கொத்து (01) மலர்
(022)
---------------------------------------------------------------------------------------------------------
பேரறிஞர் அண்ணா
மறைந்த காலை எழுதிய
கவிதை
(ஆண்டு 1968)
---------------------------------------------------------------------------------------------------------
மாற்றான் தோட்டத்து
மல்லிகைக்கும் மணமுண்டு !
மறவாதே என்றதமிழ் மன்னவனும்
சென்றுவிட்டான் !
தூற்றான் ; அயலாரைத் துன்புறுத்த நினையாதான் !
தோழமையாய் வாழுதற்குத்
தூதனுப்பிச் சென்றுவிட்டான் !
தோற்றான் ; உயிர்ப்போரில் துஞ்சிவிட்டான்; சென்றுவிட்டான் !
தூமலரில் தேன்துளியாய் தோன்றியவன் வீழ்ந்துவிட்டான் !
காற்றான் மழையான்
கலக்கமுறாக் கஞ்சமலர் ;
காலமகன் அடிபட்டுக் கடற்கரையில் துஞ்சுதுகாண் !
எதையும் தாங்கவல இதயமேன் வேண்டுமென்று,
இயம்பிவழி காட்டிவந்த ஏகலைவன் சென்றுவிட்டான் !
கதையும் கற்பனையும் கண்ணியமாய்
இழையோட,
கருத்துமழை பெய்துவந்த கரிகாலன் சென்றுவிட்டான் !
சிதையும் மொழியார்வம் சீர்படுத்திச் சென்றுவிட்டான் !
செந்தமிழால் யாவரையும் சிறைசெய்தான் ; துஞ்சிவிட்டான் !
தசையும் உயிரும்போல் தமிழ்க்கொடியில் பூத்தமலர்,
தலைசாய்ந்து பூமகளின் திருவடியில் துஞ்சுதுகாண் !
கடமையுடன் கண்ணியமும் கட்டுப்பா டும்காத்து,
காசினியில் வாழவழி காட்டியவன் சென்றுவிட்டான் !
மடமைத்தீ மூட்டிவரும் மாந்தனது இறையுணர்வின்
மாசுதனை நீக்கவந்த மறத்தலைவன் சென்றுவிட்டான் !
தடம்புரளாப் பகுத்தறிவுத் தமிழ்ச்செல்வன் சென்றுவிட்டான் !
தனித்தமிழன் ஆட்சிகண்ட தலைமகனும் சென்றுவிட்டான் !
குடங்குடமாய்க் கண்ணீரில் குளித்தெழுந்து வெண்மணலில்,
குடியிருக்கச் சென்றுவிட்டான்
; குமுகாயம் வாடுதுகாண் !
----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம் முகநூல்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
ஐயா! கண்களில் நீர் கசிந்தது !
பதிலளிநீக்குபேரறிஞரின் பிரிவுப் பாடல் கேட்டு !