பக்கங்கள்

புதன், அக்டோபர் 02, 2019

சிந்தனை செய் மனமே (24) இலவசம் ! இலவசம் !! அனைத்தும் இலவசம் !!!

உழைக்கத் தெரியாத மக்கள்  குமுகாயத்தை உருவாக்காதீர் !



தமிழக அரசு எண்ணற்ற இலவசத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. பள்ளி மாணவர்கள்ஏழையானாலும் சரி, செல்வந்தர் வீட்டுப் பிள்ளையானாலும் சரிஅனைவருக்கும் இலவச ஈருருளி (CYCLE), இலவசச் சீருடைகள், இலவசப் பாடப் புத்தகங்கள், இலவசக் குறிப்பேடுகள், இலவசப் பேருந்துப் பயண அனுமதி, இலவச மதிய உணவு, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மேற்கண்ட இலவசங்களுடன் இலவச மடிக்கணினி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்தொழிற் பயிற்சிக் கல்லூரி  மாணவர்கள் அனைவருக்கும் இலவச மடிக்கணினி, இலவசப் பேருந்துப்பயண அனுமதி, இன்னும் பல இலவசங்கள் !

ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு இன்றி,  பச்சை நிற அட்டை வைத்திருந்தால் மாதம் 20 கிலோ அரிசி, பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை, பச்சரிசி, கரும்பு, வெல்லம் உள்ளிட்ட இலவசப் பொங்கற் பைகூடுதலாக கைச்செலவுக்கு உருபா 100, இந்த ஆண்டு மட்டும் உருபா 1000. மற்றும் சில இலவசங்கள் !.

தாலிக்குத் தங்கம், இலவசத் திருமணம், இலவச வளைகாப்பு, பிறக்கும் குழந்தைகளுக்கு வழலை (SOAP), மேற்பூச்சு எண்ணெய் (BODY OIL) முகப் பூச்சு மாவு (FACE POWDER)  உள்ளிட்ட இலவசப் பை, இன்னும் எவ்வளவோ இலவசத் திட்டங்கள் !

மின்சாரம் துய்ப்போர்க்கு முதல் 100 அலகு (UNIT) இலவச மின்சாரம், விவசாயிகள் அனைவருக்கும்ஏழை பணக்காரன் என்ற வேறு பாடு இன்றி - பயிர்த் தொழில் செய்ய மின் ஏற்றத்திற்கு (PUMP SET) இலவச மின்சாரம், விசைத் தறி வைத்திருப்போருக்கு குறிப்பிட்ட அளவு இலவச மின்சாரம், குடிசை வீடுகளுக்கு இலவச மின்சாரம், இன்னும் எவ்வளவோ இலவசத் திட்டங்கள் !

வாய்க்கொழுப்பாகப் பேசி குறிப்பிட்ட மதத்தினரை அல்லது சாதியினரைப் பகைத்துக் கொண்டு, உயிருக்கு அச்சம் என்று போலி நாடகம் ஆடும் அரசியல்வாதிகளுக்கு இலவசமாக 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவல் !

சட்ட மன்ற உறுப்பினர் ஆகிவிட்டால்அவர் கோடீசுவரனாக இருந்தாலும்அரசுப்பேருந்தில் குடும்பத்துடன் இலவசமாக பயணம் செய்ய அனுமதி, வேறு மாநிலங்களுக்குச் சென்று வர இருப்பூர்தியில் இலவசமாக பயணம் செய்ய  அனுமதி, இலவசத் தொலை பேசி வசதி, இன்னும் பலப்பல !

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் நாள்களில் அனைத்து உறுப்பினர்களுக்கும் தூக்கிச் செல்ல முடியாத அளவுக்கு பெட்டி பெட்டியாக இலவசப் பரிசுகள், பதவி போன பிறகு ஆயுள் முழுவதும் ஓய்வூதியம், அவருக்குப் பின் வாரிசுக்கு குடும்ப ஓய்வூதியம், இன்னும் இவை போன்று எத்தனையோ இலவசங்கள் !

தேர்தல் வாக்குறுதி என்ற பெயரில் இலவச வண்ணத் தொலைகாட்சிப் பெட்டி, இலவசப் பொறியுரல் (GRINDER), இலவச மின்னுழக்கி  (MIXIE), இலவச மின்விசிறி (TABLE FAN) இலவச வெள்ளாடு, இலவசக் கறவை மாடு, தொகுப்பு வீடு என்ற பெயரில் இலவச வீடு, மற்றும் இவை போன்ற இலவசத் திட்டங்கள் !

இரண்டு பெண் குழந்தைகளுடன் குழந்தைப் பேற்றினை முடித்துக் கொண்டோருக்கு, உருபா 20,000 பரிசுநிரந்தர வைப்பு நிதியாக ! குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொள்வோர்க்கு குறிப்பிட்ட அளவு பணம், இலவச வேட்டி, புடைவை, அரிசி மற்றும் பல இலவசத் திட்டங்கள் !

தமிழகத்தில் எந்த மூலையில் எந்தக் குடும்பத்தில் தற்கொலை நிகழ்ந்தாலும் உடனடியாக உருபா 2 இலட்சம் (இலவச) ஆறுதல் தொகை அரசு சார்பில் ! சாலை விபத்தில் உயிர் இழப்பு ஏற்பட்டால், உயிர் இழந்தோர் குடும்பத்திற்கு உருபா 2 இலட்சம் (இலவச) ஆறுதல் தொகை ! காவலர் இறந்துபோனால் உருபா 10 இலட்சம், படைத்துறையினர் இறந்து போனால் உருபா 20 இலட்சம் (இலவச) ஆறுதல் தொகை ! விளையாட்டு வீரர் பதக்கத்துடன் திரும்பினால் உருபா 50 இலட்சம், இன்னும் பற்பல இலவசங்கள் !

தமிழகத்தைப் பார்த்து நடுவணரசும் இலவசத் திட்டங்களை அறிவிக்கத் தொடங்கி விட்டது. ஏழைக் குடும்பங்களுக்கு இலவசமாக எரிவாயு இணைப்பு, இலவச வீடுகள், 2 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு உருபா 6000 ( இலவச) மானியம், நாடாளுமன்ற உறுப்பினர் இந்தியாவுக்குள் எங்கும் செல்லலாம் எதிலும் செல்லலாம் அனைத்தும் இலவசம், பதவி போன பின்பு ஓய்வூதியம், அவருக்குப் பின் வாரிசுக்குக் குடும்ப ஓய்வூதியம் என பல இலவசத் திட்டங்கள் !

இதையெல்லாம் பார்க்கும் ஒரு குடிமகன் கேட்கிறான் எங்களுக்கு இலவசமாக எப்போது மதுப்புட்டிகள் தரப் போகிறீர்கள்  ஞாயமான கேள்வி தானே ?

நாற்பது வயதாகியும் வேலை கிடைக்காத ஒரு வயோதிக வாலிபன் கேட்கிறான், ”ஐயா எனக்கு எப்போது இலவசமாக அரசு வேலை தரப்போகிறீர்கள்” !

விவரம் புரியாதவன் ! ஒவ்வொரு வேலைக்கும் விலை வைத்து வியாபாரம் செய்து வரும் அரசியல் வாதியின் அடிமடியிலேயே கை வைக்கப் பார்க்கிறான் ! ”உன்னைப் போன்ற இலட்சக் கணக்கான இளைஞர்களின் நன்கொடைக் காசில் தானே நாங்களும் வாழ்ந்து, அடுத்த நான்கு தலைமுறைகளுக்குச் சொத்தும் சேர்த்து வைக்கிறோம்; அதைக் கெடுக்கப் பார்க்கிறாயே, பாவி” ! என்று அரசியல் வாதிகள் திட்டுவது அவன் காதுகளில் விழவாப் போகிறது !

அணைக்கட்டுகள், கல்விக் கூடங்கள், நெடுஞ் சாலைகள், நீர்ப் பாசனத் திட்டங்கள், பல்நோக்கு மருத்துவ மனைகள், போக்கு வரத்து வசதி மேம்பாடு, வேலை வாய்ப்புப் பெருக்கம், சிறு, குறு தொழில்கள் வளர்ச்சி, வனவளப் பாதுகாப்பு, ஊரக வளர்ச்சி, குடிநீர் ஆதாரங்கள் பெருக்கம், இன்னும் இவை போன்ற வளர்ச்சித் திட்டங்களில் முதலீடு செய்து மக்களுக்குப் பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டிய மத்திய மாநில அரசுகள், மக்கள் தரும் வரிப் பணத்தை இலவசத் திட்டங்களின் வாயிலாக வாரி வாரி அள்ளிவிட்டு வீணடிப்பதற்குப் பெயர் தான் குடியாட்சிக் கோட்பாடோ ? இலவசங்களை அள்ளி வீசி மக்களை மயக்கி, அவர்களிடமிருந்து வாக்குரிமையை வலிந்து பறித்துக் கொள்ளும் அரசியல்வாதிகளின் அட்டூழியங்களுக்கு முடிவே வராதா ?

---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2050, சுறவம், 24.]
{07-02-2019}
----------------------------------------------------------------------------------------------------------
      ”தமிழ்ப் பணிமன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
----------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .