பக்கங்கள்

வியாழன், அக்டோபர் 03, 2019

சிந்தனை செய் மனமே (32) நீர்க்கோவை எப்படி ஏற்படுகிறது ?

மூக்குப் பாதையில்   நிகழும்  முனைப்பான  போர் ! 


08.58.காலை: அரைகுறையாக மூன்றாவது தளத்தைப் பெருக்கித் தள்ளிவிட்டு, “ அடி ! வாடி என் கப்பக் கிழங்கேஎன்று மெல்லிய குரலில் பாடிக் கொண்டு செந்தூக்கில் (LIFT) நுழைந்தான் சின்னையன். கப்பக் கிழங்கின் மீது அவனுக்கு இருந்த உற்சாகம் அவன் மூக்கிற்கு இல்லை; “அச்என்று தும்மி அகில இந்திய வானொலி போல் பாட்டிற்குத் தடை விதித்தது. “சனியன்என்று மூக்கைக் கடிந்து கொண்டுபாடாதே வாயைத் திறந்து..” என்று பாட்டைத் தொடர்ந்தான் !

மூக்கிற்குக் கடுங் கோபம். இந்த முறை இரண்டு தடவை தும்மி, அவனது பாட்டை வலிமையாக எதிர்த்தது. தும்மும் போது கை தானே உயர்ந்து மூக்கை மூடிக் கொண்டது. “சே ! என்ன துன்பம் ! ” என்று  அலுத்துக் கொண்டே “2” இலக்கமிட்ட தோட்டினை (BUTTON) ஒற்றை விரலால் அமுக்கி, கீழிறங்கினான் சின்னையன் !

08.59.காலை: வான்மதிக்கு அன்று அவசரம். தட்டச்சு செய்ய வேண்டிய கடிதங்கள் நிரம்ப இருந்தன. “என்ன செய்வாயோ தெரியாது ! நாளை காலை 11-00 மணிக்குள் கடிதங்கள் என் மிசைக்கு (TABLE) வந்தாக வேண்டும்என்று மேலாளர் நேற்று உறுமியிருந்தார். அதனால் இன்றுமாமியாரும் மருமகளும்தொடர் நாடகத்தைக் கூடப் பார்க்காமல் வீட்டிலிருந்து விரைந்து புறப்பட்டு வந்து விட்டாள். தோட்டினை (BUTTON) அமுக்கியதும் வெட்புலமான (VACANT) செந்தூக்கின் (LIFT) வாயிற்கதவு திறந்து கொண்டது. அவசரத்தில் “2” ஆம் இலக்கத் தோட்டைத் தொட்டவள், “சைஎன்று கடிந்து கொண்டு ஆட்காட்டி விரலால் “3” ஐத் தொட்டாள் !

காற்றில் அலைந்த முன் உச்சி முடியைக் காதுக்குப் பின் தள்ளி விட்டாள். செந்தூக்கின் காற்று மண்டலத்தில் சின்னையன் விட்டுப் போன கோடிக் கணக்கான நச்சுயிரிகளில் (RHINO VIRUS) காற்பங்கு வான்மதியின் மூக்கினுள் உள்ள துக்குணியூண்டு தசை மலையில் குடியேறின. இரண்டாவது குடியேற்றம் ஆள்காட்டி விரல் மூலம்  கண் வழியே நிகழ்ந்தது. புதிய விருந்தினர்கள் சுறுசுறுப்பாகத் தொண்டையை நோக்கி நகர்ந்தார்கள் !

09-05 காலை:  நீருக்குள் அசைகின்ற கடற் பாசி போல நிதானமாக மூக்கின் பாதையில் அசைந்து கொண்டிருந்த நுண்ணிய மயிரிழைத் திசுக்கள் (CELIA) சுறுசுறுப்பு அடைந்தன. விருந்தாளிகளைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ள முயன்றன. நிமிடத்துக்கு அறுநூறு வீச்சு கதிப்பில் (SPEED) பெருக்கித் தள்ளின. ஆனால் சேப்பாக்கம் மடலாட்ட (CRICKET) ஆர்வலர்கள் (FANS)  போல திமு திமுவென்று நுழைந்த எண்ணிக்கையில் மிகுந்திருந்த நச்சுயிரிகளை (RHINO VIRUS) அவர்களால் கட்டுப் படுத்த முடியவில்லை !

11-00 மு.: தடையை மீறிய விருந்தாளிகள் கட்டுப்பாடு இன்றி உலாவத் தொடங்கினார்கள். மூக்கின் மேற்புறப் படலத்தில் அமைந்திருந்த உயிரணுக்களைக் (CELLS) கண்டு காதல் கொண்டார்கள். ஒற்றை மனைவி நோன்பு  (ஏக பத்தினி விரதம்) கொண்ட ஒழுக்கமான காதல்.  வேறு எந்தவித உயிரணுக்களையும் (CELLS)  ஏறெடுத்துப் பார்க்காத காதல். நச்சுயிரியின் (RHINO VIRUS) இருபது முகங்களிலும் காமத்தைக் கண்ட உயிரணு (CELL)  விழித்துக் கொண்டது. இரு கைகளையும் வீசித் தன்னுள் அழைத்துக் கொண்டது. நச்சுயிரியின் (RHINO VIRUS) மேற் சட்டையைக் கழற்றிற்று. இந்தக் காதல் தான் தப்பாகிப் போயிற்று !

03-00 பி.: நச்சுயிரிகள் (RHINO VIRUS)  மெல்ல மெல்ல உயிரணுக்களின் (CELLS) பிறப்பு (உற்பத்தி) மையங்களை வலிந்து பற்றிக் கொண்டன !

09-00 இரவு:  மூக்கின் ஒன்பது இலட்சம் உயிரணுக்களிலும் (CELLS) முழுமையான வலிப்பற்று (ஆக்கிரமிப்பு). உயிரணுக்களின் வாலாயமான (ROUTINE) பணிகள் நிறுத்தப்பட்டன. பதிலாக நச்சுயிரிகளின் (RHINO VIRUS) கான்முளைகள் (சந்ததி) தழைக்க, ஆண்டகை ஊன்மக் காடி ( VIRILE NUCLIC ACID ) ஆக்கப் (தயாரிப்பு) பணி முனைப்பாக்கப்பட்டது !

02-30 இரவு: ஆண்டகை ஊன்மக் காடி ( VIRILE NUCLIC ACID ) ஆக்கம் (தயாரிப்பு)  போதிய அளவைத் தொட்டதும், உயிரணுக்கள் (CELLS)  மேற் சட்டைகளைத் தயாரிக்க உத்தரவாயின. ஒரு கான்முளை (வாரிசு) உருவாகிறது !

07-00 காலை: கான்முளைகள் (வாரிசுகள்) அணி வகுக்கப்பட்டன. ஒற்றையாக நுழைந்த நச்சுயிரிக்கு (RHINO VIRUS) ஒவ்வொரு உயிரணுவுக்கு  (CELLS)   உள்ளும் நூறு மைந்தர்கள் !

09-00 காலை: உள்ளே நுழைந்த 24 மணி நேரத்துக்குள் ஒன்று நூறாக, அந்த துரியோதனக் கூட்டம் உயிரணுக்களைப் (CELLS)  பிளந்து கொண்டு புறப்பட்டார்கள். ஒன்பது இலட்சம் உயிரணுக்களிலிருந்து (CELLS)  ஒன்பது கோடி நச்சுயிரிகள்.  காயம் அடைந்த உயிரணுக்கள் (CELLS)  வீர மரணம் அடைந்தன !

09-20 காலை அலுவலகத்திற்கு வரும்போதே தொண்டை கர கரவென்று இருப்பதை உணர்ந்தாள் வான்மதி. வழக்கமான  குளம்பிக்குப் (COFFEE)  பதில் தேநீர் (TEA) குடித்தால் என்ன ? என்று தோன்றியது. பையனைக்  கடைக்கு அனுப்பினாள். அவள் தொண்டையில்  பெரும்போர் நடந்து கொண்டிருந்தது. இருமலின் மூலம் வெளியே தள்ளப்பட்ட ஆயிரக் கணக்கான நச்சுயிரிகள் (RHINO VIRUS) சூரிய ஒளியில் வானுலகம் (சொர்க்கம்) போயின. தேநீர் வெள்ளத்தில் அடித்துக் கொண்டு செல்லப்பட்ட இன்னொரு ஆயிரம்,  வயிற்றில் காடிக்குப் (ACID)  பலியாயின. பதற்றத்துக்கு ஆளாகி அங்கும் இங்கும் தறிக்கெட்டு ஓடின. சில உள்நாக்கிலும் (TONSIL), அடிமூக்கிலும் (ADENOIDS) மோதிக் கொண்டபோது விழிப்பு மணி (ALARM)  அடித்தது.  காவலுக்குச் சுற்றிக் கொண்டிருந்த குருதி வெள்ளையணுக்கள் (LYMPHOCYTES) சுறு சுறுப்பாகி நச்சுயிரிகளைத் (RHINO VIRUS) தாக்கின. பலர்லிப்னோசைட்களின் தலைமைச் செயலகமானலிம்ரோட்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களின் போர்க் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால் ........ !

இரண்டாம் நாள்: இரண்டாவது தலைமுறை கான்முளைகள்  (வாரிசுகள்) – இந்த முறை தொள்ளாயிரம் கோடிபோன தலைமுறை போல் நூறு மடங்குகுருதி வெள்ளத்தில் புகுந்தார்கள். மூக்கில் இலட்சக் கணக்கான உயிரணுக்கள் (CELLS)  மரணமடைந்து குவிந்தன.  அவற்றை அகற்ற ஒரு நீர்மம் (LIQUID) சுரந்தது. வான்மதி மூக்கை உறிஞ்சிக் கொண்டு, ‘சளிப் பிடிக்கிறது போல் இருக்கிறதேஎன்று கவலைப் பட்டாள் !

மூன்றாம் நாள் கட்டுக் கடங்காத இனப்பெருக்கம் ! வான்மதியின் கண், மூக்கு எல்லாம் வெள்ளம்; தலைக் கனம்; உலர்ந்த தொண்டை !

நான்காம் நாள்: வியப்பூட்டும் நிகழ்வு நடந்தது. நச்சுயிரிகள் (RHINO VIRUS) சிவப்பு முக்கோணத்தைக் கடைப் பிடித்தன. இனப் பெருக்கத்துக்கு முற்றுப் புள்ளி. எப்படி இந்த மாயம் நிகழ்கிறது ? அது தான் அறிவியல் அறிஞர்களுக்கும் புரியவில்லை !

மனிதன் இன்னும் வெல்ல முடியாத அறைகூவல்களில் ஒன்று நீர்க்கோவை. நச்சுயிரி (RHINO VIRUS) சரியான கல்லுளி மங்கன். 130 பாகை வரை வெப்பத்தைத்  தாக்குப் பிடிக்கும். புவி ஈர்ப்பு ஆற்றலைப்போல இலட்சம் மடங்கு பெரிதான விசை கூட அதை நசுக்கிவிட முடியாது !

இதைத் தவிர ஆயிரம் உண்டங்கு சாதி !  அதனால் அம்மைக்கு அம்மைப் பால் போல நீர்க் கோவைக்கு ஒரு பால் (VACCINE) இயலாமற் போகிறது. நீங்கள் நீர்க் கோவைக்குச் சாப்பிடுகிற மருந்துகள் நச்சுயிரி நீக்கு மருந்து (ANTI-BIOTICS) உள்படஇந்த நச்சுயிரிகளை (RHINO VIRUS) ஒன்றும் அசைக்க முடியாது. இதர கூடுதல் இன்னல்களை வேண்டுமானால் சரி செய்யலாம் !

அலக்சாண்டர் பிளமிங் என்றொரு மனிதன்பூஞ்சகம்” (PENICILLIN) கண்டு பிடித்த போது உலகம் அல்லோலகல்லோலப் பட்டது. உலகத்தின் அனைத்துத்  துன்பங்களையும்பூஞ்சகம்” (PENICILLIN) பொடியாக்கிவிடும் என்று பெரும்பாலோருக்கு ஒரு அரக்க  நம்பிக்கை !

அலக்சாண்டர் பிளமிங் நோபல் பரிசைப் பெற்றுக் கொள்ளப் போகிற அன்று அவருக்கு அச்சுறுத்தும் வகையில் நீர்க்கோவை. பெயரைச் சொல்லி அழைத்ததும் எழுந்து மேடைக்குப் போவதற்குள் ஏகப்பட்ட அடுக்குத் தும்மல் போட்டார் பிளமிங். கூட்டத்தில் இருந்த ஒரு பெண் கேட்டாள், “இந்த பூஞ்சகம்” (PENICILLIN) நீர்க் கோவைக்கு ஒன்றும் வழி காட்டாதோ ?”. கூட்டம் சிரித்தது; பிளமிங் சிரித்தார்; நீர்க் கோவையும் தான் !

------------------------------------------------------------------------------------------------------------
நீர்க்கோவை (ஜலதோஷம்) தாக்குதலுக்கு ஆட்பட்டு, மூக்கு ஒழுகினால், கோணிப் பை (சணற் பை) (பாலித்தீன் பை அல்ல) ஒன்றை எடுத்து, அதற்குள் கால்களை விட்டு, இடுப்பு வரை உயர்த்திக் கொண்டு, படுத்து உறங்குங்கள். காலையில் பார்க்கும் போது நீர்க்கோவை சொல்லாமல் கொள்ளாமல் பக்கத்து ஊருக்குப் பறந்து போயிருக்கும் !
------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,மீனம்,09]
{23-03-2019}
------------------------------------------------------------------------------------------------------------
      ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .