிக்கு நேற்றுவீழ்ச்சி” (OUT) கொடுத்தது  தப்பு மச்சான் ! கேனப்பயல் அந்த மூன்றாவது  நடுவர் தீர்ப்பு மகா மட்டம்”. ”பும்ராவுக்கு என்ன ஆயிற்று மாப்பிளே ! பந்தே போடத் தெரியவில்லையே !” என்று முகநூலில் அங்கலாய்ப்புச் செய்யும்அறிவாளிகள்  கூட்டம் முகநூலை வலிப்பற்று (ஆக்கிரமிப்பு) செய்து, அறிவுக் களஞ்சியமாகத் திகழவேண்டிய அதை நகராட்சிக் குப்பைக் கிடங்காக மாற்றி வரும் கொடுமையும் நடைபெறத்தான் செய்கிறது !


-----------------------------------------------------------------------------------------------------------

வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.:2051:சுறவம்(தை)08]
{22-01-2020}

-----------------------------------------------------------------------------------------------------------
     
 தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .