பக்கங்கள்

ஞாயிறு, செப்டம்பர் 01, 2019

குறுந்தொகை (40) யாயும் ஞாயும் யாராகியரோ !

என் தாயும் உன் தாயும் ஒருவர்க்கொருவர் என்ன உறவு ?


தலைவனும் தலைவியும்  நீண்ட நாள்களுக்குப் பிறகு சோலை   

ஒன்றில் சந்திக்கின்றனர். ”இத்துணை நாளும்

 எங்கே சென்றிருந்தீர்கள் என கவல் கொண்டு 

வினவுகிறாள் தலைவி. தந்தையின் பணி நிமித்தம் 

வேற்றூருக்குச் சென்றிருந்ததாகத் தலைவன் உரைக்கிறான். 

என்னை மறந்து விட்டீர்களோ  என  ஊடுகிறாள் தலைவி !



தலைவிக்குத் தலைவன் மேல் சிறு ஐயமேற்படுகிறது

எங்கு இவன் நம்மை விட்டுச் சென்றுவிடுவானோ 

என்று உள்ளூர அச்சப்படுகிறாள்

தலைவியின் முகத்தில் சட்டெனத் தோன்றிய கவலையை

 உணர்கிறான் தலைவன் !


அதோ அங்கு பார் ! நேற்று  பெய்த மழை இந்தச்

 செம்மண் நிலத்தில் எப்படித் தேங்கி நிற்கிறது ? 

செம்மண்ணுடன் சேர்ந்த மழையின் வண்ணம் எப்படி

 இருக்கிறது ?  இந்த நீரிலிருந்து  செம் மண்ணையும்

நிறமற்ற தூய மழையையும்  தனித்தனியே 

பிரிக்க முடியுமா ?  

முடியாதல்லவா ? அதுபோன்றே, அன்பால் கலந்து

 கட்டுண்ட நம் 

காதலும் திகழ்கிறது !


செம்மண் நிலத்தில் பெய்த மழை, மண்ணின் 

ண்ணத்துடன் கலந்து இணைந்து ஒன்றி நிற்பதைப்

 போல, நமது காதலும் அன்பினால் 

பிணிக்கப்பட்டு இறுகித் திகழ்கிறது. அதற்குப் பிரிவு

 எப்பொழுதும் நேராது

கவல் கொள்ளாதே .” என்று தேற்றுகிறான் தலைவன்.

இந்தக் காட்சியை 

மிகச் சுருக்கமாக நமக்கு விவரிக்கும்

 பாடலைப் பார்ப்போமா !
-
-------------------------------------------------------------------------------------------------------
குறுந்தொகை (பாடல். 40)
-------------------------------------------------------------------------------------------------------

யாயும் ஞாயும் யாரா கியரோ ?

எந்தயு  நுந்தையு  மெம்முறைக்  கேளிர் ?

யானும் நீயும் எவ்வழி  யறிதும் ?

செம்புலப் பெயல்நீர்  போல

ன்புடை நெஞ்சந்  தாங்கலந் தனவே !
--------------------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
--------------------------------------------------------------------------------------------------------

யாயும்  ஞாயும்  யார்  ஆகியரோ ?

எந்தையும்  நுந்தையும்  எம்முறைக் கேளிர் ?

யானும்  நீயும்  எவ்வழி  அறிதும் ?

செம்புலப்  பெயல் நீர்  போல 

அன்புடை  நெஞ்சம்  தாம் கலந்தனவே!’’.

------------------------------------------------------------------------------------------------------------
யாய் = என்னுடைய தாய்; ஞாய் = உன்னுடைய தாய்எந்தை = என் 

தந்தை; நுந்தை = உன் தந்தை; கேளிர் = உறவினர்செம்புலம் = செம்மண் 

நிலம்; பெயல் = மழை;
-----------------------------------------------------------------------------------------------------------
பாடலின் பொருள்:
என் தாயும் உன் தாயும் ஒருவர்க்கொருவர்  

என்ன உறவு என் தந்தையும் உன்

தந்தையும் எம்முறையில் உறவானார்கள்

எந்த உறவின் 

வழியாக நானும் நீயும் அறிந்துகொண்டோம்?



உறவுகளைப் பார்த்து வருவதல்ல காதல்; செம்மண் 

நிலத்தில் பெய்த 

மழைநீர் போல அன்புடைய நம் நெஞ்சம்

தாமாக ஒன்றுபட்டன!


[உறவினால் வருவதல்ல காதல்; அன்பினால் உருவாகி

 இறுகப் பிணிக்கப் 

படுவதே காதல்; பிணிக்கப்பட்ட காதலுக்கு

 என்றும் பிரிவு இல்லை ,  

என்பதே இப்பாடலின் உட்பொருள்]


---------------------------------------------------------------------------------------------------------
         
 ”தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை.

--------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.: 20150, மீனம், 15]

{29-03-2019}
--------------------------------------------------------------------------------------------------------






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .