பக்கங்கள்

ஞாயிறு, செப்டம்பர் 01, 2019

தமிழ் (06) கோயில்களில் தமிழில் வழிபாடு தேவை !


இனிய தமிழில் வழிபட்டால் இறைவனுக்கு ஏற்காதா  என்ன ?


{ நன்றி: கீற்று வலைப் பூ மே 2010 }
-------------------------------------------------------------------

தமிழ்நாட்டில் தமிழ் மன்னர்களால், தமிழ் மக்களைக் கொண்டு கட்டப்பட்ட கோயிலில் தமிழில் வழிபட என்ன தடை? எந்தவொரு நாட்டிலும் இறைவழிபாடு என்பது அவரவர் மொழியில் தான் இருக்கும். அவ்வாறே தமிழ்நாட்டிலும் இறை வழிபாடு தமிழ் மொழியிலேயே இருந்து வந்திருக்கிறது. ஏறத்தாழ 5 -ஆம் 6 -ஆம் நூற்றாண்டு காலகட்டங்களில் தமிழகத்தை ஆண்டு வந்த பல்லவ மன்னர்கள், முதன் முறையாக தமிழர் கோயில்களில் பார்ப்பனர்களையும் வட மொழியையும் (சமஸ்கிருதம்) புகுத்தினர். அந்தக் காலகட்டத்தில்தான் பார்ப்பனிய சடங்குகள் மிக அதிகளவில் தமிழர்களிடையே பரவவும் செய்தன.


பல்லவர்களுக்குப் பிறகு வந்த சோழ மன்னர்களும், அதற்குப் பிறகு வந்த மராட்டிய மற்றும் நாயக்க மன்னர்களும் பார்ப்பனர்களையும் வட மொழியையும் பெரிதும் ஆதரித்தனர். இந்த காலகட்டத்திலேயே பார்ப்பனர்களுக்கு மானியங்களாகப் பெருமளவு நிலங்களும் வழங்கப்பட்டன. இதற்கிடையே 7 -ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருநாவுக்கரசர், பக்தி இயக்கத்தைத் தொடங்கினார். அவரும் மற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர் மற்றும் சுந்தரர் ஆகியோர் சிவன் மீது பாடிய பாடல்களே தேவாரம் என்று அழைக்கப்படுபவை. தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு சிவன் கோயில்களுக்குச் சென்று, அந்த ஊர் கோயில் மீது பாடல்கள் பாடி பக்தியை பரப்புவதையே இவர்கள் செய்தனர்.

தேவாரத்திலும்  முரண்பாடான கருத்துகள் இருக்கையில்எதற்காக தேவாரத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற கேள்வி எழக்கூடும். வடமொழி ஆதிக்கம் நிறைந்திருந்த காலத்தில் தமிழ்ப் பாடல்களைப் பாடி வழிபடும் இந்த பக்தி இயக்கம் தொடங்கப்பட்டிருந்தாலும், வடமொழியை விட அதிகமாக அக்காலத்தில் மிகவும் புகழ் பெற்று விளங்கி வந்த சமண, பவுத்த மதங்களை எதிர்த்தே இந்த இயக்கத்தின் செயல்பாடுகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு சமண, பவுத்த மதங்களை எதிர்த்தவர்களால் பாடப் பெற்ற இந்த தேவாரத்தைப் பாடி வழிபடுவதற்கும், வடமொழி சுலோகங்களைக் கூறி வழிபடுவதற்கும் என்ன பெரிய வேறுபாடு?

அப்படி இரண்டும் ஒன்றென நாம் நினைத்த போதும், பார்ப்பனர்கள் அப்படி நினைக்கவில்லை என்பதால்தான் - ஒன்றை உயர்ந்தது என்றும் மற்றொன்றை தாழ்ந்தது என்றும் சொல்வதோடு, அதனை கோயிலுக்குள் அனுமதிக்கவும் மறுக்கின்றனர். தேவாரப் பாடல்கள் வடிவிலோ, வேறு எந்த வடிவிலோ தமிழ் கோயிலுக்குள் நுழைவது என்பது, தங்கள் ஆதிக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் என்றே பார்ப்பனர்கள் கருதுகின்றனர். கோயிலுக்குச் சொந்தமான ஏராளமான சொத்துக்களை அனுபவிப்பதற்காக மட்டும் அவர்கள் இதனை செய்யவில்லை. அதைவிட முக்கியமாக, சமூகத்தில் தங்களுக்கு இருக்கும் மேலாதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ளவே இதில் தீவிரம் காட்டுகின்றனர். பார்ப்பனர்களுக்கு இன்று வரை இருக்கக்கூடிய சமூக ஆதிக்கத்தின் வேர், இந்து மதத்தில் அவர்களுக்கு இருக்கும் மேலாதிக்கமே ஆகும் !

இந்த ஆதிக்கத்தைத் தகர்க்கவே பெரியார் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமைக்காகப் போராடினார். இந்த அடிப்படையிலேயே தமிழ் வழிபாட்டுரிமைக்கான போராட்டமும் நடைபெறுகிறது !


சிதம்பரம் கோயிலின் சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடுவதற்கு, ஆறுமுகச்சாமி ஓதுவாரும் அவருக்குத் துணையாக பல்வேறு முற்போக்கு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களும் தொடர்ந்து போராடியதன் விளைவாக, ‘சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடலாம்என்ற அரசாணை வெளியிடப்பட்டது. அந்த ஆணையின் அடிப்படையில் ஆறுமுகச்சாமி ஓதுவார் தலைமையில் சிதம்பரம் கோயிலுக்குள் சென்று, போராடி, தேவாரம் பாடி, தங்கள் உரிமையை நிலைநாட்டியுள்ளனர்.

சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடியதோடு தமிழ் வழிபாட்டுரிமை நிலைநாட்டப்பட்டு விட்டதா என்பதே நம் கேள்வி. சிற்றம்பல மேடை என்பது, கோயில் கருவறை அல்ல. கருவறைக்கு முன் உள்ள மேடை மட்டுமே. அங்கு தமிழ் துதிப்பாடல் பாடுவதற்கே இத்தனைப் போராட்டம். உண்மை என்னவெனில், இன்று வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் இதுதான் நிலைமை. அதாவது, இன்று வரை தேவாரப் பாடல்கள் கருவறைக்கு வெளியில் மட்டுமே பாடப்படுகின்றன.


தமிழில் அர்ச்சனை செய்வதற்கு சட்டம் உள்ளது என்பதை நாம் அறிவோம். அர்ச்சனை என்பது வேறு. பூசை என்பது வேறு. கோயில்களில் நாள் முழுவதும் பலவித பூசைகள் செய்யப்படுகின்றன. அவற்றிற்கு கால பூசைகள் என்று பெயர். இந்த பூசைகள் அனைத்தும் இன்று வரை வட மொழியில் மட்டுமே செய்யப்படுகின்றன.


அர்ச்சனை என்பது பக்தர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, குறிப்பிட்டவர்களின் நல்வாழ்விற்காக செய்யப்படும் வழிபாடு. இது மட்டுமே இன்று வரை தமிழிலும் செய்யப்படுகிறது. வடமொழியில் செய்யப்படும் பூசை தொடங்குவதற்கு முன், கருவறை வாசலில் நின்று ஒரு ஓதுவார் தேவாரப் பாடலைப் பாடுவார். அவர் பாடி முடித்ததும் கருவறைக்குள் உள்ள பார்ப்பன அர்ச்சகர் வட மொழியில் பூசையை நடத்துவார். இன்று வரை அனைத்துக் கோயில்களிலும் இந்த நடைமுறையே பின்பற்றப்படுகிறது.

பார்ப்பனரை நாம் எதிர்க்கவில்லை. பார்ப்பனீயத்தைத் தான் எதிர்க்கிறோம். தமிழனைச் சூத்திரன் என்று சொல்லி, கருவறைக்குள் விடாத பார்ப்பனீயத்தை எதிர்க்கிறோம். தமிழ் மொழியை நீச மொழி  என்றும், சமற்கிருதம் தேவ மொழி என்றும் சொல்லி, கோவில்களில் சமற்கிருத ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் பார்ப்பனீய நடவடிக்கைகளைத்  தான் எதிர்க்கிறோம்.

கோவில்களில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டுமானால், அதற்கு இரண்டு வழிகள் தான் உள்ளன. அவை:-  (01) கோவில்களுக்குச் செல்வதைத் தமிழர்கள் கைவிட வேண்டும். (அல்லது) (02)  இறை நம்பிக்கை உள்ள தமிழர்கள் கோவில்களுக்குச் சென்று அர்ச்சகர் உதவியின்றி இறைவனை வழிபடவேண்டும்.

வடமொழி மந்திரம் சொல்லிச் செய்யப்படும் அர்ச்சனையை முற்றிலும் கைவிட வேண்டும். திருநீறு கொடுக்கும் அர்ச்சகருக்குப் பணம் கொடுக்காமல் புறக்கணிக்க வேண்டும்.

வருமானம் வற்றிப் போய்விட்டால், பார்ப்பனர்கள் கோவில்களை விட்டுத் தாமாகவே வெளியேறி விடுவார்கள். பார்ப்பனர்களின் ஆதிக்கம் ஒழிவதும், ஒழியாமல் நீடிப்பதும் நம் கையில்தான் உள்ளது !


-----------------------------------------------------------------------------------------------------------
         
 ”தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை.

-----------------------------------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2050,மீனம்,12]
{26-03-2019}

----------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .