பக்கங்கள்

வெள்ளி, டிசம்பர் 20, 2019

வரலாறு பேசுகிறது (10) பாரதியார் !

மறைந்த தமிழறிஞர்கள் பற்றிய தொடர் !


பாரதியார் !


தோற்றம்:

பாரதியார் 1882 –ஆம் ஆண்டு திசம்பர்த் திங்கள் 11 –ஆம் நாள் (137 ஆண்டுகளுக்கு முன்பு) நெல்லை மாவட்டம், எட்டயபுரத்தில் பிறந்தார்.  தந்தை சின்னச்சாமி ஐயர். தாயார் இலட்சுமி அம்மாள். பாரதியாரின் இயற்பெயர் சுப்பிரமணியன்; செல்லப் பெயர் சுப்பையன் !

பாரதி

தனது 5 -ஆவது அகவையிலேயே (1887 -ஆம் ஆண்டு) தாயாரைப் பறிகொடுத்தார். பின்பு தந்தை சினச்சாமி ஐயர் (1889 –ஆம் ஆண்டில்) மறுமணம் செய்து கொண்டார். 5 -ஆவது அகவையிலேயே கவிதை புனையும் திறனைப் பெற்றிருந்த பாரதியாரை எட்டயபுரம் அரசவைப் புலவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தி, அவருக்குபாரதிஎன்று பட்டம் அளித்து மகிழ்ந்தனர் !

திருமணம்:

திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் 10-ஆம் வகுப்பு வரைப் பயின்றார். அவருக்கு 15 அகவை நடைபெறுகையில் 1897 –ஆம் ஆண்டு சூன் திங்களில் திருமணம் நடைபெற்றது. மனைவி பெயர் செல்லம்மாள். அடுத்த ஆண்டே (1898 –ஆம் ஆண்டு) பாரதியாரின் தந்தையார் மறைந்தார் !

காசியில் படிப்பு:

பெற்றோர் இருவரையுமே இளம் அகவையில்  இழந்துவிட்ட  பாரதியார், அத்தை குப்பம்மாளுடன் வசிக்கும் பொருட்டு 1898 –ஆம் ஆண்டு காசி மாநகருக்குச் சென்றார். அங்கு நான்கு ஆண்டுகள் தங்கியிருந்து கல்லூரியில் படித்தார். அத்துடன் சமற்கிருதம், இந்தி ஆகிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார் !

தலைப்பாகை:

காசியில் தங்கி இருக்கையில் தலைப்பாகை அணியும் பழக்கமும், மீசை வைத்துக் கொள்ளும் பழக்கமும் தோன்றின. நான்கு ஆண்டுகள் காசி மாநகர வாழ்க்கைக்குக் பின் 1903 இறுதியில் எட்டயபுரம் திரும்பினார். 1904 –ஆம் ஆண்டு மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் (22 வயதில்) தமிழாசிரியராகப் பணியேற்றார். ஆனால் அதே ஆண்டில் சென்னை வந்துசுதேசமித்திரன்செய்தித்தாளில் உதவி ஆசிரியராகப் பொறுப்பேற்றார் !

இதழாசிரியர்:

வங்கப் பிரிவினைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின் மூலம் 1905 –ஆம் ஆண்டு பாரதியாருக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டது. ”இந்தியாஎன்னும் கிழமை இதழின் பொறுப்பாசிரியராக (1906 –ஆம் ஆண்டு), தனது 24 –ஆம் அகவையில் பணியேற்றதன் மூலம், செய்தித் தாள் துறையில் அடியெடுத்து வைத்தார் !

அரசியல் ஈடுபாடு:

சூரத் நகரில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில், திலகர் தலைமையிலான தீவிரவாதிகளின் தொடர்பு ஏற்பட்டது. அரசியல் ஈடுபாடு தொற்றிக் கொண்டது. தனது கவிதைத் திறனுக்கு உயிர்ப்பூட்டும் வகையில் 1908 –ஆம் ஆண்டு (26 –ஆம் அகவையில்) “சுதேச கீதங்கள்என்னும் கவிதைத் தொகுதி நூலை வெளியிட்டார் !

புதுச்சேரி வாழ்க்கை:

இந்தியா செய்தித் தாள் ஆசிரியர் வெள்ளைக்கார அரசினரால் தளைப் படுத்தப்படுகிறார். இதைத் தொடர்ந்து பொறுப்பாசிரியர் பாரதியார், 1908 –ஆம் ஆண்டு பிரஞ்சு ஆட்சிப் பகுதியான புதுச்சேரிக்குத் தப்பிச் செல்கிறார். அங்கிருந்தபடியே வெள்ளையர் அரசுக்கு எதிராக அவரது அனல் பறக்கும் கட்டுரைகள் வெளியாகின்றன !

பாடல் தொகுதி வெளியீடு:

புதுச்சேரியில் இருந்த காலத்தில், பாரதியார், “ஜன்மபூமிகவிதைத் தொகுதியையும், “கனவு”, “சுயசரிதைபாடல்கள் அடங்கியமாதா மணி வாசகம்நூலையும் வெளியிட்டார். கீதையின் தமிழ் மொழி பெயர்ப்பு, “குயில்பாட்டு, “பாஞ்சாலி சபதம்ஆகியவற்றை  1912 –ஆம் ஆண்டு, தனது 30 –ஆம் அகவையில் பாரதியார் வெளியிட்டார் !

சிறைவாழ்வு:

புதுவையிலிருந்து வெளியேறுகையில் வெள்ளையர் அரசினால் 1918 –ஆம்  ஆண்டு தளைப்படுத்தடுகிறார். 34 நாள் சிறைவாழ்வுக்குப் பின் விடுதலையாகி செல்லம்மாளின் ஊரான கடையத்திற்குச் செல்கிறார். 1919 ஆம் ஆண்டு சென்னையில் இராசாசியின் வீட்டில் காந்தி அடிகளைச் சந்தித்து அவருடன் உரையாடுகிறார் !

புரட்சிக் கவிஞன்:

அரசியல் ஈடுபாடு மிகுதியானாலும். தமிழ் ஆர்வம் அவருள் கனன்று கொண்டே இருந்தது ! சமற்கிருதமே உயர்ந்த மொழி என்று சொல்லாலும் செயலாலும் மெய்ப்பித்து வரும் பார்ப்பன குலத்தில் பிறந்தாலும், ”யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்என்று 120 ஆண்டுகளுக்கு முன்பே எழுச்சிப் பாடலை இசைத்தவன் பாரதி ! “நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமும் இன்றி வஞ்சனை செய்வாரடிகிளியே ! வாய்ச்சொல்லில் வீர்ரடி !” என்று பாரதி அன்று பாடிய பாடல் இன்றும் நமக்குப் பொருந்துகிறது ! உறங்கிக் கிடந்த தமிழ்க் குமுகாயத்தை ஓங்கி முதுகில் தட்டி விழிப்படைய வைத்தவன் பாரதி ! இத்தகைய எழுஞாயிறு சென்னையில் தன் பணிகளைத் தொடர விரும்பியது தமிழுக்கு இழப்பாகிப் போயிற்று ! !

சென்னை வாழ்வு:

சுதேசமித்திரன் செய்தி இதழில் மீண்டும் உதவி ஆசிரியராக 1920 –ஆம் ஆண்டு சேர்கிறார். நிறையக் கட்டுரைகள் எழுதி விடுதலை உணர்வை வீறிட்டு எழச் செய்கிறார். திருவல்லிக் கேணிப் பகுதியில் குடியிருப்பு !

திருவல்லிக் கேணி கோயில் யானைக்கு வாழைப்பழம் தருகையில் 1921 -ஆம் ஆண்டு சூலைத் திங்களில் தூக்கி வீசப்பட்டு, குவளைக் கண்ணனால் காப்பாற்றப்படுகிறார். ஆனால் அதிர்ச்சியில் நோயுறுகிறார் !

மறைவு:

1921 –ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 12 –ஆம் நாள் நள்ளிரவு  1-30 மணிக்கு பாரதியாரின் உயிர் பிரிகிறது ! அகவை 39 நிறையாத ஆலமரம் வீழ்ந்தது !

இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பேபாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும் இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு, நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ ? சொல்வீர் !””  என்று புரட்சிப் பாடல் இசைத்த எழிற் கவிஞன் மறைந்து போனான் !

சூத்திரனுக்கு ஒரு நீதி ! – தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி ! சாத்திரம் சொல்லிடு மாயின்அது சாத்திரம் அன்று சதியெனக் கண்டோம்! “ என்று புரட்சிப் பூக்களை  யாத்த பூங்குயில் மறைந்து போனது !

ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கின்றோம் ஒருசொற் கேளீர் ! சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர் ! “ என்று நூறு ஆண்டுகளுக்கு முன்பே நம்மை பார்த்து விழிப்படையச் சொல்லி சாட்டையைச் சுழற்றிய மாமேதை மறைந்து போனான் !

முடிவுரை:

நாம் தான் இன்னும் விழிக்க வில்லை ! தமிழ் வழிக் கல்விக்கு மூடு விழா நடத்துகிறோம் ! ஆங்கிலவழிக் கல்விக்கு அரசாணை வெளியிடுகிறோம். பிற மொழி கலந்து பேசுவதைப் பெருமையாக நினைக்கிகிறோம் ! கடைகளின் பெயர்களில் தமிழுக்கு இடமளிக்க மறுக்கிறோம் ! கவலைப் படாமல்ஹைக்கூவுக்கு வெண்சாமரம் வீசுகிறோம் ! திருவள்ளுவர் ஆண்டையும், தூய தமிழ் மாதங்களையும் முகநூல் இடுகைகளில் எடுத்தாள வெட்கப்படுகிறோம் !

பார்ப்பன குலத்தில் பிறந்தாலும், பார்ப்பனீயக் கொள்கைகளை மறுத்துபார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே ! வெள்ளைப் பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே ! “ என்று புரட்சி செய்த பாரதியாரின் துணிச்சல் நமக்கு ஏன் இல்லாமற் போயிற்று ?


-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
{தி.:2050, சிலை (மார்கழி) 03]
{19-12-2019}

-----------------------------------------------------------------------------------------------------------
      தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
-----------------------------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .