பக்கங்கள்

ஞாயிறு, செப்டம்பர் 01, 2019

நந்திக் கலம்பகம் (01) ஈட்டுபுகழ் நந்தி பாண !

பாணன் மீது ஊடல் கொண்ட அவன் மனைவியின் உரையாடல்   !


தெள்ளாற்றுப் போரில் வென்ற நந்திவர்மப் பல்லவனைத் தலைவனாகக் கொண்டு பாடப்பெற்ற  இலக்கியம் நந்திக் கலம்பகம். இதில் 88 பாடல்கள் உள்ளன. பாடிய புலவர் பெயர் மட்டும் அறியக் கூட வில்லை. இந்நூலிலிருந்து ஒரு காட்சி !

பாணர்கள் என்பவர்கள் இசையில் வல்லமையும் தமிழில் புலமையும் உள்ள பாடகர்கள்.  பாணன் ஒருவன், நந்திவர்மப் பல்லவனைக் கண்டு, பாடல்களைப் பாடிப் பரிசில் பெற்று வரும்  பொருட்டு பல்லவ நாட்டிற்குச் சென்றிருந்த போது தாசி ஒருத்தியின் வீட்டுக்குச் செல்ல வேண்டியதாயிற்று !

அவன் ஒழுக்கம் தவறாதவன் தான்; எனினும் அன்றைய வாய்ப்பு அவள் வீட்டில் இரவில் தங்க நேர்ந்தது. அவள் பாணனின் பாட்டைக் கேட்க விரும்பினாள். பாணன் தனது இனிய குரலில் இசைகூட்டிப் பாடல்கள் சிலவற்றைப் பாடினான் !

பொழுது  விடிந்தது. தாசியிடம் விடைபெற்றுக் கொண்டு தனது ஊருக்குப் புறப்பட்டான் பாணன். அவன் வீடு போய்ச் சேர்வதற்குள், ஊரலர் பேசும் ஒருவன் மூலம், பாணன் தாசியின் வீட்டில் தங்கிய செய்தி அவன் மனைவிக்குப் போய்ச் சேர்ந்துவிட்டது !

பாணன் வீட்டில் பாணிணியின் தாயும் தோழியும், இருந்தனர். பாணனின் மனைவி தன் கணவன் மீது சினம் கொண்டாளே தவிர, அவனது நடத்தையில் ஐயம் கொள்ளவில்லை !

பாணன் தனது வீட்டிற்கு வந்து சேர்ந்தான். மன்னனிடம் பெற்றுவந்த பரிசில்களை மனைவியிடம் கொடுத்து, தனது மகிழ்ச்சியை அவளிடம் பகிர்ந்து கொள்ள விரும்பினான் !

அவளோ, தன் கணவன் தாசி வீட்டில் தங்கி வந்துள்ளானே என்று மனதில் சிறு சினத்துடன் இருந்தான். தாசி வீட்டில் தங்க வேண்டியிருந்த சூழ்நிலையை பாணன் தன் மனைவியிடம் எடுத்துரைத்தான். பாணனின் ஒளிவு மறைவு இல்லாத பேச்சு அவள் சினத்தைத் தணித்தது !  

எனினும், அவள் கணவனுடன் ஊடல் (பொய்க் கோபம்) கொண்டாள். ”தெள்ளாற்றுப் போரில் வீரமுடன் போரிட்டு அழியாப் புகழ் ஈட்டிய நந்திவர்மப் பல்லவனிடம் சென்று  இசைப் புலமையை வெளிப்படுத்திப் புகழும் பரிசில்களும்  ஈட்டி வந்திருக்கும் பாணரே ! நீர் நேற்றிரவு என் தங்கையின் வீட்டிற்குச் சென்று தங்கி, அங்கு இன்னிசைப் பாடல்களை பாடி அவளை மகிழ்வித்த செய்தியும் கிடைத்தது !” 

அத்துடன் உமது இசை, தென்றலில் மிதந்து வந்து இந்த வீட்டிலும் ஒலித்தது. விடியும் மட்டும் நீர்பாடிய பாடல் இசையைக் கேட்டு, “காட்டில் அழுகின்ற பேயின் குரல் மாதிரி தெரிகிறதேஎன்று என் அன்னை என்னிடம் ஐயமுடன் கேட்டாள் !

அண்டை வீட்டினர் வந்து நரி ஊளை இடுகிறதுஎன்று என்னிடம் சொன்னார்கள். ஆனால், தோழி மட்டும், “பேயுமில்லை, நரியுமில்லை, நாய் குரைக்கும் ஒலிதான் இஃதுஎன்று உறுதியாகச் சொன்னாள் !

ஆனால், நான் மட்டும் அவர்கள் சொன்னவற்றை ஏற்கமுடியாது என்று தெரிவித்துவிட்டு, இந்த வீட்டிற்குள் காற்றில் மிதந்து வந்த ஒலிக்குக் காரணம் பேயுமல்ல, நரியுமல்ல, நாயுமல்ல, ”நீர் தான்என்று அவர்களிடம் உறுதியாகச் சொல்லி விட்டேன்.” என்று சொல்கையில் அவளது ஊடலைப் பாணன் புரிந்து கொண்டான் !

பாணனின் மனைவி, இந்தக் காட்சியை ஒரு பாடல் வாயிலாகத் தன் கணவனிடம் கூறினாள். அந்தப் பாடலைப் பார்ப்போமா !
-------------------------------------------------------------------------------------------------------------
பாடல்
-------------------------------------------------------------------------------------------------------------

ஈட்டுபுகழ் நந்தி பாண ! நீ எங்கையர் தம்
வீட்டிருந்து பாட, விடிவளவும் காட்டில் அழும்
பேய்என்றாள் அன்னை: பிறர்நரிஎன்றார்; தோழி,
நாய்என்றாள்; “நீஎன்றேன் நான் !

-------------------------------------------------------------------------------------------------------------
        
 ”தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை.
-------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2050, மீனம்,11]
{25-03-2019}
-------------------------------------------------------------------------------------------------------------





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .