கொத்து (01) மலர் (019)
------------------------------------------------------------------------------------------------------------
தமிழரசு இதழுக்கு “செய்வோம் சிறந்த
பல தொண்டு” என்பதை ஈற்றடியாக
வைத்து எழுதி அனுப்பிய
வெண்பாக்கள் !
வெண்பாக்கள் !
(ஆண்டு 1970)
------------------------------------------------------------------------------------------------------------
கொய்வோம் அருங்கனியாம் அண்ணாவின் கருத்துரைகள்
பெய்வோம் பிழையறியா உள்ளமதில் --- ஆய்ந்துணர்ந்து
உய்வோம்; அவர்சென்ற உண்மைவழி நாம்தொடரச்
செய்வோம் சிறந்தபல தொண்டு !
மெய்மைப் பொருளுணர்ந்து மேதினியில் நாம்வாழ
பொய்மைச் சுழல்நீந்திப் போவதலால் --- வாய்மையெனும்
பாய்மம் பொங்கிவரப் பார்மிசையில் வாழ்வதுடன்
செய்வோம் சிறந்தபல தொண்டு !
ஏய்க்கும் நரிமதியில் எய்திடுவோம் கூரம்பு
மாய்க்கும் வறுமைப்பேய் மாண்டுவிழ --- நாய்க்குணவாய்ப்
பெய்யும் கழுநீரைப் பிச்சைகொளும் நிலைமாற
செய்வோம் சிறந்தபல தொண்டு !
காஞ்சித் தவப்புதல்வன் கண்மணியாம் அண்ணாபோல்
வாஞ்சை மிகக்கொண்டு வண்டமிழை --- நெஞ்சமதில்
ஆய்வோம்; உயிர்மூச்சாய் ஆக்கிடுவோம் மேதினியில்
செய்வோம் சிறந்தபல தொண்டு !
---------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம் முகநூல்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------