பக்கங்கள்

திங்கள், அக்டோபர் 07, 2019

சிந்தனை செய் மனமே (38) அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ?

எழிலனைப் போன்ற சிலர் இன்னும் காவல் துறையில் இருக்கத்தான் செய்கிறார்கள் !



எழிலன் தனது அலுவலகத்தில் வந்து அமர்ந்தார். காவலர் குமரன் கலிங்கினை (FAN REGULATOR) சுழற்றி மின் விசிறியை ஓடவிட்டார். ”தேநீர் வாங்கி வரச் சொல்லவா அய்யாகாவலர் கவியரசு அருகில் வந்து கேட்டார். “சரி”,  எழிலன். எழிலனின் சட்டையில் குத்தியிருந்த பெயர் வில்லை, அவர் காவல் உதவி ஆய்வாளர் என்பதைப் பறைசாற்றியது !

ஓரமாக நான்கைந்து பேர் உட்கார வைக்கப்பட்டிருந்தனர். ” இவர்கள் மீது என்ன வழக்குஎழிலன் கேட்டார். ஒவ்வொருவராக வரச் சொன்னார் காவலர் குமரன். முதலில் வந்து நின்றவரைக் கண்டதும் எழிலனுக்குத் தூக்கி வாரிப் போட்டது !

சிற்றரசு ! நீயாடா ? என்னடா இங்கே ?” எழிலன் தன் இருக்கையை விட்டு எழுந்து நின்றார். தலை குனிந்தபடியே நின்றான் சிற்றரசு. “என்னுடன் வா !” வேறு ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்த எழிலன், சிற்றரசுவையும் அமரச் சொன்னார் !

எழிலனும் சிற்றரசும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஒன்றாகப் படித்தவர்கள். இருவரும்  தமிழில்வாலை” (BACHELOR DEGREE) பட்டம் மட்டுமல்ல, “மேதை” (MASTER DEGREE) பட்டமும் பெற்றவர்கள். ஒரே ஊர்க்காரர்களும்கூட !

பல்கலைக் கழகப் படிப்புக்குப் பின்முனைவர்ஆய்வுக்காக, சிற்றரசு தஞ்சாவூரில் உள்ள தன் மாமா வீட்டிற்குச் சென்று விட்டான். காவல் துறை கூடுதல் இயக்குநராக இருந்த  தன் மாமா அழகப்பனின் வழிகாட்டுதலின்படி தேர்வாணைக் கழகம் மூலம் தேர்வாகி காவல் உதவி ஆய்வாராகப் பணியமர்வு பெற்று எழிலன் தென்காசிக்குச் சென்றுவிட்டான் !

முனைவர் (Ph.D) பட்டம் பெற்ற சிற்றரசு சில கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றினான். தென்தமிழகப் பல்கலைக் கழகம் ஒன்றில் துணைப் பேராசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பித்தான். உயர் பதவியில் உள்ள ஒருவர் உருபா 40 இலட்சம் கேட்டார். சிற்றரசின் தந்தை ஊரில் இருந்த வீடு, நிலங்களை விற்று உருபா 30 இலட்சம் தேற்றினார். அதற்கு மேல் பணம் திரட்ட முடியவில்லை !

காலம் கடந்தது. மகனுக்கு வேலை கிடைக்காத மன உளைச்சலில் சிற்றரசின் தந்தை இறந்து போனார். தாயார் நோயுற்றுத் தளர்ந்து போனார். வீடும் போய், நிலமும் போய், உருபா 30 இலட்சத்தில் 5 இலட்சம் வரை கரைந்தும் போய்விட்டது. அகவை 35 ஆகியும் வேலையும் கிடைக்க வில்லை; திருமணமும் ஆகவில்லை. எந்தக் கல்லூரியை அணுகினாலும் உருபா 50 இலட்சம் கொண்டு வாஎன்றனர் !

சிற்றரசின்  குடும்பத்திற்கு வேண்டிய ஒருவர் அவனையும் அழைத்துக் கொண்டு போய் அமைச்சர் ஒருவரைச் சந்தித்து உதவி கோரினார். ”உருபா 60 இலட்சம் கொண்டு வாருங்கள்என்றார். அப்பொழுதுதான் சிற்றரசுக்கு ஒரு உண்மை புரிந்தது. ஒரு பணியில் அமர்வு பெறத் தகுதி மட்டும் போதாது; பணமும் இலட்சக் கணக்கில் வேண்டும். இல்லாவிட்டால் வேலை கிடைக்காது; கிடைக்கவே கிடைக்காது !

நோயாளியான தாயாரும் இறந்து போனார். கைவயமிருந்த பணத்தை ஒரு நிதி  நிறுவனத்தில் செலுத்தி, அவனும் ஏமாற்றிவிட்டுத் தலை மறைவாகிவிட்டான்.   தனிமரமான சிற்றரசு தவித்துப் போனான் !

அடுத்த வேளை உணவுக்கு அல்லாடிப் போன சிற்றரசு, வேலை தேடி சென்னை சென்றிருந்தபோது, இன்னொருவன் சங்கிலிப் பறிப்புச் செய்ய, தற்செயலாக அங்கு சென்ற சிற்றரசு காவலர்களால் வளைக்கப்பட்டு தளையிட்டு (HAND-CUFFED) காவல் நிலையத்தில் உட்கார வைக்கப்பட்டான் !

தனியறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது சிற்றரசின் அவல நிலையை எழிலன் தெரிந்து கொண்டான். கல்லூரி நண்பனுக்கு நேர்ந்த இழி நிலையை எண்ணி வருந்தினான் !

ஏழாண்டுகளுக்கு முன்பு காவல் நிலையத்தில் கயவர்பட்டியலில் இடம்பெற்றிருந்த ஒருவன், ஒரு அரசியல் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்து ஈராண்டுகள் முன்பு சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு செய்யப் பெற்றான். அவன் இப்போது அமைச்சராக அமர்த்தப்படப் போவதாகவும் செய்திகள் உலா வருகின்றன ! ஒழுங்கீனங்களின் மொத்த உருவமே அரசியல் களம் தானோ !  இப்படிப்பட்ட அரசியல் இழி பிறவிகள் இருக்கும் நாட்டில் துணைப் பேராசிரியர் பதவிக்கு உருபா 60 இலட்சம் கேட்டதில் வியப்பென்ன ?

அமைச்சர் பதவியில் அமர்த்தப்பட இருக்கும் (பத்தாண்டுகளுக்கு முந்தைய) “கயவர் உருவம் எழிலனின் மனதில் நிழலாடியது. அடுத்த நொடியே காட்சி மாறி முனைவர் பட்டம் பெற்ற சிற்றரசுவேலையின்றித் தவிக்கும் சிற்றரசைப் பற்றிய சிந்தனை  - எழிலனின் மனதில் இடம் பிடித்துக் கொண்டு வலியைத் தந்தது.  சிற்றரசுக்கு ஏதாவது நல்வழி காட்ட வேண்டும் என்று அவன் மனம் துடித்தது !

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்தபோது தமிழ் கற்பித்த பேராசிரியர் இளமாறனின் நினைவு வந்தது. சென்னை அடையாரில் இருந்த அவர் வீட்டுக்கு சிற்றரசையும் அழைத்துக் கொண்டு சென்றான். சிற்றரசுவையும் அவருக்கு நினைவிருந்தது.  அவன் நிலைமையைக் கேட்டறிந்தார் !

சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றின் நிறுவனரிடம் எழினி (MOBILE) மூலம் பேசி விட்டு, எழிலன், சிற்றரசு இருவரையும் அவரைச் சென்று பார்க்கச் சொன்னார். சென்றார்கள். இளமாறனுக்குக்  கல்லூரி நிறுவனர் கடமைப் பட்டவர் போலும் ! சிற்றரசுக்குத் துணைப் பேராசிரியர் பதவியில் அமர்வு பெற ஆணை வழங்கினார் !

சிற்றரசுக்கு நிலையான வருமானத்திற்கு வழிவகை செய்த பேராசிரியர் இளமாறன் தன் நண்பரின் மகளை அவனுக்கு வாழ்க்கைத் துணைவி ஆக்கிவைப்பதாக நற்செய்தி ஒன்றையும் சொன்னார். துன்பம் நிறைந்த கடந்த கால வாழ்க்கையிலிருந்து நண்பன் சிற்றரசை மீட்டெடுத்து புதிய பாதையை அவனுக்குக் காட்டிய எழிலனைப் போன்ற சிலர் இன்னும் காவல் துறையில் இருப்பது சிற்றரசுக்கு மிகுந்த வியப்பைத் தந்தது !

தாய், தந்தை, அண்ணன், தம்பி, மாமா, மைத்துனன் போன்ற உறவுகளின் பாசப் பிணைப்பை விட நட்பின் வலிமை பலமடங்கு உயர்ந்தது என்பது சிற்றரசுக்கு இப்போது தெள்ளிதின் விளங்கியது. நண்பன் எழிலனுக்கு நன்றி சொல்ல முயன்றான்; முடியவில்லை; நா எழவில்லை. கண்களில் நீர் துளும்பிற்று !

வாஞ்சையுடன் அதைத் துடைத்து விட்ட எழிலனின் கண்களிலும் நீர் துளும்பியது., சிற்றரசுவை இறுக அணைத்துக் கொண்டான் !


---------------------------------------------------------------------------------------------------------
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும். (குறள்.71)

---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2050, மீனம் 01.]
{15-03-2019}

-----------------------------------------------------------------------------------------------------------
      ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
-----------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .