பக்கங்கள்

வியாழன், ஜனவரி 09, 2020

தமிழ் (27) மங்கிவரும் தமிழுணர்வு ! (03)

 இஃதென்ன வெட்கக் கேடான செயல் !



நாம் வாழும் மாநிலத்தின் பெயர் தமிழ்நாடு; நமது ஆட்சி மொழி தமிழ்; ஆனால் அனைத்து அதிகாரிகளின் பெயரும் அவர்களது அலுவலகங்களின் பெயரும் ஆங்கிலத்தில் வைக்கப்பெற்று பின்னர் தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்படுகிறது ! இஃதென்ன வெட்கக் கேடான செயல் !

நமது தாய்மொழி தமிழ்; நமது  இல்லத்தில் புழங்குவது  தமிழ்; ஆனால் நாம் எழுத்திலும் பேச்சிலும் இடையறாது பயன்படுத்துவது ஆங்கிலம் ! என்ன இழிவான துன்பியல் முரண்பாடு !

நாம் ஏன் தமிழுணர்வு இல்லாத பொட்டுப் பூச்சிகளாய்ப் புன்மைத் தேரைகளாய் வாழ்கிறோம் ? தாயை எவனாவது  பழித்துவிட்டால் அவன்  தலையைக்  கொய்திடத் துடிக்கிறோம்; ஆனால் தாய்மொழியாம் தமிழைச் சீரழிக்கின்ற திரைத்துறை, தொலைக்காட்சி ஊடகத் துறை, செய்தித் தாள் துறையினருக்கு விழா எடுத்து விருதுகள் வழங்கிப் புளகாங்கிதம் அடைகிறோம் ! இஃதென்ன நேர்மையற்ற பண்பாடு !

நம் தன்மான உணர்வு எங்கே போயிற்று ? தெருவில் கொட்டிக் கிடக்கும் குப்பை கூளங்களாக ஏன் இழிந்து போனோம் ? நம் நிலை தாழ்ந்து போனதற்குக் காரணம் என்ன ? அல்லது யார் காரணம் ? எப்போதாவது சிந்தித்து நம்மைச் சீர்திருத்திக் கொள்ள முயன்று இருக்கிறோமா ?

அரசின் கல்வித் திட்டமானது, இளநிலை அகவையினரையும் இடைநிலை அகவையினரையும் தாய்மொழியின் பால் ஆர்வம் இல்லாத அல்லுயிர்ப் பொருள்களாக (ஜடம்)  ஆக்கிவருகிறது  ! தாய்மொழிப் பற்றும் பெருமித உணர்வும் இல்லாத பீழைபிடித்த உருட்டுக் கற்களாக  உருவாக்கி வருகிறது !

தாய்ப்பால் எப்படி ஒரு குழந்தையை வலுவுள்ளதாக உருவாக்குகிறதோ, அதுபோன்றே தாய்மொழிக் கல்வியும் இளஞ் சிறார்களை, சிந்தனைத் திறன் மிக்க செம்மல்களாக உருவாக்குகிறது என்னும் அடிப்படை கூடத் தெரியாத அதிகாரிகளிடமும் ஆட்சியாளர்களிடம் கல்வித் துறை சிக்கிக் கொண்டுச்  சீரழிந்து வருகிறது !

தமிழ்நாடு என்று பெயர் வைத்துக் கொண்டு, தமிழ் தான் நமது ஆட்சி மொழி என்று சட்டம் இயற்றிக் கொண்டு , ஆங்கில வழிக் கல்வி அளிக்கும் பள்ளிகளைத் திறக்க இசைவளித்து ஆணை வழங்குதல் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது ! பண்பாட்டுக்குப் புறம்பானது !

ஆங்கிலவழிக் கல்வி அளிக்கும் பதின்மப் பள்ளிகளையும், நடுவணரசின் இடைநிலைக் கல்வி வாரியப் பாடத் திட்டப் பள்ளிகளையும் திறந்து நடத்தும் கல்வி வணிகர்களின் செயல் அதுவும் தமிழன் என்று கூறிக் கொண்டு நடமாடிவரும் பேராசைக்காரர்களின் பித்துக்கொளிச் செயல் - பெற்ற தாயைக் கொலை செய்வதற்கு ஒப்பானது !

ஏனிந்த சூழ்நிலை நிலவுகிறது ? தமிழர்களே தமிழ் வழிக் கல்விக்கு எதிராகச் செயல்படுவது ஏன் ? அரசும் அமைச்சர்களும் ஆங்கிலவழிக் கல்விக்கு உறுதுணையாகச் செயல்படுவது ஏன் ? அனைத்து வினாக்களுக்கும் விடை ஒன்று தான் ! தமிழர்களிடையே தமிழுணர்வு மங்கிப் போய்விட்டது ! தமிழைப் பற்றிய அக்கறை செத்துப் போய்விட்டது ! இந்நிலை எப்போது மாறும் ? எப்படி மாறும் ? இதற்கு என்ன செய்ய வேண்டும் ?

கலைக் கல்லூரிகளில் படிப்பவர்களில் பெரும்பான்மையோர், தமிழக அரசுப் பணியிலோ, தமிழக அரசின் ஆளுமையின் கீழ்ச் செயல்படும் மின்வாரியம், போக்கு வரத்துத் கழகம், நுகர் பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவு அமைப்புகள், மாநகராட்சி, நகராட்சி, பல்கலைக் கழகங்கள் போன்ற அமைப்புகளிலோ பணியில் அமர விரும்புபவர்கள். எஞ்சியோர் சொந்தத் தொழில் தொடங்கி  நடத்த விரும்புபவர்கள். இவர்களுக்குத் தமிழும் ஆங்கிலமும் மட்டும் தெரிந்தால் போதுமானது !

கணித ஆசிரியராக வருகின்ற  வாய்ப்பு சில ஆயிரம் பேருக்கு மட்டுமே  இருக்கையில் நூறாயிரக் கணக்கான மாணவர்களுக்கு (a + b) (a – b) = ? என்று கணிதப் பாடத்தை வலுக் கட்டாயமாகத் திணிப்பது  தவறான கொள்கையல்லவா  ?

சில ஆயிரம் பேர் மட்டுமே வேதியியல் அல்லது இயற்பியல் அல்லது பயிரியல் அல்லது விலங்கியல் ஆசிரியராக அமர்வு பெற முடியும் என்ற நிலையில், நூறாயிரக் கணக்கான  மாணவர்களை வேதியியலும், இயற்பியலும், பயிரியலும், விலங்கியலும் படிக்கச் சொல்லி வல்லுணர்வுடன் திணிப்பது அறிவுடைமை ஆகுமா ?

கணிதவியல், இயற்பியல், வேதியியல், வணிகவியல், உளவியல், அளவையியல், என்று என்னென்னவோ பாடங்களை எல்லாம் திணித்து, தமிழ் படிக்கும் பாட வேளைகளைக் குறைத்துவிட்ட தமிழக  அரசின் கல்விக் கொள்கையே, தமிழ் வளர்ச்சிக்குப் பெருங் கேடாக அமைந்துவிட்டது !  போதுமான அளவுக்கு முனைப்பாகவும், ஆழமாகவும், உள்வாங்கியும்  தமிழ் படிக்காததால், தமிழ் மீது பற்றும் குறைந்துவிட்டது; தமிழ் உணர்வும் அருகிப் போய்விட்டது !

மக்களிடையே தமிழ் உணர்வை ஊட்டி, தமிழ்ப் பற்றை  ஊதிப் பெருக்க வேண்டுமென்றால், இப்போதுள்ள கல்விக் கொள்கையை முற்றிலுமாக மாற்றி அமைக்க வேண்டும். தமிழும் ஆங்கிலமும் மட்டுமே 70 % மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். எஞ்சிய 30 மாணவர்கள் தாம் விரும்பும் பிற பாடங்களில் ஏதாவதொன்றை எடுத்துப் படிக்க வாய்ப்பளிக்க வேண்டும் !

ஒரு அரசு அலுவலகத்தில் பணி புரியத் தமிழும் ஆங்கிலமும் போதாதா ? ஒரு மாநகராட்சியில் பணிபுரிய இயற்பியலும், வேதியியலும், உளவியலும் தேவைதானா ?

ஆகவே, சில முதன்மையான சீர்திருத்தங்களை  தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் தமிழும் வளர்ச்சி பெறும்; தமிழுணர்வும் எழுச்சி பெறும். இதன் தொடர்பாகச் சில கருத்துருக்களை முன் வைக்கிறேன். அவை வருமாறு :-

(01) அரசுக் கலைக் கல்லூரிகளில் 75 % கல்லூரிகளைத் தமிழை முதன்மைப் பாடமாகவும், ஆங்கிலத்தைத் துணைப்பாடமாகவும் கற்றுத் தரும் வகையில் தமிழ்க் கல்லூரிகளாக மாற்ற வேண்டும். இக்கல்லூரிப் பாடத் திட்டத்தில் வேறு பாடப்பிரிவுகள் எதுவும் இருக்கலாகாது !

(02) தமிழை மட்டுமே சொல்லித் தரும்செந்தமிழ்க் கல்லூரிகள்  ஒவ்வொரு மாவட்டத்திலும்  மாவட்டத்திற்கு ஐந்து வீதம் அரசின் சார்பில் தொடங்கப்பட வேண்டும். இங்கு ஐந்து ஆண்டுகள் படித்துபுலவர்பட்டம் பெறுபவர் மட்டுமே பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியமர்த்தம் செய்யப்பட வேண்டும் !

(03) அரசின்செந்தமிழ்க் கல்லூரிகளில் ஐந்து ஆண்டு புலவர் பட்டப் படிப்புடன் மேலும் மூன்று ஆண்டுகள் படித்துபேராசிரியர்பட்டம் பெற்றவர் மட்டுமே கல்லூரிகளில் பேராசிரியர்களாக அமர்வு செய்யப்பட வேண்டும் !

(04) அரசின்செந்தமிழ்க் கல்லூரியில் படித்துப் பேராசிரியர் பட்டம் பெறுவதுடன், தமிழ் வளர்ச்சி பற்றி ஆய்வு செய்து செய்தித் தாளில் தொடர் கட்டுரை வெளியிட  வேண்டும். இதற்காக அரசு தனியாக ஒரு செய்தித் தாள் வெளியிட வேண்டும்.  அத்துடன் தமிழ் மரபுக்கேற்ப  100 புதிய சொற்களையும் புனைந்து  25 கல்வியாளர்கள் சூழ்ந்த திறந்த வெளி அரங்கில் அரங்கேற்றம் செய்ய வேண்டும். அவர்களது வினாக்களுக்கு விடையளித்துத் தேர்ச்சியும் பெறவேண்டும். இவர்களுக்கு மட்டுமே முனைவர் பட்டம் அளித்து பல்கலைக் கழகங்களில் தமிழ்ப் பேராசிரியர்களாகப் பனியமர்த்தம் செய்ய வேண்டும் !

(05) அரசின் தமிழ்க் கல்லூரி அல்லது செந்தமிழ்க் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர் மட்டுமே அரசு அலுவலகங்களில் பணி அமர்வு செய்யப்பட வேண்டும் !

(06) அனைத்துப் பாடங்களையும் ஆங்கில வழியில் சொல்லித் தரும் பதின்மப் பள்ளிகள் உள்பட எந்தப் பள்ளியாயினும் அவை தடை செய்யப் பெற வேண்டும்.

(07) விளம்பரப் பலகைகளில் பிறமொழிக் கலப்பற்ற தமிழ்ச் சொற்கள் மட்டுமே இருத்தல் வேண்டும் !

(08) தமிழ் நாட்டரசின் ஆட்சி மொழியாகத் தமிழ் அறிவிக்கப் பெற்றிருப்பதால், தமிழைச் சீரழிக்கும் வகையில் எழுதுதல் ஒறுப்புக் குரிய குற்றமாக அறிவிக்கப்பட வேண்டும் !

(09) திரைப்படத் துறை, தொலைக்காட்சித் துறை ஆகியவற்றின் படைப்புகள்  தமிழறிஞர்களைக் கொண்ட தணிக்கைக் குழுவின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு சான்று வழங்கும் நிலை வரவேண்டும் !

(10) வடமொழி வளர்ப்புக்காகவே உருவான கணியம் (சோதிடம்) தடை செய்யப்பட வேண்டும்.

(11) திருக்கோயில்கள் தமிழ்ப் புலவர்கள் ஐவர் அடங்கிய குழுவின் ஆளுகைக்கு உட்படுத்தப்படவேண்டும் !

இத்தகைய சீர்திருத்தங்களைத் தமிழக அரசு மேற்கொண்டால், தமிழ் நாட்டில் தமிழ் வளர்ச்சி மேலோங்கும்; மக்களிடையே தமிழுணர்வும் தழைத்தோங்கும்; தமிழ் தான் தமிழ் நாட்டரசின் ஆட்சி மொழி என்பதற்கு முழுமையான மதிப்பும் அப்போது தான் கிடைக்கும் !
-
---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ: 2050, சிலை (மார்கழி),21]
{06-01-2020}

-----------------------------------------------------------------------------------------------------------
              
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !

----------------------------------------------------------------------------------------------------------




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .