கொத்து (01) மலர்(061)
பொங்கற் புதுநாளில் பொங்கி
வந்த
பூங்கவிதை !
(ஆண்டு 1967)
==============================================================
பைங்கிளியும் தேன்குயிலும்
பழகிவரும் சோலை !
நைந்துருகிப் பழச்சாறு
மணங்கமழும் சாலை !
கள்வடியும் முளரிமலர்
கண்மலரும் காலை !
புள்ளினங்கள் துயிலெழுந்துக்
குரல்கொடுக்கும் வேளை !
செங்கரும்பும் செந்நெல்லும்
சீர்மனையில் சூழும் !
செவ்வந்திப் பூங்கதலி
மஞ்சள்வளம் கூறும் !
இல்லமதில் எழில்பெருகும் !
இளங்கிளையர் கோலம் !
இருவிரலின் திறம்பகரும் !
இருள்விலகும் நேரம் !
மண்பானை அடுப்பிலிட்டு
மகிழ்ச்சியுடன் அன்னை !
மணிக்கரத்தால் கிளறிவிடப்
பொங்கிவரும் பொங்கல் ! ,
பொங்கலோ ! பொங்கலென
எங்குமொலி பொங்கும் !!
பூந்தமிழர் நெஞ்மெலாம்
இன்பமதில் துள்ளும் !
----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .