பக்கங்கள்

ஞாயிறு, செப்டம்பர் 01, 2019

தமிழ் (03) மங்கி வரும் தமிழ் உணர்வு (பகுதி.01)

மக்களிடையே தமிழுணர்வு  இருக்கிறதா ?


தமிழகத்தில் இளைய தலைமுறையினரிடம் தமிழுணர்வு இருக்கிறதா என்றால்இல்லைஎன்று தான் சொல்லவேண்டி இருக்கிறது. தமிழ்க் குடும்பத்தில் பிறந்து, தமிழிலேயே பேசி வளர்ந்த இவர்களுக்குத் தமிழுணர்வு மட்டும் எப்படி  இல்லாமற் போய்விட்டது ? இதைப்பற்றிச் சற்று ஆய்வு செய்வோம் !

பள்ளிப் பருவத்தில் உள்ள இளைஞர்களின் மனம், கொழுகொம்பு தேடிக் காற்றில்  அலையும் முல்லைக் கொடி போன்றது. அவர்களை ஈர்க்கும் புறத் தூண்டல் (EXTERNAL STIMULATION) எதுவாயினும், அது நல்லதோ கெட்டதோ,  அதைப் பற்றிக்கொள்ள அவர்கள் மனம் அலைபாயும் !

உடன் பயிலும் மாணவர்களின் பழக்க வழக்கங்கள், புறத் தூண்டல்களில் ஒன்று. அவர்கள் மடல்  விளையாட்டு (CRICKET MATCH) பற்றி விவரித்தால் அஃது இவர்களையும் தொற்றிக் கொள்ளும். திரையுலகத் தாரகைகள் (FILM STARS) பற்றிய புகழுரைகள்  நிகழ்த்தப்பட்டால், இவர்களும் அதற்கு அடிமையாகிப் போவார்கள் !

இந்தப் பருவத்தில் தமிழின் அருமை பெருமைகள் பற்றி ஆசிரியர்கள் சுவைபட  எடுத்துச் சொன்னால், அவர்களுக்குத் தமிழின்பால் ஈர்ப்பு தன்னெழுச்சியாகவே வந்துசேரும் !

இக்காலத்தில் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் முறையில் நிறைவு  இருக்கிறதா என்றால்இல்லைஎன்று தான் சொல்ல வேண்டியுள்ளது. முதலில், தமிழாசிரியர்களின் கல்வித் தகுதி பற்றி ஆய்வு செய்வோம் !

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரைத் தமிழுக்கெனவே கல்லூரிகள் பல இருந்தன. இங்கு தமிழ் மட்டுமே கற்றுக் கொடுக்கப்பட்டது. இலக்கியங்கள் பற்றிய மொழியறிவு மாணவர்களுக்கு நிறைவாகப் புகட்டப்பட்டது.  இலக்கணம்  ஐயம் திரிபறச் சொல்லித் தரப்பட்டது. யாப்பிலக்கணம், அணியிலக்கணம் அனைத்தும் கற்றுத் தேர்ச்சி பெற்று தமிழில் வல்லமையும் புலமையும் பெறுகின்ற வாய்ப்பு இக்கல்லூரி மாணவர்களுக்கு முழுமையாக இருந்தது !

இக்கல்லூரிகளில் ஈராண்டுகள் படித்துத் தேர்ச்சி பெறுபவர்களுக்குவித்வான்  பட்டமும், நான்காண்டுகள் படித்துத் தேர்ச்சி  பெறுவோருக்குபுலவர்பட்டமும் வழங்கப்பட்டது. வித்வான் பட்டம் பெற்றோர் பள்ளிகளில் 6 , 7,  8 –ஆம் வகுப்புகளில்  தமிழ்ப் பாடம் கற்பித்தனர். புலவர் பட்டம் பெற்றோர் 9, 10, 11 –ஆம் வகுப்புகளில் தமிழ்ப் பாடம் கற்பித்தனர் !

தமிழில் ஆழமாகவும், அகலமாகவும் படித்துப் பட்டம் பெற்ற இத்தகைய ஆசிரியப் பெருமக்கள், அவர்களுக்கிருந்த இயல்பான தமிழ்ப் புலமையின் காரணமாக, பாடம் சொல்லிக் கொடுத்ததுடன், தமிழ் உணர்வையும் மாணவர்களிடம் ஊட்டி வளர்த்தனர் !

மாணவர்களின் ஆர்வத்தைக் கிளறிவிடும் வகையில் தமிழாசிரியர்களின் கற்பித்தல் முறை இருந்தது. எதுகை மோனையுடன் மாணவர்களிடம் உரையாடி, தானும் அவ்வாறு பேச வேண்டும் என்ற உந்துதலை அவர்களிடம் ஏற்படுத்தினர் !

உரையாடலுக்கு இடையே புறநானூறு, கலிங்கத்துப் பரணி, திருவருட்பா போன்ற இலக்கியங்களிலிருந்து சில வரிகளையும் பாரதியார், பாரதிதாசன் போன்றோரின் பாடல் வரிகளையும் இணைப்புரையாகச் சொல்லி அந்தக் பாடல் வரிகளின் தாக்கம்  மாணவர்களிடம் ஏற்படச் செய்தனர். சுருங்கச் சொன்னால், தமிழாசிரியர் வகுப்பு எப்போது வரும் என்ற ஏக்கத்தை மாணவர்களிடம் செழித்து வளரச் செய்தனர் !

உள்ளீடு (INPUT) வளமாக இருந்ததால், அக்காலத் தமிழாசிரியர்களின் வெளியீடும் (OUTPUT) செழிப்பு மிக்கதாக இருந்தது. செழிப்பு மிக்க கற்பித்தல் மாணவர்களிடம் தமிழுணர்வைச் சுடர்விட்டு ஒளிரச் செய்தது. மாணவப் பருவத்தில் ஏற்பட்ட தமிழார்வமும், தமிழுணர்வும், முதுமைப் பருவம் வரை  அவர்களிடம் தணலாகத் தகித்துக் கொண்டிருந்தது !

இன்றைய தமிழாசிரியர்கள் நிலையென்ன ? இடைநிலை ஆசிரியராகப் பணியில் சேரும் ஒருவர் இலக்கிய வாலை (B.LIT) படிப்பை அஞ்சல் வழியில்  படித்து 40 % மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுவிட்டால் போதும்; பட்டதாரித் தமிழாசிரியராகப் பதவி உயர்வு பெற்று விடலாம்.  அஞ்சல் வழியாகவே கலையியல் மேதை (M.A) படிப்பை முடித்துப் பட்டமும் பெற்று, அஞ்சல் வழியாகவே கல்வியியல் வாலை (B.Ed) பட்டமும் பெற்றுவிட்டால் முதுகலை ஆசிரியர் என்ற பதவி உயர்வும் 11, 12 –ஆம் வகுப்பு வரை தமிழ்ப் பாடம் கற்பிக்கும் வாய்ப்பும் அளிக்கப்படுகிறது !

ஆசிரியரிடம் நேரடியாகத் தமிழ் பயில்வதற்கும், அஞ்சல் வழியில் தமிழ் படிப்பதற்கும் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு உண்டு. அஞ்சல் வழியில் படிப்பவருக்கு புறநானூறு என்பதற்கு இலக்கணக் குறிப்பு யாதென்று ஐயம் ஏற்பட்டால் யாரிடம் போய்க் கேட்க முடியும் ? நேரடியாக ஆசிரியரிடம் தமிழ் பயிலும் போது புறநானூறு என்பதற்கு இலக்கணக் குறிப்பு, ”இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புறத்துப் பிறந்த அன்மொழித் தொகைஎன்பதைக் கேட்டறியும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கிறது. நேரடிப் பயிலலுக்கு இணையாக அஞ்சல் வழிப் பயிலலில் ஆழமுமில்லை; அகலமும் இல்லை !  

அஞ்சல் வழியில் படித்துத் தமிழசிரியராகப் பணி புரியும் மிகப் பெரும்பான்மையோரிடம் தமிழில் போதிய புலமையும் இல்லை; தமிழ் ஆர்வமும் இல்லை; தமிழ் உணர்வும் இல்லை. கல்லூரியில் இலக்கிய வாலை (B.Lit) அல்லது தமிழில் கலையியல் மேதை (M.A) பட்டம் பெற்றுத் தமிழாசிரியராகப் பணி புரிவோரிடமும் தமிழ்ப் புலமை குறைவாகவே இருக்கிறது; தமிழ் ஆர்வமும் நிறைவாக இல்லை; தமிழுணர்வு போதுமானதாக இல்லை. இதற்குக் காரணம் உள்ளீடு (INPUT) செழுமையாக இல்லை; எனவே வெளியீடும் (OUTPUT) வளமாக இல்லை !

தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களிடம் உள்ள இக்குறைபாடே இக்கால மாணவர்களிடம் தமிழார்வமும், தமிழ்ப்புலமையும், தமிழுணர்வும் இல்லாமற் போனமைக்கு முழுமுதற் காரணமாகும் !

வளரும் தலைமுறையினரிடம்  தமிழார்வமும், தமிழ்ப் புலமையும், தமிழுணர்வும் சுடர்விட்டு ஒளிர வேண்டுமானால், மீண்டும் தமிழ்க் கல்லூரிகள்  பல இடங்களில் தொடங்கப்பட வேண்டும். இங்கு தமிழ் மட்டுமே ஆழமாகவும் அகலமாகவும் சொல்லித் தரப்படவேண்டும்.  இங்கு பயின்று தமிழில்புலவர்பட்டம் பெறுவோர் மட்டுமே தமிழாசிரியர்களாகப் பணியமர்த்தப்பட வேண்டும் !

இப்போது தமிழாசிரியர்களாகப் பணிபுரிவோர்தமிழ்க் கல்லூரிகளில் மூன்று ஆண்டுகளாவது படித்துபுலவர்பட்டம் பெற்ற பின்பே கற்பிக்கும் பணி அளிக்கப்பட வேண்டும். அதுவரை அவர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய சிறப்பு விடுப்பு அளித்து  தமிழ்க் கல்லூரிகளில் சேர்ந்துப் பயின்றிட ஆணை வழங்க வேண்டும். இத்தகைய செயற்பாடு ஒன்றே தமிழ் நாட்டில் தமிழ் வளர்ச்சிக்கு உரமளிப்பதாக அமையும் !

தமிழ் ஆர்வலர்கள் இதைக் கோரிக்கையாக அரசின் பார்வைக்கு எடுத்துச் செல்வார்களாக ! ”தமிழ்நாடு அரசுஎன்று பெயர் சூட்டினார் பேரறிஞர் அண்ணா. அவரது வழித் தோன்றல்கள் எம்முடைய அரசுதமிழ் நாடு அரசுமட்டுமல்ல, ”தமிழ் வளர்ச்சியை நாடும் அரசும் கூட என்று  நூற்றுக்கு நூறு சொல்லிலும் செயலிலும் காண்பிக்க வேண்டிய தருணமும் இதுவே !

இதை நிறைவேற்றித் தரும் அரசுக்குத் தமிழ் மீது பற்றும், ஆர்வமும், புலமையும் கொண்ட இலட்சக் கணக்கான தமிழ் நெஞ்சங்கள் அசைக்கமுடியாத ஆதரவினை நல்குவர் என்பது திண்ணம் !


----------------------------------------------------------------------------------------------------------


பின்குறிப்பு:- இந்த இடுகைக்கு விண்ணப்ப வடிவம் தந்து கீழே கையொப்பம் இட்டு, தமிழ்ப் பணிமன்றம் சார்பாக முதலமைச்சருக்கும், கல்வி அமைச்சருக்கும், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சருக்கும் அனுப்பி வைக்க இருக்கிறேன். நீங்களும் இவ்வாறு செய்ய வேண்டுகிறேன். நிறைய விண்ணப்பங்கள் சென்றால் கவனத்தை ஈர்க்க வாய்ப்புண்டு !


-----------------------------------------------------------------------------------------------------------
         
 ”தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை.

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப்பணி மன்றம்,
[தி.: 2050, சுறவம், 23.]
{06-02-2019}

---------------------------------------------------------------------------------------------------------

2 கருத்துகள்:

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .