பக்கங்கள்

வியாழன், அக்டோபர் 03, 2019

இலக்கிய அறிமுகம் (04) தொல்காப்பியம்.

ஆயிரத்து அறுநூறு நூற்பாக்கள் உள்ள தமிழ்  இலக்கணக் கருவூலம் ! 


தொல்காப்பியம் என்னும் பழந்தமிழ் இலக்கணம் ஏறத்தாழ 5,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது. இதன்கண் 1600 நூற்பாக்கள் உள்ளன. இவற்றை இயற்றியவர் தொல்காப்பியர் என்னும் பெரும் புலவர் !

தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று பெரும் பகுதிகளைக் கொண்டது.  எழுத்ததிகாரத்தில், தமிழ் எழுத்துகளைப் பற்றிய விளக்கங்கள், ஒன்பது இயல்களில் கூறப்பட்டுள்ளன. சொல்லதிகாரத்தில் எழுத்தாலாகிய சொற்களைப் பற்றிய இயல்புகளும், சொற்களின் சேர்க்கையால் உண்டாகும் தொடர்புகளைப் பற்றிய செய்திகளும் ஒன்பது இயல்களில் நன்கு விளக்கப்பட்டுள்ளன !

மூன்றாம் பகுதியாகிய பொருளதிகாரத்தில், எழுத்தையும் சொல்லையும் பயன்படுத்திய அக்காலத் தமிழ் மக்களின் அகவாழ்வும், புறவாழ்வும், பிறவும் ஒன்பது இயல்களால் தெரிவிக்கப்பட்டுள்ளன !

பண்டைத் தமிழகத்தில், ஒருவனும் ஒருத்தியும் தனியே எதிர்ப்பட்டுக் காதல் கொண்டு சிறிது காலம் களவு  வாழ்க்கை நடத்துவர்; பின்னர்ப் பலர் அறிய மணம் செய்து கொண்டு, கற்பு வாழ்வை மேற்கொள்வர்; இவ்வாறு களவொழுக்கம் இன்றி, மணம் முடித்துக் கொண்டு கற்பு அறம் பிறழாமல் இல்வாழ்க்கை நடத்துவதும் உண்டு !

இவ்விரு திறத்தினர் வாழ்வையும் நன்கு விளக்கிக் கூறும் பகுதியே அகவாழ்வு எனப்படும். அக்காலத் தமிழருடைய அறம் பற்றிய செய்திகளும், பொருள் பற்றிய விளக்கங்களும், வீடு பற்றிய குறிப்புகளும் புறவாழ்வு என்னும் பகுதியில் அடங்கும். இப்பகுதிகள் தொல்காப்பியர் காலத் தமிழர் வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுவன ஆகும் !

இவையேயன்றி உள்ளக் குறிப்பைத் தெள்ளிதிற் புலப்படுத்தும் மெய்ப்பாடுகளும் (manifesting physical expression of the emotions), பிற அணிகளுக்கெல்லாம்  அடிப்படையாய் அமைந்த உவமையின் இயல்பும், செய்யுள் இலக்கணம் முதலியனவும் பொருளதிகாரத்தில் விரித்துக் கூறப்பட்டுள்ளன !

இக்காலத்தில் புழக்கத்தில் உள்ள ஆங்கிலச் சொற்களான TECHNICIAN, DOZEN ஆகிவற்றுக்கு நேர் பொருளைத் தரும்வினைவலர்”, ‘பன்னீர்போன்ற பல சொற்களை நாம் எடுத்தாள்வதற்குத் தொல்காப்பியம் பெரிதும் துணை செய்கிறது !
--------------------------------------------------------------------

புல்லும் மரனும் ஓர் அறிவினவே;
நந்தும் முரலும் ஈர் அறிவினவே;
சிதலும் எறும்பும் மூவறிவினவே;
நண்டும் தும்பியும் நான்கறிவினவே;
மாவும் மாக்களும் ஐயறிவினவே;
மக்கள் தாமேஆறு அறிவு உயிரே !
---------------------------------------------------------------------
         
புற்களும் மரங்களும் ஓரறிவு உடையவை; நத்தையும் மீனும் ஈரறிவு உடையவை; கறையானும் எறும்பும் மூன்று அறிவு உடையவை; நண்டும் மலர் வண்டும் நான்கு அறிவு உடையவை; விலங்குகளும் பகுத்தறிவு இல்லாத மிலேச்சர்களும் சிறு குழந்தைகளும் ஐந்து அறிவு உடையோர்; வளர்ந்த மனிதன் ஆறு அறிவு உடையவன் என்று நுணுக்கமாக ஆய்ந்து அறிந்து சொன்ன அறிவியல் அறிஞன் அன்றோ நம் தொல்காப்பியன் !

இலக்கியங்களைப் படித்து தமிழின் பெருமையை உணர்வோம் ! தமிழின் அருமையை உணர்வோம் ! தமிழனின் பெருமைகளை உணர்வோம் !


--------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை.
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,விடை,31]
{14-06-2019}

----------------------------------------------------------------------------------------------------------
      ”தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
----------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .