பக்கங்கள்

சனி, அக்டோபர் 05, 2019

பத்துப்பாட்டு (02) பொருநராற்றுப்படை !

கரிகால் பெருவளத்தானின் பெருமைகள் பற்றிப் பேசும் இலக்கியம் !


பத்துப் பாட்டு நூல்களுள் இரண்டாவதாக அமைந்திருப்பது பொருநராற்றுப் படை.  இதனை இயற்றியவர் முடத்தாமக் கண்ணியார்  என்னும் பெரும் புலவர் !

         
பொருநர் என்பவர் ஏர்க்களம் (வேளாண்மை) பற்றிப் பாடுவோர், போர்க்களம் பற்றிப் பாடுவோர், பரணி (பரணி என்பது இலக்கியங்களில் ஒரு வகை) பாடுவோர் எனப் பலவகைப்படுவர் !

         
இவர்களுள், போர்க்களம் பற்றிப் பாடும் ஒருவன், சங்க காலச் சோழ மன்னர்களுள் தலைமணியாக விளங்கிய கரிகால் பெருவளத்தானிடம் சென்று பாடிப் பரிசில் பெற்று ஊருக்குத் திரும்புகையில், வேறொரு பொருநன் எதிரில் வருகிறான் !

         
அவனிடம், கரிகால் பெருவளத்தானைப்  பற்றி எடுத்துரைத்து, அம்  மாமன்னனிடம் சென்று பாடிப் பரிசில் பெற்று வரச் சொல்லி, அப்பொருநனை ஆற்றுப்படுத்துவதாக (வழிப்படுத்தி அனுப்புவதாக) அமைந்துள்ளது பொருநராற்றுப் படை என்னும் இந்நூல் !

         
அகவற்பாவினால் வடிவமைக்கப்பட்டுள்ள இவ்விலக்கியம், 248  அடிகளை உடையது. இந்நூலில், கரிகாலனின் விருந்தோம்பும் சிறப்பு, பொருநனுக்கு உணவு கொடுத்து ஓம்பிய முறை,, அரசவைக்குப் பொருநன் செல்லுதல், மன்னனின் சிறப்பைப் பாடுதல், ஊருக்குச் செல்ல பொருநன் விரும்புதல், அரசன் பிரிய மனமின்றி பரிசில் கொடுத்து அனுப்புதல், கரிகால் வளவனது சிறப்புகள், வெண்ணிப் போர் வெற்றி, மன்னனின் கொடைச் சிறப்பு ஆகியவை பற்றி விரிவாகப் பாடியுள்ளார் புலவர் !

         
சோழநாட்டின் வளமும் வனப்பும், நில மயக்கமும் நல்லாட்சியும், காவிரியின் வெள்ளச் சிறப்பு, காவிரி நாட்டு வயல் வளம் ஆகியவை பற்றியும் வயணமாக எடுத்துரைக்கிறார் முடத்தாமக் கண்ணியார் !

         
பல புதிய தமிழ்ச் சொற்களை நமக்கு அளித்துள்ள பொருநராற்றுப் படை, ஆங்கிலச் சொற்களுக்கு நேர்ப் பொருள் அல்லது இணைப் பொருள் அல்லது புனைப் பொருள் தரும் அரிய சொற்களை ஆங்காங்கே பாடல் வரிகளில் பொதித்து வைத்துள்ளது. அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போமா !

--------------------------------------------------------------------------------------------------------

MEALS.............................................= அவிழ்ப்பதம் (பொரு.112)
SKYJACKERS..................................= ஆறலைக் கள்வர் (பொரு.21)
ASHTAMI (அஷ்டமி)...................= எண்மதி (பொரு.11)
WHAT ARE ALL I KNOW............= என்னறி அளவை (பொரு.128)
WHAT ARE ALL HE KNOWS......= தன்னறி அளவை (பொரு.127)
HAIR CUTTER................................= மயிர் குறை கருவி (பொரு.29)
GRANARY BAG..............................= மூடை (பொரு.245)
GOGGLES........................................= கண்கூடு (பொரு.15)
TROUBLE SHOOTING...................= இடும்பைத் தீர்வு (பொரு.67)
BOILED FOOD................................= வேவை (பொரு.104)
SUDDENLY.......................................= கதுமென (பொரு.241)

--------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,ஆடவை,11]
{26-06-2019}
-------------------------------------------------------------------------------------------------------
     “தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .