பக்கங்கள்

புதன், அக்டோபர் 02, 2019

கீழ்க்கணக்கு (09) திணைமொழி ஐம்பது !

ஒவ்வொரு திணைக்கும் பப்பத்துப் பாடல்களைப் பெற்று, அகத்துறை இலக்கியமாகத் திகழ்வது      இந்நூல்!



ஐந்திணை ஐம்பதைப் போன்று ஒவ்வொரு திணைக்கும் பப்பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளது இந் நூல். அந் நூலோடு வேறு பாடு தெரியத் திணைமொழி ஐம்பது என்று பெயர் குறித்தனர் போலும் ! இரண்டு நூல்களும் ஒரே வகையான அமைப்பு உடைமையினால், இவற்றுள் ஏதேனும் ஒன்று மற்றொன்றுக்கு வழிகாட்டியாக இருந்திருக்கலாம் ! எந்த நூல் எதற்கு முன் மாதிரியாய் அமைந்தது என்பது உறுதியாகத் தெரியவில்லை !

இந்நூலில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் வரிசையில் ஐந்திணைகளும் அமைந்துள்ளன ! இந்த முறையானது, அகப்பொருள் நிகழ்ச்சிகளின் போக்கிற்கு ஒத்ததாக உள்ளது !

------------------------------------------------------------------------------------

புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல்,
ஊடல், அவற்றின் நிமித்தம் என்றுஇவை
தேரும் காலைதிணைக்கு உரிபொருளே

------------------------------------------------------------------------------------

என்று தொகாப்பியர் வகுத்துள்ள முறையை (தொல்:பொருள்:நூற்பா.16) இந்நூல் பெரிதும் பின்பற்றியுள்ளது ! ஆனால்,  தொல்காப்பியர் இரங்கலை அடுத்து ஊடலை வைக்க இந்நூல் ஊடலை அடுத்து இரங்கலை வைத்துள்ளது !

இந்நூலை இயற்றியவர் கண்ணஞ் சேந்தனார். இவர் சாத்தந்தையாரின் புதல்வர். இவரது பெயரை வைத்தே, இவர் வைணவச் சமயத்தினர் எனத் தெளியலாம். கார் நாற்பதின் ஆசிரியர் கண்ணங் கூத்தனார் இவரது தமையனாக இருக்கக் கூடும் !

இந்நூலில் குறிஞ்சித் திணையில் வரும் ஒரு பாடற் காட்சி ! தலைவியைக் காணவரும் தலைவன் அவளை காணாமல் தோழியிடம் சென்று உசாவுகிறான் ! தோழியோ அவனுக்கு நேரடியாக விடை கூறவில்லை !

எம் தலைவியின் மனம் கவர்ந்த மன்னவனே ! தலைவனே ! உன் நாட்டில் மலையில் விளையும் சந்தன மரங்கள் முதிர்ந்து உலர்ந்தவுடன், அவற்றை வெட்டித் தீயிலிட்டு எரிப்பதால், மலையெங்கும் சந்தன மணம் கமழ்கிறது ! 

இந்த நறும் புகை வானளாவச் சென்று அங்குள்ள வானவர்களை மகிழ்விப்பதால், அவர்கள் மனம் கனிந்து உன் நாட்டில் மழையைப் பொழிவிக்கின்றனர் !  இதனால் உன் நாடு மலைவளமும் மழை வளமும் மிக்க செழுமையான நாடாகத் திகழ்கிறது !

இத்தகைய வளமான நாட்டின் தலைவனே ! நீ தலைவியைக் காண்பதற்குப்  மாலையும் இரவும்  மயங்குகின்ற இவ் வேளையில் வரல் வேண்டா ! நீ வருகின்ற வழியெங்கும் யானைக் கூட்டங்கள் திரிகின்றன. உனைக் கண்டு அந்த யானைகள் சினம் கொண்டால் உன் நிலைமை என்னவாகும் ?” என்கிறாள் !

தலைவனை நோக்கித் தோழி கூறுகின்ற இந்த அச்சமூட்டும் உரையின் உட்பொருள், “ தலைவா ! இப்படி மாலை மயங்கும் நேரத்தில், ஊரார் கண்களில் படாமல், நீ ஒளிந்து ஒளிந்து வரவேண்டுமா ? தலைவியைத் திருமணம் செய்துகொண்டு அவளை உன் நாட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டியது தானே ? ”

----------------------------------------------------------------------------------------------------
இதோ அந்தப் பாடல் !
----------------------------------------------------------------------------------------------------

புகழ்மிகு  சாந்துஎறிந்து  புல்லெரி ஊட்டி.
புகைகொடுக்கப்  பெற்ற  புலவோர்  துகள்பொழியும்,
வான்உயர்  வெற்ப  இரவில்  வரல்வேண்டா !
யானை உடைய சுரம் !

----------------------------------------------------------------------------------------------------

இதைப் போன்ற சுவையான காட்சிகள் அமைந்த பாடல்கள் பல உள்ளன ! பொருள் புரிந்து படித்தால் இலக்கிய இன்பம் நுகரலாம் ! முயன்றால் முடியாதது எதுவுமில்லை ! முயன்று பாருங்கள் நண்பர்களே !

------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,கன்னி(புரட்டாசி),04)
{21-09-2019}
-------------------------------------------------------------------------------------------------------
      ”தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
--------------------------------------------------------------------------------------------------------






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .