பக்கங்கள்

புதன், ஜனவரி 22, 2020

வரலாறு பேசுகிறது(19) பொ.வே.சோமசுந்தரனார் !

மறைந்த தமிழறிஞர்கள் பற்றிய தொடர் !


பொ.வே.சோமசுந்தரனார் !


தோற்றம்:

பொ.வே.சோமசுந்தரனார் 1909 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 -ஆம் நாள் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை  அடுத்த மேலப் பெருமழை என்னும் சிற்றூரில் பிறந்தார். தந்தை பெயர் பொ.வேலுத் தேவர். தாயார் சிவகாமி அம்மையார் !

மேலப்பெருமழை:

ஊர்திப் போக்குவரவு வசதி இல்லாத உள்ளடங்கிய சிற்றூர் மேலப்பெருமழை. கிழக்கே விளாங்காடு, தெற்கே இடும்பவனம், மேற்கே தில்லைவிளாகம் , வடக்கே இடையூர் சங்கேந்தி வடகிழக்கே குன்னலூர் என்று நாற்புறமும் சிற்றூர்களால் சூழப்பட்டு, மரைக்காக் கோரை ஆற்றின் வடகரையில் அமைந்திருக்கும் மேலப் பெருமழை, நூறு ஆண்டுகளுக்கு முன்பு எளிதில் அணுகமுடியாத சிற்றூர் !

கல்வி:

இத்தகைய மிகப் பின் தங்கிய சிற்றூரான மேலப் பெருமழையில் திண்ணைப் பள்ளியில் சேர்ந்து அடிப்படைக் கல்வியுடன் , ஆத்திச் சூடி, வெற்றிவேற்கை, கொன்றைவேந்தன், , அருணாச்சலப் புராணம் முதலிய நூல்களைச் சோமசுந்தரம் கற்றறிந்தார். குடும்பச் சூழல் காரணமாக, அப்பா இவரது படிப்பை நிறுத்திவிட்டு, வேளாண் பணிகளில் தனக்கு உதவும் படிக் கூறிவிட்டார் !

திண்ணைப் பள்ளி ஆசிரியரால் கவரப்பட்ட சோமசுந்தரம், மேற்கொண்டு படிக்க வேண்டும் என உறுதி பூண்டார். எனவே பகற்பொழுதில் தந்தையுடன் வேளாண் பணிகளில் ஈடுபட்ட அவர், இரவில் தமிழ் நூல்களைத் தேடிப் பிடித்துப்  படிக்கலானார். ! கோவில்கள், மடங்கள் முதலிய  இடங்களுக்குச் சென்று அங்குள்ள நூல்களைக் கேட்டு வாங்கிப்  படித்து வந்தார்  !

பள்ளிக் கல்வி:

சோமசுந்தரத்தின் பத்தாவது வயதில் அவரது தாயார் காலமானார். அதைத் தொடர்ந்து அவரது தந்தையார் மறுமணம் செய்து கொள்ளவே, தாய்மாமன் ஆதரவில் திருத்துறைப் பூண்டியில் உள்ள மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து பள்ளி இறுதி வகுப்பு வரைப் படித்தார் !

சர்க்கரைப் புலவரின் உதவி:

பள்ளி இறுதி வகுப்பு முடித்ததும், மேலப் பெருமழையிலிருந்து 5 கல் தொலைவில் உள்ள ஆலங்காடு என்னும் ஊருக்குச் சென்று அங்கிருந்த சர்க்கரைப் புலவர் என்பவரைச் சந்தித்து, தனது மேற்படிப்பு ஆர்வத்தை வெளிப்படுத்தி, தான் எழுதிய கவிதைகளையும் அவரிடம் காண்பித்தார் !

சர்க்கரைப் புலவர், சோமசுந்தரனின் கல்வி ஆர்வத்தைப் பார்த்து மகிழ்ந்து,  அவரைச் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்குச் சென்று, அங்கு தமிழாசிரியராகப் பணிபுரிந்து வந்த பூவராகன் பிள்ளையைச் சந்திக்குமாறு கூறி அவருக்கு ஒரு கடிதமும் கொடுத்தார் !

புலவர் பட்டப் படிப்பு:

பூவராகன் பிள்ளை உதவியுடன், சோமசுந்தரன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் புலவர் பட்டப் படிப்பில் சேர்ந்து பயின்றார். அங்கு பணிபுரிந்து வந்த விபுலானந்த அடிகள், சோழவந்தான் கந்தசாமியார், பொன் ஓதுவார், சோமசுந்தர பாரதியார், மு.அருணாசலம் பிள்ளை ஆகியோரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். அங்கு கிடைத்த படிப்பு உதவித் தொகையைக் கொண்டு புலவர் படிப்பை முடித்துத் தேர்ச்சி பெற்றார் !

திருவாசக உரை:

படிப்பு முடிந்து மேலப்பெருமழை திரும்பியதும், தனது ஆசிரியர் பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார் கூறியதற்கு இணங்க,  திருவாசகத்திற்கு உரை எழுதினார். மிகச் சிறப்பாக அமைந்துவிட்ட அந்த உரைக்குக் கிடைத்த வரவேற்பால், தொடர்ந்து அவர் எழுதத் தொடங்கினார் !

தி.தெ.சை.சி.நூ... தொடர்பு

திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியாளர் திரு.சுப்பையாப் பிள்ளை அவர்கள், ஏற்கனவே உரை எழுதப்பட்ட சங்க நூல்களுக்கு, இவரையே மேலும் விளக்கமாக உரை எழுதச் சொல்லி அந்நூல்களை வெளியிட்டார் !

உரையாசிரியர்:

இவ்வாறு, சங்க இலக்கியங்களான நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, பரிபாடல், ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, பெருங் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி, சிறு காப்பியங்களான உதயணகுமார காவியம், நீலகேசி உள்ளிட்ட ஏராளமான நூல்களுக்குச் சோமசுந்தரனார் உரை எழுதினார். பெருங்கதை, புறப் பொருள் வெண்பாமாலை, கல்லாடம், திருக்கோவையார், பட்டினத்தார் பாடல் ஆகியவைகளுக்கும் உரை எழுதி இருக்கிறார் ! 

படைப்புகள்:

நாடக நூல்களான செங்கோல், மானனீகை உள்பட பல நாடகங்களையும் எழுதினார். அஃதன்றி பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார் அவர்களின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட உரைநடை நூல்களையும் எழுதினார். இவை பின்னாளில் பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கப்பெற்றிருந்தன !

பெருமழைப் புலவர்:

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் 1008 –ஆவது நூல் வெளியீட்டுப் பொன் விழாவில் சோமசுந்தரனார் கேடயம் அளித்துப் போற்றிப் பெருமைப்படுத்தப்பட்டார் ! கவிஞர், உரைநடை ஆசிரியர், நாடகாசிரியர், எனப் பல்லாற்றானும் பெயரெடுத்த  சோமசுந்தரனார், ”பெருமழைப் புலவர்என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார் ! தமிழுக்கும், தமிழ் நூல்கள் வெளியீட்டுக்கும் இவரது பங்களிப்பு அளப்பரிது. சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் கண்டெடுத்த நல்முத்து பொ.வே.சோமசுந்தரனார் என்றால் அது மிகையாகாது !

மறைவு:

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த மாபெரும் தமிழறிஞரான பொ.வே.சோமசுந்தரனார்,  1972 –ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 3 –ஆம் நாள் அவரது 63 –ஆம் அகவையில் இப்பூவுலகிலிருந்து மறைந்தார் !  அவர் மறைந்தாலும், சங்க இலக்கியங்களுக்கு அவர் எழுதிய உரைகள் தமிழர்களின் மனதில் என்றும் நிலைத்து நிற்கும்என்பது திண்ணம் !

ஊர் மக்களின் நினைவேந்தல்:

பெருமழைப் புலவருக்கு, அவ்வூர் மக்களின் முயற்சியால் 5-9-2010 அன்று நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. தமிழறிஞர்கள் பலர் அதில் பங்கேற்று சோமசுந்தரனாருக்குப் புகழஞ்சலி செலுத்தினர். அத்துடன், மேலப்பெருமழை ஊராட்சியில் உள்ள நூலகத்திற்குப்பெருமழைப் புலவர் சோமசுந்தரனார் நூலகம்என்றும் பெயர் சூட்டப்பெற்றது !!

முடிவுரை:

தமிழுக்கு வளம் சேர்த்த புலவரின் குடும்பத்தினர், பிற்காலத்தில் வறுமையுற்று வாடிவந்தனர் என்பதைக் கேள்விப்பட்ட அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள், தந்தை பெரியார் பிறந்த நாளான 17-9-2010 அன்று உருபா 10 நூறாயிரம் (10 இலட்சம்) பரிவுத் தொகையாகத் தந்து அக்குடும்பத்தினருக்குக் கைகொடுத்தார் என்பது தமிழுணர்வாளர்கள் அனைவருக்கும் ஆறுதல் தரும் செய்தியாக அமைந்தது ! எத்துணையோ அறிஞர்கள் தமிழுக்குத் தொண்டு செய்து வரலாற்றில் நீங்காது நிலைத்து இருக்கின்றனர். நாம் ஏதும் செய்யாமல் வாளாவிருக்கிறோம் என்பதை எண்ணுகையில் வருத்தப் படாமல் இருக்க முடியவில்லை !


------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி..2051:சுறவம்:08]
{22-01-2020}

------------------------------------------------------------------------------------------------------------
     
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

-------------------------------------------------------------------------------------------------------------







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .