பக்கங்கள்

புதன், அக்டோபர் 02, 2019

கீழ்க்கணக்கு (17) ஏலாதி !

ஒவ்வொரு பாடலும் ஆறு பொருள்களை உள்ளடக்கி உள்ளன; இவை  உயிருக்கு உறுதுணையான அறநெறிகளை எடுத்துரைக்கின்றன !


ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒருவகைச் சூரணம்ஏலாதி என மருத்துவ நூல்களில் கூறப்படுகிறது. ஏலக்காய் ஒரு பங்கு, இலவங்கப் பட்டை இரு பங்கு, சிறு நாவற் பூ மூன்று பங்கு, மிளகு நான்கு பங்கு, திப்பிலி ஐந்து பங்கு, சுக்கு ஆறு பங்கு என்ற அளவுப்படி சேர்த்து இம் மருந்தை ஆக்குவர்.  ஏலாதி நூலும் ஒவ்வொரு பாடலிலும் ஆறு பொருள்களைப் பெற்று, உயிருக்கு உறுதுணையான அறநெறியை விளக்கி உரைக்கும் ஒப்புமைத் தன்மையால் இப் பெயரைப் பெற்றுள்ளது !

மருத்துவப் பெயர் பெற்ற கீழ்க் கணக்கு நூல்கள் மூன்று. அவை (01) திரிகடுகம் (02) சிறுபஞ்சமூலம் (03) ஏலாதி, என்பன ! இவற்றுள் ஏலாதி சிறுபஞ்சமூலத்தோடு  பெரிதும் ஒற்றுமை உடையது. சிறுபஞ்ச மூலம் ஐந்து பொருள்களை உரைக்க, இது ஆறு பொருள்களைச் சுட்டுகிறது. மேலும் சிறுபஞ்சமூலத்தின் கருத்துச் சொற் பொருள்களை இந் நூல் பல இடங்களில் அடியொற்றி உள்ளது !

இரு நூல்களின் ஆசிரியர்களும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள். இருவரும் மாக்காயனார் என்பவரிடம் தமிழ் கற்றவர்களே ! இன்னூல் கி.பி. 4 – ஆம் நூற்றாண்டில் தோன்றியது என்பது ஆய்வாளர்களின் கருத்து ! வடமொழிச் சொற்கள் சிறுபஞ்சமூலத்தைப் போன்றே இந் நூலிலும் சற்று மிகுதியே !

இந் நூலின் ஆசிரியர் கணிமேதாவியார். நூலின் முதற்கண் அருகக் கடவுளுக்கு இவர் வாழ்த்துக் கூறியுள்ளமையாலும், நூலுள் சமண சமயத்தின் சிறப்பு அறங்கள் சுட்டப் பெறுதலினாலும், இவரைச் சைன சமயத்தவர் என்று அறிஞர்கள் கூறுவர். இந்நூலில் கடவுள் வாழ்த்து நீங்கலாக எண்பது பாடல்கள் உள்ளன !

மகளிருக்கு அழகு தருவது சிற்றிடை எனப் பலரும் கூறுவர். ஆனால் கணிமேதாவியார் கருத்து  வேறு வகையாக உள்ளது. துடியிடை என்பது ஒரு அழகே அன்று ! மூங்கில் போன்ற தோள்களும் அழகைத் தந்துவிடாது ! அன்னம் போன்ற நடையும் அழகை அளிக்காது ! சங்கு போன்ற வெண் கழுத்தும் வனப்பைத் தருவதில்லை !

காற்றில் அசையும் கொடி போன்ற தோற்றமும் பிற ஈடிணையற்ற உடலமைப்பும் அழகைத் தராது ! பெண்களுக்கே உரிய நாணம் முகத்தில் படர்கையில் வனப்பு தோன்றுவதாகச் சொல்லப்படுவதுண்டு; அதுவும்கூட அழகைத் தராது ! பிறகு எதுதான் வனப்பு ! எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்று சொல்லப்படும் கல்வி தான் பெண்களுக்கு உண்மையான அழகைத் தருகிறது !

உயர்ந்த கருத்துகளை எடுத்துரைக்கும் கணிமேதாவியாரின் ஏலாதிப் பாடலைப் பாருங்கள் !

------------------------------------------------------------------------------------------

இடைவனப்பும், தோள்வனப்பும், ஈடில்  வனப்பும்,
நடைவனப்பும்,  நாணின்  வனப்பும்புடைசால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல; எண்ணோடு
எழுத்தின் வனப்பே வனப்பு !

-------------------------------------------------------------------------------------------

இன்னொரு பாடலின் கருத்தைப் பாருங்கள் ! நடப்பதற்குக் கால்கள் இல்லாத முடவர்கள், இந்த அழகான உலகத்தைக் கண்டு களிக்கும் பேறு பெறமுடியாத கண்ணிழந்த  குருடர்கள், தனது உணர்வுகளை எடுத்து உரைக்க முடியாத ஊமையர்கள், தமக்குத் துணையாக யாருமே இல்லாத ஏதிலிகள், கல்வியறிவு பெறமுடியாத ஏழை எளியவர்கள் முதலிய இன்னலுக்கு ஆட்பட்டிருக்கும் எவ்வமுடையோருக்கு வயிறார உணவளித்து மகிழும் வள்ளன்மை உடையோரை வானுறையும் தெய்வங்கள் எல்லாம் வாழ்த்தி மகிழ்வர் ! இதோ பாடலைப் பாருங்கள் !

-------------------------------------------------------------------------------------------------

காலில்லார்  கண்ணில்லார்  நாவில்லார்  யாரையும்
பாலில்லார்  பற்றிய  நூலில்லார்  -  சாலவும்
ஆழப்  படுமூண்  அமைத்தார்  இமையவரால்
வீழப்  படுவார் விரைந்து !

------------------------------------------------------------------------------------------------

எண்பது பாடல்களும் கற்கண்டுத் துண்டங்கள் ! வாய்ப்பைத் தேடிப் பெற்று இந்நூலைப் படித்து மகிழுங்கள் !

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050:கன்னி (புரட்டாசி),01]
{18-09-2019}

-----------------------------------------------------------------------------------------------------------
      ”தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
----------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .