பக்கங்கள்

புதன், அக்டோபர் 02, 2019

கீழ்க்கணக்கு (12) திரிகடுகம் !

மனிதனின் அறியாமை நோயைப் போக்கிவாழ்வு செம்மை பெற உதவுவது  திரிகடுகம்  !


திரிகடுகம்  என்பது  பதினெண் கீழ்க்கணக்கு  நூல்களுள் ஒன்று.  இந்நூல் நல்லாதனார்  என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும் !

இம்மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது !

நூற்று ஒரு வெண்பாக்களைக் கொண்ட இந்நூல், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதன் ஒவ்வொரு பாடலிலும் இம்மூவர் அல்லது இம்மூன்றும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது !

பிறர் நம்மை உயர்த்திப் பேசுகையில், அச்செயல்  தவறான ஒன்று என்பதை உணர்ந்து, நாம் நாணித் தலை குனிய வேண்டும் !

நம்மீது பொறாமை கொண்டு யாரேனும் தாழ்வாகப் பேசினால், அவர்கள் மீது சினம் கொள்ளாமல் நாம் பொறுத்துக் கொள்ள  வேண்டும் !

மழை பொழிந்து உலகை வளப்படுத்தும் மேகமானது எப்படிக் கைம்மாறு கருதாமல் தனது பணியைச் செய்கிறதோ அவ்வாறே, நாமும் எவ்விதப் பயனையும் எதிர்பாராமல் எளியோர்பால் அன்பு கொண்டு அறச்செயல்ளைச் செய்து வரவேண்டும் !

இச்செயல்களே ஊரார் மதிக்கத் தக்க உயர்ந்த மனிதனாக வாழ்வதற்கான ஊற்றுக் கண்களாக அமையும் என்று உரைக்கிறது ஒரு பாடல். அஃது இதோ !

--------------------------------------------------------------------------------------------------

பிறர்தன்னைப்  பேணுங்கால்  நாணலும்,  பேணார்
திறன்வேறு  கூறிற் பொறையும், அறவினையைக்
காராண்மை  போல ஒழுகலும், -  இம்மூன்றும்
ஊராண்மை என்னும் செருக்கு.

--------------------------------------------------------------------------------------------------

இன்னொரு பாடலில் நல்லாதனார் கூறுவதைக் கேளுங்கள்

நம்மை மதித்து அழைக்காத எந்தவொரு மனிதனது இல்லத்திற்கும் சென்று, அவன் செய்துகாட்டும்  களியாட்டக் கூத்துகளைக் கண்டு களிப்பது கடுமையான துன்பம் விளைய வழி வகுக்கும் !

மதுப்பழக்கம் தன்னை அடிமைப்படுத்த விடாமல்  நேர்மையுடன் தலைநிமிர்ந்து நடைபயில்கின்ற  மனிதனாயினும் கூட, நாவடக்கமின்றிப் பிறர் மனதைப் புண்படுத்திப் பேசுவது நம்மைத் துன்பம் சூழ வழிவகை செய்வதாக அமையும் !
எள்முனையளவு கூட நம்மை  நம்பாமல் ஐயத்துடனேயே  அணுகும் ஒருவனது இல்லத்திற்கு அவன் அழையாமலேயே பன்முறை சென்று பழகுதலும் கடுமையான துன்பத்திற்கு  வழிவகை செய்வதாக அமையும் !

பாடலைப் பாருங்கள் !

-------------------------------------------------------------------------------------------------

விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும், வீழக்
களியாதான் காவாது உரையும்,  தெளியாதான்
கூரையுள் பல்காலும் சேறலும், - இம்மூன்றும்
ஊரெலாம் நோவது உடைத்து.

-------------------------------------------------------------------------------------------------
நீங்கள் பள்ளிப் பருவத்தில் படித்திருக்கக் கூடிய வேறொரு பாடலைப் பாருங்கள் !
-------------------------------------------------------------------------------------------------

தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்,
வேளாளன் என்பான் விருந்திருக்க  உண்ணாதான்,
கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர்
கேளாக வாழ்தல் இனிது.

------------------------------------------------------------------------------------------------

இப்பாடல் கூறும் கருத்து :- 

முயற்சியைக் கைவிடாமல் ஊக்கத்துடன் உழைக்கும் எந்தவொரு மனிதனும்  தன் செல்வங்களை இழந்து எந்தக் காலத்திலும் கடனாளியாக  வாழமாட்டான்

நிலத்தை உழுதுப் பண் படுத்திப் பயிர்செய்து நெல் விளைவித்து வாழ்கின்ற உழவன் வீட்டிற்கு வந்த விருந்தினன் வெளியில் அமர்ந்திருக்க, அவனைத் தவிர்த்து விட்டு உணவருந்த மாட்டான்

கற்றறிந்த நூல்களின் கருத்துகளைப் பின்பற்றி வாழ்பவன், அந்நூல்கள் அளித்த கருத்துக் கருவூலங்களை என்றுமே மறக்கமாட்டான்

இத்தகைய பண்பாடு உடைய இம்மூன்று வகையினரும் ஒருவர்க்கொருவர் நண்பர்களாக, உறவினர்களாக இணைந்து வாழ்தல் மிகவும் இனிய பயன் விளையும் செயலாக அமையும் !

ஒவ்வொரு மனிதனும், தன் வாழ்நாளில் கற்றுக் கொண்டது அவனது கைம் மண்ணளவே. இன்னும் கற்க வேண்டியவை உலகளவு இருக்கின்றன. திரிகடுகம் நூலைப் படித்தவர்கள், படித்ததை நினவுகூர்ந்து மகிழுங்கள் ! படிக்கும் வாழ்ப்பை இழந்தவர்கள், நூலகத்திலாவது தேடிக் கண்டறிந்து படித்து இன்புறுங்கள் !

----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,ஆடவை,29]
{14-07-2019)
-----------------------------------------------------------------------------------------------------------
      “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
-----------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .