பக்கங்கள்

ஞாயிறு, நவம்பர் 17, 2019

ஐம்பெருங்காப்பியம் (01) வளையாபதி !

வளையாபதி - தமிழன் இழந்துவிட்ட காப்பியங்களுள் ஒன்று !



வளையாபதி என்பது ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றாகக் கருதப்படுவது. இக்காப்பியம் 19 –ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் இருந்திருக்கிறது.  பின்னர் எப்படியோ மறைந்து விட்டது ! இதனுடைய படி ஒன்றை திருவாவடுதுறை மடத்தில் கண்ணுற்றதாக தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்கள் ஒரு குறிப்பில் தெரிவித்திருக்கிறார். ஓலைச் சுவடியில் இருந்த இக்காப்பியத்தைப் பதிப்பிப்பதற்காக  மீண்டும் தேடிய போது, அஃது எங்கும் கிடைக்கவில்லை என்று வருத்தத்தோடு தெரிவித்திருக்கிறார் !

வளையாபதி காப்பிய ஆசிரியர் யார், எப்பொழுது இந்நூல் இயற்றப்பட்டது, காப்பியத் தலைவன் யார், இந்நூலின் கதை தான் என்ன என்பது உள்பட எதுவும் அறியமுடியவில்லை. இக்கேள்விகளுக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை !  எனினும் இக்காப்பியத்தின் சில செய்யுள்கள் மட்டும் பிற நூல்களின் மேற்கோள்களிலிருந்து கிடைத்திருக்கின்றன !

சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார், யாப்பருங்கல விருத்தி உரையாசிரியர், நச்சினார்க்கினியர், இளம்பூரணர் முதலானோர் இந்நூலின் பாடல்களை மேற்கோளாக எடுத்தாண்டுள்ளனர். இக்காப்பியத்தின் பாடல்களில் கிடைத்தவை எண்ணிக்கை எழுபத்து இரண்டு. இவை அறுபத்தாறு புறத்திரட்டுநூலில் தொகுக்கப் பெற்றுள்ளன ! இப்பாடல்களை நோக்குகையில், வளையாபதி ஒரு சமண சமய நூல் என்பது உறுதியாகிறது !

வளியாபதி கதை இன்னது தான் என்பது யாராலும் அறியப்படாத ஒன்று.  கிடைத்துள்ள 72 பாடல்களில் இருந்தும் இக்காப்பியத்தின் கதைப் போக்கை உணரமுடியவில்லை. எனினும்வளையாபதி கதைஎன்று ஒரு கதை சில மக்களிடையே வழக்கில் உள்ளது. இதற்கும், வளையாபதி பாடல் கருத்துகளுக்கும் தொடர்பு இல்லை என்பது பல அறிஞர்களின் கருத்து !

வளையாபதி கதை என்று சொல்லி வழக்கில் உள்ள கதை இது தான் ! நவகோடி நாராயணன் என்பவர் ஒரு வைர வாணிகன். அவர் தன் வணிக குலத்தில் ஒரு பெண்ணையும், வேறு ஒரு குலத்திலிருந்து இன்னொரு  பெண்ணையும் திருமணம் செய்தமையால், அவரை வணிகர்கள் தம்  குலத்தை விட்டுத் தள்ளி வைத்து விடுகின்றனர். இதனால் மனத் துன்பமுற்ற நாராயணன், வேறு வழியின்றித்  தான் திருமணம் செய்து கொண்ட  வேற்றுக் குலத்துப் பெண்ணைத் வீட்டை விட்டு வெளியேற்றி விடுகிறார் !

அவள், காளிதேவியிடம் சென்று முறையிடுகிறாள். தனக்கு மறுவாழ்வு கிடைக்கக் காளியை வேண்டுகிறாள். காளியின் அருளால் அவளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கிறது. அக்குழந்தை வளர்ந்து பெரியவனாகிப் புகார் நகர் வணிகர் அவையில் தன் தந்தை நாராயணனேஎன்று நிறுவுகிறான். காளிதேவியும் சான்று கூறி அதனை மெய்ப்பிக்கிறது. இதனால் குடும்பம் ஒன்றுசேர, அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர் !

தனது கருத்தின்மைக் காரணமாகத் தமிழ்க் குமுகாயம் இழந்த நூல்கள் எண்ணற்றவை; அவற்றுள் வளையாபதியும் ஒன்று !  கிட்டத் தட்ட 1800 ஆண்டு காலமாக உறங்கிக் கொண்டிருக்கும் தமிழ்க் குமுகாயம் வடமொழி, ஆங்கில மொழிக் கலப்பால் நெருக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் தமிழ் மொழியையாவது காப்பாற்றி வைத்துக் கொள்ளுமா அல்லது அதையும் இழக்கப் போகிறதா என்பதற்குக் காலம் தான் விடை சொல்ல வேண்டும் !

------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050, நளி (கார்த்திகை) 06
{22-11-2019}
-------------------------------------------------------------------------------------------------------
      தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .