பக்கங்கள்

வெள்ளி, அக்டோபர் 04, 2019

இலக்கணம் (10) சுட்டுச் சொற்களின் முன் வல்லினம் மிகும் !

அங்குக் கண்டேன்அப்படிக் கேட்டேன்அந்தப் பையன் = சரி !


சந்திப் பிழைகளைப் பற்றியும் சென்ற அதிகாரத்தில் குறிப்பிட்டிருந்தேன். ஒரு சொல்லுடன் மற்றொரு சொல் சேரும்போது இடையில் புது எழுத்துத் தோன்றுவது சந்தி (-டு) கொத்தி + தின்றது = கொத்தித் தின்றது).  இன்னொரு வகைச்சந்தியில், இடையில் எழுத்துகள் உருமாறும். (-டு) முன் + பிறப்பு + முற் பிறப்பு)  இவ்விரண்டில், முதல் வகைச் சந்திகளில் பிழை நேராமல் காத்துக்கொள்வது இன்றியமையாதது.

இரண்டாவது வகைச் சந்திகளில் இடையில் மாற்றம் செய்யாமல் எழுதுவதால் குறையில்லை. (முன் + பிறப்பு = முற்பிறப்பு, இதை முன்பிறப்பு என்றும் எழுதலாம்) இதுவே தமிழறிஞர்கள் பலரின் கருத்து. இஃது அவர்கள் கையாளும் முறையும் ஆகும்.

------------------------- முதல்வகை-------------------

.........பிழை..........................................திருத்தம்...................

-------------------------------------------------------------------------------------

கைபட........................................கைப்பட
அதை கொடுத்தேன்............அதைக் கொடுத்தேன்
மிக பொருத்தம்......................மிகப் பொருத்தம்
இதற்கு தேவை........................இதற்குத் தேவை
நாளைக்கு செல்வோம்........நாளைக்குச் செல்வோம்  
மர பெயர்..................................மரப் பெயர்
சிரா பள்ளி................................சிராப் பள்ளி
மதுரை கல்லூரி.....................மதுரைக் கல்லூரி
தமிழ் பணி மன்றம்...............தமிழ்ப் பணி மன்றம்
வாழ்த்தி சென்றார்................வாழ்த்திச் சென்றார்
கனா கண்டேன்......................கனாக் கண்டேன்
ஆற்று படை.............................ஆற்றுப் படை
உர தொட்டி...............................உரத் தொட்டி

--------------------------------------------------------------------------------------

மேற்கண்ட சொற்களிலும், இவை போன்றவற்றிலும் இடையில்க், “ச்”,”த்”, “ப்”, இவ்வெழுத்துகள் இடம் பெறவில்லையானால்  ஓசை இழுக்கும்.  சொல்லிப் பாருங்கள்,  உங்களுக்கே தெரியும்.   எனவே, இத்தகைய சந்திப் பிழைகள் நேராமல் கவனித்துக் கொள்ள வேண்டும்.  

அங்கு, இங்கு, எங்கு;
அப்படி, இப்படி, எப்படி;
அந்த, இந்த, எந்த;

இச்சொற்களுக்கு முன்னே ( அதாவது இச்சொல்லை அடுத்து ) வருமொழி முதலில் வரும் எழுத்து ( வருகின்ற சொல்லின் முதலெழுத்து ) வல்லினம் ஆயின் ( , , , , , ), மிகும். அங்குக் கண்டேன், அப்படிக் கேட்டேன், அந்தப் பையன், இவ்வாறு. (வல்லினத்தில்”, “”, ””, “ஆகிய நான்கு மட்டுமே ஒரு சொல்லில் முதல் எழுத்தாக வரும். “”, “இரண்டும் அவ்வாறு வராது,.

(டப்பா, டமாரம், டபேதார், டபாய்த்தல், டிமிக்கி, டூ விடுதல், டெங்கு சுரம், டேரா, டேவணித் தொகை, டேக்கா கொடுத்தல்,  றெக்கை, றெண்டு, போன்றவை தமிழ்ச் சொல் அன்று என்பது இப்போது உங்களுக்கு நன்கு விளங்கும்)

-------------------------------------------------------------------------------------

அங்கு + காண் = அங்குக் காண் !
அங்கு + செல் = அங்குச் செல் !
அங்கு + தருக = அங்குத் தருக !
அங்கு + போ = அங்குப் போ !
இங்கு + கவிழ் = இங்குக் கவிழ் !
இங்கு + சாப்பிடு = இங்குச் சாப்பிடு !
இங்கு + தாங்கு = இங்குத் தாங்கு !
இங்கு + பார் = இங்குப் பார் !
அப்படி + கொடு = அப்படிக் கொடு !
இப்படி + பார் = இப்படிப் பார் !
அந்த + கிண்ணம் = அந்தக் கிண்ணம் !
எந்த + படம் = எந்தப் படம் ?


-----------------------------------------------------------------------------------------------------------

(ஆட்சிச் சொற் காவலர் கீ.இராமலிங்கனார் எழுதிய
தமிழில் எழுதுவோம்” 
என்னும் நூலிலிருந்து எடுக்கப்பெற்ற ஒரு பகுதி)

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்.
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,கடகம்,30]
{15-08-2019}

----------------------------------------------------------------------------------------------------------
     
 ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

----------------------------------------------------------------------------------------------------------



இலக்கணம் (09) எனது, என்னுடைய, என்- எது சரி ?

எனது நூல்கள்” என்று எழுதுகிறோம்.  இது தவறு !


உச்சரிப்புக் குறைபடாமல், திருத்தமாகத் தமிழைப் பேசும் பழக்கம், நமக்குக் குன்றிவிட்டிருக்கிறது.  அதற்குச் சில காரணங்கள் உண்டு.  அவற்றில் முக்கியமானது, பிறமொழிகளின் வரவும், நடமாட்டமுமே ஆகும்.  அவற்றின் விளைவாகத் தமிழை, அம்மொழிக்கு இயல்பாக அமைந்த ஒலியுடன் பேசமாட்டாத நிலைக்கு இழிந்துவிட்டிருக்கிறோம் !  

தமிழகத்தின் தென் பகுதிக்குச் செல்லச் செல்ல, உச்சரிப்பு சிறிது இயல்பாக இருப்பதைக் காண்கிறோமாயினும், தென்கோடியிலும் இன்னமும், தமிழ் பேசுவதில் குறைபாடுகள் இல்லாமல் இல்லை.  திருத்தமாகப் பேசத் தவறுவதால், அக்குறை  எழுத்திலும் புகுந்து விடுகிறது !

இன்னொரு பெரிய காரணம் நமது விழிப்பின்மையே ஆகும். உச்சரிக்கும் போது வழு (பிழை) இல்லாமல் உச்சரித்துவிட்டு, எழுதும்போது மட்டும் உச்சரிக்கின்றபடியே எழுதவேண்டுமே என்னும் கவனமே நமக்கு  இருப்பது  இல்லை !

எனக் கூறினேன்என்று திருத்தமாக உச்சரித்துவிட்டு, வரையும் போது மட்டும், “க்எழுத்தை இடையில் இடாமல், “என-கூறினேன்என்று வரைந்து விடுகிறோம். இப்படியேதிருப்பெயர்”, “திருபெயர்ஆகிவிடுகிறது. “அறக்கொடை”, “அறகொடைஎன எழுதப்படுகிறது. இங்ஙனே இது போன்ற பிறவும் !

மாடுகள் வந்ததுஎனப் பேசவும் செய்கிறோம்; எழுதியும் விடுகிறோம். “மாடுகள்பன்மை ஆயிற்றே, அச் சொல்லுக்கு ஏற்ற வினைச் சொல்வந்தனஎன்றல்லவோ இருக்க வேண்டும், என்று சிறிது உன்னிப்போமானால், ஒருமை பன்மை பிழைகளே நேரா !

ஒருமை பன்மை பிழைகளில் சில நுணுக்கங்கள் சென்ற இயலில் குறிப்பிடப் பெற்றன.  இரண்டொன்று ஈண்டுக் கூறினால் சாலும் !

எனது நூல்கள்என்று எழுதுகிறோம்.  இது தவறு. ”எனது என்னும் சொல்எனக்கு உரிய அஃறிணைப் பொருள் (உயிரற்ற பொருள்கள்) ஒன்றைக் குறிக்கிறது. “எனது நூல் என் + அது + நூல் என்பது விரிவான வடிவம். எனக்கு உரிய  ஒன்றுக்கு மேற்பட்ட நூல்களைக் குறிக்க வேண்டுமானால்என்னுடைய நூல்கள்என்று எழுத வேண்டும்.  இதனைச் சுருக்கிஎன் நூல்கள்என்போம் !

அப்படியேஎனது நூல்என்பதையும் சுருக்கமாகஎன் நூல்என்போம். ”என்என்னும் சொல்நூல்  என்னும் சொல்லுக்கு முன் வரும்போதுஎனதுஎன்றும், “நூல்கள்என்னும் சொல்லுக்கு முன் வரும் போதுஎன்னுடையஎன்றும் பொருளாகும் !



[ எனக்குரிய நூல்  ஒன்று மட்டும் (SINGULAR)  எனில், “எனது நூல்என்றும், பல (PLURAL) எனில்என்னுடைய நூல்கள்என்றும் குறிப்பிட வேண்டும். இங்கு இரண்டையும் சுருக்கி :என் நூல்”, “என் நூல்கள்என்றே குறிப்பிடலாம் ]

அடி முடி இதுவென உணர்த்தினார்என்பது பிழை. “அடி முடி இவையெனஎன்று இருக்க வேண்டும்.  எனது நண்பர்கள்என்று எழுதுவதில் இரண்டு பிழைகள் இருக்கின்றன.  ஒன்று, “நண்பர்கள்என்னும் பன்மைக்குஎன் அதுஎன்னும் ஒருமை அடைமொழியை இடுகின்ற பிழை.  மற்றொன்றுஅதுஅஃறிணை (உயிரற்ற) பொருளைக் குறிக்கும் சொல்.  நண்பர்கள்உயர்திணைப் (உயிருள்ள) பெயர்.  எனவேதிணைப் பிழையும் நேர்கிறது !


[ உயர்திணைப் பெயர்கள் வருகையில்எனதுஎன்று சொல்லவே கூடாது. “என்என்று மட்டுமே சொல்ல வேண்டும் ]

எனது தந்தை”, “எனது அன்னை”, என்பவற்றிலும் இத் திணைப் பிழை இருப்பதை அறியலாம். “என் தந்தை”, “என் அன்னைஎன்று எழுத வேண்டும். இவற்றில்என்என்னும் சொல். “எனக்குஎன்னும் சொல்லின் சுருக்கம்.  எனக்குத் தந்தை”, “எனக்கு அன்னைஎன்பவற்றையேஎன் தந்தை”, “என் அன்னைஎன்கிறோம் !

-----------------------------------------------------------------------------------------------------------

(ஆட்சிச் சொற் காவலர் கீ.இராமலிங்கனார் எழுதிய
தமிழில் எழுதுவோம்” 
என்னும் நூலிலிருந்து எடுக்கப்பெற்ற ஒரு பகுதி)

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்.
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,கடகம்,29]
{14-08-2019}

------------------------------------------------------------------------------------------------------------
    
  ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !

------------------------------------------------------------------------------------------------------------

இலக்கணம் (08) அலி - அளி; பால் வழு, மரபு வழு !

பால் வேறுபாடு, “ல” “ள” வேறுபாடு

               மரபு வழுச் சொற்கள்      

     

    ஆண்பால்....................... பெண்பால்
----------------------------------------------------------

     அச்சன்............................= அச்சி
     அப்பன்............................=. அம்மை
     அமைச்சன்...................= அமைச்சி
     அம்மான்........................= அத்தை
     ஆடவன்..........................= பெண்டு
     உழவன்...........................= உழத்தி
     ஊமையன்.....................= ஊமைச்சி
     எம்பி (என் தம்பி).........= எங்கை (என் தங்கை)
     ஒருவன்............................= ஒருத்தி
     கடுவன்............................= மந்தி
     கடா....................................= கிடாரி
     கலை (மான்)..................= பிணை
     களிறு (யானை)...........= பிடி
     காளை..............................= பசு
     கூனன்..............................= கூனி
     சிவன்................................= சிவை
     சிறுக்கன்.........................= சிறுக்கி
     சிறுவன்............................= சிறுமி
     சிற்றப்பன்.......................= சிற்றன்னை
     சேங்கன்று.......................= கிடாரி
     சேவல்................................= பெட்டை
     தமையன்.........................= தமக்கை
     தனயன்.............................= தனயை
     தனவான்..........................= தனவந்தி
     குட்டையன்.....................= குட்டைச்சி
     கூகை (ஆந்தை)............= போத்து
     கொழுந்தன்....................= கொழுந்தி
     சீமான்................................= சீமாட்டி
     திருமால்...........................= திருமகள்
     திருவாளன்......................= திருவாட்டி
     தேவன்..............................= தேவி
     நண்பன்...........................= நண்பி
     நான்முகன்.....................= கலைமகள்
     பண்டிதன்.......................= பண்டிதை
     பிரான்...............................= பிராட்டி
     புதல்வன்..........................= புதல்வி
     புலவன்.............................= புலத்தி
     பெருமான்.......................= பெருமாட்டி
     பேரன்................................= பேத்தி
     பொன்னன்.....................= பொன்னி
     மணவாளன்...................= மணவாட்டி
     மணாளன்.......................= மணாட்டி
     மாணாக்கன்.................= மாணாக்கி
     முடவன்...........................= முடத்தி
     மூதாளன்........................= மூதாட்டி
     மூத்தான்........................= மூத்தாள்
     வீரன்................................= வீரி
     வேளாளன்.....................= வேளாட்டி

      
          லகர, ளகரச் சொற்களின் வேறுபாடு

     அலி.................................= பேடு
     அளி................................= கொடு
     ஒலி................................= சப்தம்
     ஒளி................................= வெளிச்சம்
     கலி.................................= கடல்
     களி.................................= ஒரு உணவு
     கூலி...............................= சம்பளம்
     கூளி...............................= பேய்
     சலி.................................= சல்லடையால் பிரி
     சளி.................................= கோழை
     தாலி..............................= மாங்கல்யம்
     தாளி..............................= மணமூட்டு
     துலி................................= பெண் ஆமை
     துளி................................= திவலை
     நலி.................................= இளைப்புறு
     நளி.................................= குளிர்ச்சி
     புலி.................................= வரிமா
     புளி.................................= புளியமரக் கனி
     பொலி............................= தானியக் குவியல்
     பொளி............................= உளியாலிட்ட துளை
     வலி.................................= துன்பம்
     வளி.................................= காற்று
     வாலி..............................= வாலுள்ளவன்
     வாளி..............................= நீர்க் கலன்

  மரபு வழுச் சொற்கள்
       தவறு........................................சரி
      குதிரைக்கன்று................=.குதிரைக்குட்டி
      யானைப்பணியன்.........= யானைப்பாகன்
      பசுக்குட்டி..........................= பசுங்கன்று
      தென்னங்கன்று..............= தென்னம்பிள்ளை
      வேப்பஞ்செடி...................= வேப்பங்கன்று
      பனம்பிஞ்சு.......................= பனங்குரும்பை
      தென்னம்பிஞ்சு..............= தென்னங்குரும்பை
      புளியங்குரும்பை..........= புளியம்பிஞ்சு
      மாந்தழை..........................= மாவிலை
      பனையிலை.....................= பனையோலை
      குருவிக்குட்டி...................= குருவிக்குஞ்சு
      கீரிக்குஞ்சு........................= கீரிப்பிள்ளை
      நாய்க்கன்று.....................= நாய்க்குட்டி
      மான்குட்டி........................= மான்கன்று
      யானைச் சாணம்..........= யானை இலத்தி
      எருமை இலத்தி..............= எருமைச் சாணம்
      ஆட்டுச் சாணம்.............= ஆட்டுப் பிழுக்கை
      கழுதைச் சாணம்.........= கழுதை விட்டை

----------------------------------------------------------------------------------------------------------
                            
                                                          ஆக்கம் + இடுகை
                                                       வை.வேதரெத்தினம்,
                                                                ஆட்சியர்,
                                                       தமிழ்ப் பணிமன்றம்,
                                                               {29-12-2018}

----------------------------------------------------------------------------------------------------
  
“தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !

----------------------------------------------------------------------------------------------------