பக்கங்கள்

சனி, அக்டோபர் 05, 2019

பத்துப்பாட்டு (10) மலைபடுகடாம் !

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் உள்ள  மலைப்பகுதியை ஆண்ட நன்னன் மீது பாடப்பெற்ற இலக்கியம் !



திருவண்ணாமலை மாவட்டத்தில், செங்கம் என்னும் ஊரை அடுத்துள்ள மலைப்பகுதியில் வாழ்ந்த நன்னன் என்ற சிற்றரசன்பால் பரிசு பெற்று மீண்டு வந்த ஒருவன், எதிர்ப்பட்ட கூத்தன் ஒருவனை அவன்பால் ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளது மலைபடுகடாம் என்னும் இந்நூல் !

பத்துப் பாட்டுத் தொகை நூல்களுள் பத்தாவதாக வைத்து எண்ணப்பெறும் இந்நூலை இயற்றியவர் பெருங்கௌசிகனார் என்னும் புலவர். 583 அடிகளைக் கொண்ட பாடலால் யாக்கப் பெற்றுள்ளது இத் தொகைநூல் !

மதம் பிடித்த யானை  பேரொலி எழுப்பும். எதிர்ப்பட்ட அனைத்தையும் சிதைத்து அழிக்கும். இதனால் ஏற்படும் ஒலி எங்கும் எதிரொலிக்கும். அதைப் போல மலையில் பல்வகை இரைச்சல்கள் ஏற்படுவது இயல்பு. பெருங்கௌசிகனார் நன்னனது மலையை கடாம் (மதம்) கொண்ட யானைக்கு உவமையாகச் சொல்லி, மதயானையால் ஏற்படும் பலவகை இரைச்சலைப் போல, மலையில்  பல்வகை ஒலிகள் உண்டாவதைப் பட்டியல் இடுகிறார் தன் பாடலில். இதனால்தான்  இவ்விலக்கியத்திற்கு மலைபடு கடாம் எனப்பெயர் ஏற்பட்டது !

யாதும் ஊரே யாவரும் கேளிர்என்பது தமிழர்தம் உள்ளத்தோடும், உயிரோடும் இணைந்து நிறைந்த நல்லெண்ணம் ஆகும்.  முன்பின் அறிமுகம் ஆகாதவர்களையும் உறவினராகக் கருதி வரவேற்று உபசரிப்பது தமிழர்களுக்கு இயல்பான குணமாகும்.  தமிழ்மண்ணில் பிறந்த அனைவர்க்கும் இது பண்பாகவே பதிந்து விட்டது.  இதுவே, விருந்தோம்பலுக்கு வழிவகுத்தது எனலாம் ! 

விருந்துஎன்ற சொல்லுக்கு புதுமை’, ‘புதிய வரவு’, ‘புதிய வருகைஎன்ற சிறப்புப் பொருள்கள் உண்டு.  முன்பின் தெரியாதவர்களை இன்முகங்காட்டி வரவேற்று உபசரிப்பது விருந்தோம்பல்எனப்படும். இதனை மிகுதியாகவே மலைபடுகடாம்நூலில் காண முடிகிறது !

பாணர், பாடினியர், கூத்தர், விறலியர் மற்றும் வழிப்போக்கர் முதலானோரைத் தத்தம் உறவினராகக் கருதி இனிதாய் வரவேற்று உபசரிப்பதை, பிற இலக்கியங்களில் காணமுடியா விருந்தோம்பலை மலைபடுகடாம்எனும் நூலில் விரிவாகக் காணமுடிகிறது.  வந்தாரை வரவேற்றுத் தத்தம் வளத்திற்கேற்ப உணவு பரிமாறி அன்பு காட்டி மகிழ்ந்த நிலையை மலைபடுகடாம்நூலில் தெளிவாகக் காண முடிகிறது !

மலைநாடு வழியாகச் செல்லும் வம்பல மாக்களுக்கு (புதிய மனிதர்கள்) குறிஞ்சி நிலக் குறத்தியர் உணவளித்து மகிழும் பாங்கு, கானவர் (வேடர்) அளிக்கும் விருந்து, உழவர் உண்பித்து மகிழும் விருந்தோம்பல் பண்பு, எனப் பல்வகை மக்களும் பின்பற்றி வந்த விருந்தோம்பலைப் பற்றி விரிவாக எடுத்து உரைத்துள்ளார் பெருங்கௌசிகனார் !

இவ்வாறு பண்டைத் தமிழகத்து மக்களின் வாழ்க்கை முறை பற்றிப் படம்பிடித்துக் காட்டும் இந்நூலில், இக்காலத்தில் புழங்கும் ஆங்கிலச் சொற்களுக்கு ஏற்ற நேர்ப்பொருள், இணைப்பொருள் அல்லது புனைப்பொருள் தரும் தமிழ்ச் சொற்கள் பல மலைபடுகடாத்தில் பரவலாகக் காணக் கிடக்கின்றன. அவற்றுள் ஒருசிலவற்றை மட்டும் காண்போமா !

---------------------------------------------------------------------------------------------------------

DRUM (MUSIC INSTRUMENT).........= ஆகுளி (மலை.வரி.03)
TOOL KIT.............................................= கலப் பை (மலை.வரி.13)
SONS....................................................= மகார் (மலை.வரி.236)
MIGRATION...........................................= புலம்பெயர்வு (மலை.வரி.392)
BEAR......................................................= குடாவடி (மலை.வரி.501)
BABY ELEPHANT................................= கயமுனி (மலை.வரி.107)
ARROW-ROOT......................................= கூகை (மலை.வரி.137)
SCHEME................................................= நடவை (மலை.வரி.432)(-.அக)
GLASS...................................................= பளிங்கு (மலை.வரி.516)
FEATHER..............................................= பீலி (மலை.வரி.5)
GUEST..................................................= மகமுறை (மலை.வரி.185)

-------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,ஆடவை,19]
{4-07-2019}
-------------------------------------------------------------------------------------------------------
      “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .