பக்கங்கள்

புதன், செப்டம்பர் 04, 2019

திருப்பாவை - (30) வங்கக் கடல் கடைந்த !

திங்கள்  திருமுகத்துச் சேயிழையார்  சென்றிறைஞ்சி !


வங்கக்   கடல்கடைந்த   மாதவனைக்  கேசவனைத்
.........திங்கள்  திருமுகத்துச் சேயிழையார்  சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட  ஆற்றை,  அணிபுதுவைப்
.........பைங்கமலத் தண்தெரியல்  பட்டர்பிரான்  கோதைசொன்ன,
சங்கத்  தமிழ்மாலை முப்பதும்  தப்பாமே
.........இங்கிப்  பரிசுரைப்பார்  ஈரிரண்டு மால்வரைத்தோள்,
செங்கண்  திருமுகத்துச்  செல்வத்  திருமாலால்,
.........எங்கும்  திருவருள்பெற்  றின்புறுவர்  எம்பாவாய் !

-------------------------------------------------------------------------------------------------------------
பொருள்:-
---------------

வங்கக் கடலைக் கடைந்து அமுதம் எடுத்த அந்த மாயவனை, கேசவனை, திங்கள் போல் மலர்ந்த முகம் படைத்த மகளிர் சென்று பாட வேண்டும். இந்த முப்பது பாடல்களையும் கண்ணன் திருமேனி முன் நெக்குருகப் பாடி அவனை வணங்க வேண்டும். திருவில்லிபுத்தூர் பட்டாபிராமன் மகளாகிய கோதை நாச்சியார் படைத்த இந்தப் பாடல்களைப் பாடுவோர், திருமாலழகனின் திருவடிகளைச் சென்று அடைவார்கள் ! பாவையரே வாருங்கள் ! நாமும் அவன் புகழைப் பாடி வணங்குவோம் !

-------------------------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:-
--------------------------

வங்கக் கடல் கடைந்த = கோவர்த்தன கிரியை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பினைக் கயிறாகவும் கொண்டு வங்கக் கடலைக் கடைந்தவனை ; சேயிழையார் = அணிகலன்களை அணிந்து அழகாகத் திகழும் பெண்கள்; சென்று இறைஞ்சி = சென்று கண்ணனின் திருவடிகளைப் பணிந்து ; அங்கு அப் பறை கொண்ட ஆற்றை = கண்ணனின் அருள்பெற்ற நன்னெறியை; அணி = அடைந்த ; புதுவை = திருவில்லிப்புத்தூர்; பைங்கமலத் தண் தெரியல் = அழகிய தாமரைப் பூ இதழ்களைக் கொண்டு தொடுக்கப்பெற்ற மாலை போன்ற ; பட்டர் பிரான் கோதை = பட்டாபிராமன் மகளாகிய கோதை நாச்சியார் என்னும் ஆண்டாள் அருளிச் செய்த ; சங்கத் தமிழ் மாலை முப்பதும் = திருப்பாவைப் பாடல்கள் முப்பதையும் ; தப்பாதே = தவறாமல்; இங்கிப் பரிசுரைப்பார் = கண்ணனின் திருமேனி முன்பாக  பாடி வணங்குவோர்; ஈரிரண்டு = நான்கு ; மால் வரைத் தோள் = தோள்களையும்; செங்கண் = சிவந்த விழிகளையும்; திருமுகத்து = அழகிய முகத்தையும் ; செல்வத் திருமாலால் =  அனைத்துச் செல்வங்களை அருளும் திருமால்’; எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் =  திருவருள் பெற்று இவ்வுலகில் மகிழ்ச்சியான வாழ்வை அடைவார்கள் !

-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2049, சிலை, 29]
(13-01-2019)

------------------------------------------------------------------------------------------------------------
      
  “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற்  குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !

-------------------------------------------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .