பக்கங்கள்

சனி, அக்டோபர் 12, 2019

தமிழ் (21) புதிய சொல்லாக்கம் ! தவறான அணுகுமுறை !

அஃறிணைப் பொருள்களுக்கு ‘அன்’ விகுதிப் பெயர்கள் சூட்டுதல் தவறு !



தமிழில் புதிய சொற்களை உருவாக்கும் போது சில அடிப்படைக் கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அவை:- (01) செய்யப்பெறும் சொல், தமிழ்ச் சொல்லாக இருக்க வேண்டும். (02) பொருள் பொருத்தம் உடையதாக அமைய வேண்டும்.  (03) வடிவில் சிறியதாக இருக்க வேண்டும் (04) ஓசை நயம் உள்ளதாக விளங்க வேண்டும். (05) தமிழ் இலக்கண மரபுக்கு மாறானதாக இருத்தல் ஆகாது !

ஆனால் எந்த வரைமுறையும் இன்றி, குறிப்பாகச் சொல்லப்போனால், தமிழ் இலக்கண மரபுக்கு மாறானதாக, சிலர் புதிய சொற்களை உருவாக்கி அறிமுகப்படுத்துகிறார்கள். கீழ்க் கண்ட சொற்களைப் பாருங்கள் !

(01). (கரைப்பான்):- தண்ணீர் ஒரு நல்ல கரைப்பான் (SOLVENT) ஆகும் !

(02). (வடிப்பான்):- காப்பிப் பொடியை வடிப்பானில் (FILTER) இட்டுச் சிறிது வெந்நீர் சேர்த்து வைத்து விட்டால், அரைமணி நேரத்தில் நல்ல கசாயம் கிடைக்கும். !

(03) (தேய்ப்பான்):-,துருவை நீக்குவதற்கு நல்ல தேய்ப்பானைப் (SCRATCH BRUSH)  பயன்படுத் வேண்டும் !

(04) (அழிப்பான்):- எழுதியதில் பிழை ஏற்பட்டால், நல்ல அழிப்பான் (RUBBER) கொண்டு அதை அழித்துவிட  வேண்டும் !

(05) (தெளிப்பான்);- பூச்சி மருந்து தெளிப்பதற்குத் தெளிப்பான் (SPRAYER) கருவி பயன்படுகிறது !

(06). (துளைப்பான்):- சோளத்தில் தண்டு துளைப்பான் (STEM PIERCER) அதிக சேதத்தை ஏற்படுத்துகிறது !

இந்தச் சொற்றொடர்களில் கரைப்பான் (SOLVENT, வடிப்பான் (FILTER), தேய்ப்பான் (SCRATCH BRUSH), அழிப்பான் (RUBBER), தெளிப்பான் (SPRAYER, துளைப்பான் (PIERCER)  ஆகிய சொற்கள் சரியாகத் தானே பயன்படுத்தப் பட்டிருக்கின்றன என்று உங்களுக்குத் தோன்றலாம். இவற்றில் உள்ள பிழை நன்கு படித்தவர்களால் தான் செய்யப்படுகிறது. இவை எப்படிப் பிழையாகும்? பார்ப்போமா ?

சொல் இலக்கணத்தில் பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை என ஐந்து உறுப்புகள் உள்ளன. ”படித்தான்என்னும் சொல்லைப் பகுத்தால் படி + த் + த் +  ஆன்என்று பிரியும். இதில் படி = பகுதி; ஆன் = விகுதி; முதலாவதாக வரும்த்சந்தி; இரண்டாவதாக வரும்த்இடைநிலை. இந்நான்கனுள்விகுதிஎனப்படுவது பால் (GENDER) இடம் (PLACE), எண் (NUMBER) ஆகியவை  காட்டும் சொல் !

படித்தான்”, என்று சொன்னாலே. படிப்புச் செயலைச் செய்த கர்த்தா ஒர்ஆண்என்பதுத் தெளிவாக விளங்கும். இதில் குறிப்பாகஆன்என்று வரும் விகுதி தான், அந்தச் செயலைச் செய்த கர்த்தா ஒருஆண்என்பதை உணர்த்துகிறது !

படித்தது ஒரு பெண்ணாக இருந்தால்ஆள்என்னும் விகுதி அமைந்துபடித்தாள்என்று வரும். படித்தது பலராக இருந்தால்ஆர்விகுதி பெற்றுபடித்தார்என்று வரும்; அல்லதுஅர்விகுதி பெற்றுபடித்தனர்என்று வரும் ! 

(01). “அன்”, “ஆன்என்பவை ஆண்பால் விகுதிகள் (எடுத்துக் காட்டு) (01) படித்தனன் = படி + த் + த் + அன் + அன். இதில் இறுதியில் உள்ளஅன்ஆண்பால் விகுதி. (02) படித்தான் = படி + த் + த் + ஆன். இதில் இறுதியில் உள்ளஆன்ஆண்பால் விகுதி !

(02). “அள்”, “ஆள்என்பவை பெண்பால் விகுதிகள் (எடுத்துக் காட்டு) (01). படித்தனள் = படி + த் + த் + அன் + அள். இதில் இறுதியாக வரும்அள்பெண்பால் விகுதி. (02) படித்தாள் = படி + த் + த் + ஆள். இதில் இறுதியாக வரும்ஆள்பெண்பால் விகுதி !

(படர்க்கை, ஒருமை ) ஆண்பால் காட்டும் விகுதிகள் = “அன்”, “ஆன்
(படர்க்கை, ஒருமை ) பெண்பால் காட்டும் விகுதிகள் = “அள்”, “ஆள்
(படர்க்கை, பன்மை) பலர்பால் காட்டும் விகுதிகள் = “அர்”, “ஆர்
(படர்க்கை, ஒருமை ) ஒன்றன்பால் காட்டும் விகுதிகள் = ”து”, “று”, “டு
(படர்க்கை, பன்மை ) பலவின்பால் காட்டும் விகுதிகள் = “”, “

இவையன்றி, (தன்மை ஒருமை, தன்மை பன்மை, முன்னிலை ஒருமை, முன்னிலை பன்மை காட்டும்) இன்னும் பலவிகுதிகளும் உள்ளன. சுருக்கம் கருதி, சில விகுதிகள் மட்டும் இங்குத் தரப்பட்டுள்ளன !

முன் பத்திகளில் தரப்பட்டுள்ளகரைப்பான்முதலிய சொற்களை இப்போது பாருங்கள். (01) கரைப்பான் = கரை + ப் + ப் + ஆன். (02) வடிப்பான் = வடி + ப் + ப் + ஆன். (03) தேய்ப்பான் = தேய் + ப் + ப் + ஆன். (04) அழிப்பான் = அழி + ப் + ப் + ஆன். (05) தெளிப்பான் = தெளி + ப் + ப் + ஆன் (06) துளைப்பான் = துளை + ப் + ப் + ஆன்.  இவை ஆறிலும்ஆன்என்னும் விகுதிதான் வருகிறது. ”ஆன்என்னும் விகுதி ஆண்பால் விகுதி அன்றோ ?

சொற்றொடர் (01) என்ன ? ”தண்ணீர் ஒரு நல்ல கரைப்பான் ஆகும்”. இதில் வரும்கரைப்பான்” (SOLVENT)  என்பது அஃறிணைப் பெயர்ச் சொல். அஃறிணைப் பெயர்ச்  சொல்லுக்குது” ”று”, “டுஆகிய விகுதிகள் தான் வரும். “ஆன்என்னும் உயர்திணை ஆண்பால் விகுதி வராது. ஒரு அஃறிணைப் பொருளுக்கு, உயர்திணை ஆண்பால் விகுதியானஆன்வரும் வகையில்கரைப்பான்என்று பெயர் வைத்திருப்பது  மாபெரும் தவறு !

கரைஎன்னும் பகுதியுடன், உயர் திணை ஆண்பாலுக்கு உரிய, “ஆன்என்னும் விகுதியைச் சேர்த்து, ”கரைப்பான்” (SOLVENT) என்று ஒரு அஃறிணைப் பொருளுக்குப் பெயர் சூட்டி இருப்பது முதலாவது தவறு. “ஆன்விகுதி வந்திருப்பதால், “கரைப்பான்என்னும் அஃறிணைப் பொருள், ”உயர்திணையைச் சார்ந்த ஒரு ஆண்என்பது போன்று பொருள் மயக்கம் தரும் வகையில், சொல்லாக்கம் செய்திருப்பது இரண்டாவது தவறு !   

படித்தனன்”, “எழுதினான்”, போன்ற வினைமுற்றுகள் அன்றி, “நரைமுடியன்”, ”சேலத்தான்போன்ற பெயர்ச் சொற்களிலும்அன்”, ஆன்போன்ற விகுதிகள் வரும். ஆனால் இங்கும் அவை உயர்திணை ஆண்பாற் சொற்களில்தான் வருகின்றனவேயன்றி அஃறிணைச் சொற்களில் வரவில்லை !


சோளத்தில் தண்டு துளைப்பான் அதிக சேதத்தை ஏற்படுத்துகிறது.”  இந்தச் சொற்றொடரில் வரும்துளைப்பான்என்னும் சொல்ஆன்என்னும் ஆண்பால் விகுதி பெற்று வருவதால் தண்டில் துளைத்தலைச் செய்யும் புழு ஒரு ஆடவன்என்றல்லவோ பொருள்படுகிறது !

புழுக்களில் ஆண் புழு, பெண் புழு எனப் பாலின வேறுபாடு உண்டு. எனினும்புழுஎன்பது அஃறிணையாதலால்ஆன்விகுதி பெற்றுச் சொற்கள் வாரா.  து”, “று”, “டுஅல்லது”, “விகுதி பெற்றே ஒருமை, பன்மைக்கேற்ப எந்தச் சொல்லாயினும் வரும் !

வேளாண் துறை அலுவலர்களும், பாடப் புத்தகம் எழுதும் ஆசிரியர்களும் படிக்காதவர்கள் அல்ல ! நிரம்பப் படித்தவர்கள் தான் ! அவர்கள் தான் இத்தகைய தவறுகளைச் செய்கிறார்கள். தவறுகள் இனிமேலாவது திருத்திக் கொள்ளப்படுமா ?

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
 வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
(தி.:2050, மடங்கல் (ஆவணி),10]
{27-08-2019}
-----------------------------------------------------------------------------------------------------------
     
  “தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .