பக்கங்கள்

வியாழன், டிசம்பர் 12, 2019

சிந்தனை செய் மனமே (55) ஆட்சிமுறையில் சீர்திருத்தம் தேவை !

மக்களைத் தேடிப் போக வேண்டிய அதிகாரிகள், நான்கு சுவர்களுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள் !



நடுவணரசு, மாநில அரசு என்னும் இரட்டை ஆளுமை முறை (GOVERNANCE) நம் நாட்டில் நடைமுறையில் உள்ளது ! இதில் மாநில அரசின் ஆளுமை முறை (GOVERNANCE) பற்றிச் சுருக்கமாக ஆய்வு செய்வோம் !

மாநில அளவில் ஒரு அமைச்சரவை (CABINET), கொள்கை முடிவுகளை எடுக்கிறது. அம் முடிவுகளைச் செயல்படுத்த ஒவ்வொரு அமைச்சரின் தலைமையின் கீழும் தனி அமைச்சகம் ஒரு செயலர் (SECRETARY) தலைமையில் இயங்குகிறது. ஒவ்வொரு துறைக்கும் தனித் தனிச் செயலர் என சென்னைத் தலைமைச் செயலகத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட செயலகங்கள் (DEPARTMENT-WISE SECRETARIATES) இயங்கி வருகின்றன !

அந்தச் செயலருக்கு உதவியாக சிறப்புச் செயலர், கூடுதல் செயலர், ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட  இணைச் செயலர்கள், பல துணைச் செயலர்கள், பல உதவிச் செயலர்கள், பல சார்புச் செயலர்கள், பிரிவு அலுவலர்கள் பலர்  என ஒரு பெரிய அதிகாரிகள் கூட்டமே, தலைமைச் செயலகத்தில் உள்ளது. மக்களுக்கும் இவர்களுக்கும் எவ்வித நேரடித் தொடர்பு கிடையாது !

செயலருக்கு அடுத்த நிலையில், மாநில அளவில், ஒவ்வொரு துறைக்கும் ஒரு இயக்ககம் (DIRECTORATE) பெரும்பாலும் சென்னையைத் தலைமை இடமாகக் கொண்டே இயங்கி வருகிறது. ஒரு இயக்குநர் தலைமையில் இயங்கி வரும் இவ்வலுவலகத்தில், அவருக்கு உதவியாக கூடுதல் இயக்குநர், ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட இணை இயக்குநர்கள், பல துணை இயக்குநர்கள், பல உதவி இயக்குநர்கள், பல கண்காணிப்பாளர்கள்  என ஒரு பெரும் அதிகாரிகள் கூட்டமே அங்கு இருக்கிறது. இவர்களுக்கும் மக்களுக்கும் எவ்வித நேரடித் தொடர்பும் கிடையாது !

மாநில அளவில் பெரிய அதிகாரிகள் கூட்டத்துடன் இயங்கி வரும் இயக்குநரகம் எனப்படும் இயக்ககத்திற்குத் துணையாக மண்டல அளவில்  (REGIONAL LEVEL) ஒரு இணை இயக்குநர் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட அலுவலர்களுடன் மண்டல அலுவலகங்கள் (REGIONAL OFFICES) இயங்கி வருகின்றன. இத்தகைய மண்டல அலுவலகங்களின் எண்ணிக்கை, துறையைப் பொறுத்து ஐந்திலிருந்து, பத்து வரை அமைகின்றன. இந்த மண்டல அலுவலகங்களுக்கும், மக்களுக்கும் எவ்வித நேரடித் தொடர்பும் கிடையாது !

வருவாய்த் துறையைப் பொறுத்த வரை மாநில அளவில் இயக்குநர் அலுவலகம் என்று ஒன்று கிடையாது. ஆனால் மண்டல அலுவலகங்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒன்று என்ற அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இயங்கி வருகின்றன. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும், மக்களுக்கும் பெரும்பாலும் நேரடித் தொடர்பு கிடையாது !

இப்படி ஒவ்வொரு துறையிலும், மக்களுடன் தொடர்பே இல்லாத வகையில் ஒரு பெரிய அதிகாரிகள் கூட்டம் பணியில் இருந்து வருகிறது. அரசின் வரி வருவாயின் பெரும் பகுதி இந்த வெள்ளை யானைகளுக்காகவே செலவாகிப் போகிறது !

மக்களுடன் நேரடித் தொடர்பு உள்ள நிலையில், துறை வாரியாக மாவட்ட அளவில், கோட்ட அளவில், வட்ட அளவில் பல அலுவகங்கள் செயல்படுகின்றன ! ஊராண்மை அலுவலகம் (V.A.O.OFFICE), ஊராட்சி அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகம் போன்றவை அவற்றுள் மிக முதன்மையானவை !

வட்ட வழங்கல் அலுவலகம், வேளாண்மை விரிவாக்க அலுவலகம், பள்ளி ஆய்வாளர் அலுவலகம், பொதுப் பணித்துறை அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், துப்புரவு ஆய்வாளர் அலுவலகம், காவல் ஆய்வாளர் அலுவலகம், எனப் பல துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன ! தடுக்கி விழுந்தால், ஏதாவது ஒரு அரசு அலுவலகத்தின் மீது தான் விழ வேண்டி இருக்கும் என்ற அளவில் இவை மிகுதியான எண்ணிக்கையில் இயங்கி வருகின்றன !

இத்தகைய வட்டார அலுவலகங்கள் மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்க வேண்டும் அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும்  என்ற கருத்தில்தான் இவை உருவாக்கப்பட்டுச் செயல்பட்டு வருகின்றன ! ஆனால், இத்தகைய அலுவலகங்களும் மக்களிடமிருந்து விலகியே நிற்கின்றன ! இந்த அலுவலகங்களிலிருந்து எந்த அலுவலரும் மக்களை நோக்கிச் செல்வதில்லை; மாறாக மக்கள் தான் இந்த அலுவலகங்களை நோக்கிச் செல்ல வேண்டிய நிலை நிலவுகிறது !

வேணாண் துறை அலுவலர்கள், ஊர் ஊராகச் சென்று, வேளாண் நிலங்களை பார்வையிட்டு, வேளாண் பெருமக்களுக்குத் தக்க கருத்துரைகளைச் சொல்ல வேண்டும்; ஆனால் அவர்கள் தம் செயல்பாடுகளைத் தங்கள் அலுவலக அளவிலேயே சுருக்கிக் கொண்டுச் செயல்படுகிறார்கள் !

நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள், அன்றாடம் சாலைகளைப் பார்வையிட வேண்டும். பழுதான சாலைகளைச் செப்பனிடச் செய்ய வேண்டும். சாலையில் வலிப்பற்று (ஆக்கிரமிப்பு) இருந்தால் உடனடியாக அதை நீக்க வேண்டும். ஆனால் ஆண்டு முழுதும் வாளாவிருந்து விட்டு, ஒரு நாள் தும்பியூர்தியைக் (BOKLINE) கொண்டு கடைகளின் முன் மறைப்புகளையும், கட்டுமானங்களையும் இடித்துத் தள்ளுகின்றனர். 300 நாள் தூங்குவதும் 5 நாள் விழிப்பதும் தான் இவர்கள் வேலை போலும் ! நகராட்சி, மாநகராட்சி அலுவலர்களும் இதைத் தான் கடைப் பிடிக்கின்றனர் ! ஒவ்வொரு அரசுத் துறையிலும் இது தான் நடக்கிறது !

மக்களைத் தேடிப் போக வேண்டிய அதிகாரிகள், மாநகராட்சி, நகராட்சி, வட்டார அலுவலகங்களில் ஓடும் மின் விசிறிகளின் கீழ் மிசை நாற்காலிகளைத் தேய்த்துக் கொண்டிருக்கிறார்கள் ! மக்கள் இந்த அலுவலகங்களின் வாயிலில் தங்கள் வேலை வெட்டிகளை மறந்து விட்டு நாள்தோறும் காத்துக் கிடந்து நொந்து போகிறார்கள்  !

மக்கள் தரும் வரிப்பணத்தில், 75 % அளவுக்குத் தமது சம்பளம், வழிச் செலவுப் படி, வீட்டு வாடகைப் படி என்று பல வகைகளில் தாமே எடுத்துக் கொள்ளும் இந்த அதிகாரிகள் பட்டாளம் மக்கள் சேவையை மறந்து வழிதவறிப் போய்க் கொண்டிருக்கிறது ! இது தான் மக்களாட்சியின் கோட்பாடு போலும் ! இதற்காகத்தான் நம் முன்னோர்கள் நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்தார்கள் போலும் !

--------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.;2050,நளி (கார்த்திகை) 07]
{23-11-2019}

-------------------------------------------------------------------------------------------------------
                  தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில்  வெளியிடப் பெற்ற கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .