பக்கங்கள்

ஞாயிறு, நவம்பர் 17, 2019

ஐம்பெருங்காப்பியம் (05) மணிமேகலை !

ஆடலரசி மாதவி - கோவலன் இணையரின் மகளான மணிமேகலையின் வரலாறு !


ஆடலரசி மாதவியுடன் கோவலன் சேர்ந்து வாழ்ந்ததன் விளைவாக, மாதவிக்குப் பெண்குழந்தை பிறக்கிறது. தான் வணங்கும் தெய்வமான மணிமேகலா தெய்வத்தின் நினைவாக, அக்குழந்தைக்குமணிமேகலைஎன்று பெயர் சூட்டுகிறான் கோவலன் !

மாதவியைக் கோவலன் பிரிந்து சென்று, மதுரையில் மடிந்து போன பின்பு துறவு வாழ்க்கையை மேற்கொள்ளும் மாதவி, மணிமேகலையையும் தன்னுடனேயே வைத்து வளர்த்து வருகிறாள் !

ஒருநாள் மணிமேகலை தன் தோழி சுதமதியுடன் மலர் கொய்வதற்காகப் பூங்காவனம் செல்கிறாள். அங்கு வரும் சோழ  இளவரசன் உதயகுமாரன் மணிமேகலையைப் பார்த்து, மனம் மயங்குகிறான். அவள் மீது காதல் கொண்டு அவளை அடைய முயல்கிறான் !

மணிமேகலா தெய்வம் அங்கு தோன்றி, அவனை எச்சரித்தது மட்டுமன்றி, மணிமேகலையைத் தூக்கிக் கொண்டு போய்  மணிபல்லவத்  தீவில்  சேர்க்கிறது !

மணிபல்லவத்தில் இருந்த புத்த பீடிகை ஒன்றின் முன் மணிமேகலை சென்று வணங்கி நின்றாள். அந்த புத்த பீடிகை மூலம் தன் முற்பிறப்பு பற்றிய செய்திகளை அறிந்து கொண்டாள். அப்போது அங்கு வந்த மணிமேகலா தெவ்வம், மனக்கவலை கொள்ளாதே மகளே என்று கூறி மாற்றுரு எய்துதல், அந்தரத்தில் திரிதல், பசியை ஒழித்தல் ஆகியன செய்யவல்ல  மந்திரங்களைச் சொல்லித் தந்தது !

அத்துடன், அங்கு வந்த தீபதிலகை என்னும் இன்னொரு தெய்வம், மாதவியிடம், அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி என்னும் அட்சய பாத்திரத்தை அளித்து மறைந்தது. அமுத சுரபியுடனும் தன் தாயாருடனும் காவிரிப் பூம்பட்டினம் திரும்பினாள் மணிமேகலை !

அமுதசுரபியானது, சிந்தாதேவி என்னும் கலைமகளால் ஆபுத்திரனுக்குத் தரப்பட்ட வரலாற்றை அறிந்த மணிமேகலை, அதைத் தன் கையிலே ஏந்தியவாறு பிச்சை ஏற்றற் பொருட்டு அவ்வூரின் பெருந்தெருவினை அடைந்தாள். அங்கு, அமுத சுரபியின் மேன்மையால், காயசண்டிகை என்னும் பெண்ணின் பெரும் பசி நோயைப் போக்கினாள் !

பின்னர் மணிமேகலை ஊரம்பலத்தை அடைந்தாள். அவள் அங்கு வந்துள்ளதை அறிந்த அரசகுமாரன், அவளைத் தேடி அங்கு வந்தான். மணிமேகலை அப்பொழுது விஞ்சையனின்மனைவியான காயசண்டிகை வடிவெடுத்து அரசகுமாரன் முன் வந்தாள். பின் அவனுடன் சோழ மன்னனின் மாளிகையை அடைந்தாள். அங்கு சோழனது சிறைக் கோட்டங்களை எல்லாம் அறக் கோட்டங்களாக மாற்றினாள் !

காயசண்டிகை வடிவில் இருந்த மணிமேகலையை, தன் மனைவி என்று கருதிய வஞ்ச விஞ்சையன், அவளை விட்டு அகலாது பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தான். அரசகுமாரன் தன் மனைவியை விட்டு அகலாது இருப்பதை அறிந்த விஞ்சையனான காஞ்சனன், அரசகுமாரனைத் தன் வாளால் வெட்டி வீழ்த்தினான் !

அரசகுமாரனின் துயர முடிவைக்கண்ட மணிமேகலை அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் துவண்டாள். எனினும் கந்திற்பாவை என்னும் தெய்வத்தின் நல்லுரைகளைக் கேட்டு மனம் அமைதி கொண்டாள். அரசகுமாரனின் மரிப்பைக் கேட்டு வெகுண்ட சோழ மன்னன் மணிமேகலையைச் சிறை செய்ய உத்தரவிட்டான். பின் மணிமேகலையின் தவ வலிமையை அறிந்த மன்னன், அவளை விடுவித்தான் !

மணிமேகலை அரசமாதேவிக்கு நல்ல அறநெறிகளை எடுத்து உரைத்து விட்டு, அங்கிருந்து நீங்கி ஆபுத்திரனின் நாட்டை அடைந்தாள். அங்கிருந்து ஆபுத்திரனோடு மீண்டும் மணிபல்லவம் சென்றடைந்தாள். அங்கு ஒரு தவமுனிவர்  வேடம் பூண்டு, தன் தாய்மாரோடு காஞ்சி மாநகரை அடைந்தாள் !

காஞ்சி மாநகரில் தன் பொய்யுருவினை நீக்கிவிட்டு அறவண அடிகள் என்னும் புத்த துறவியைச் சந்தித்து வணங்கினாள். பின்பு தன் வினைத் திறம் அற்றுப் போகும் பொருட்டு, தவ வாழ்வை மேற்கொண்டாள் !

இத்தகைய மங்கை நல்லாள் மணிமேகலையின் வரலாற்றை உரைக்கும் காப்பியம் சுட்டிக் காட்டும் ஒரு உண்மையைப் பாரீர் !

---------------------------------------------------------------------------------------

உற்றதை  உணரும்  உடலுயிர்  வாழ்வுழி;
மற்றைய உடம்பே மன்னுயிர் நீங்கிடின்
தடிந்தெரி  ஊட்டினும் தானுணரா  தெனின்
உடம்பிடைப் போனதொண்  றுண்டென  உணர்நீ.

---------------------------------------------------------------------------------------

{ இப்பாடலின் பொருள்:- உடலிடத்தே உயிர் வாழ்கின்ற காலத்து அந்த உடல் தனக்கு உறுகின்ற இன்பதுன்பங்களை உணருகின்றது ! உயிரானது அதனைவிட்டுப் போய்விட்டால், அந்த உடலை வெட்டி நெருப்பிலே இட்டாலும், அந்த உடல்  எதனையும் உணரமுடிவது இல்லை ! எனவே, இந்த உடம்பிலிருந்து வெளியேறிப் போனஉயிர்என்பது ஒன்று உண்டு என்பதை உணர்வாயாக !}

கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் எழுந்ததாகக் கருதப்படும் இவ்வரிய காப்பியத்தை கூலவாணிகன் சாத்தன் என்பவர், 30 காதைகளகப் பிரித்து, அவற்றை 30 பாடல்களாக வடித்துள்ளார். 30 பாடல்களுள் 27 பாடல்கள் நிலைமண்டில ஆசிரியப்பா வகையையும், 3 பாடல்கள் இணைக்குறள் ஆசிரியப்பா வகையையும் சார்ந்தவை ! மொத்தம் 30 பாடல்களால் 3826 பாடல் வரிகளில், மணிமேகலையின் வரலாற்றைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு அளித்துள்ள  கூலவாணிகன் சாத்தனாரின் புகழ் என்றென்றும் நிலைபெறுவதாக !

---------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.:2050, துலை(ஐப்பசி),30]
{16-11-2019}
--------------------------------------------------------------------------------------------------------
        தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
--------------------------------------------------------------------------------------------------------











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .