பக்கங்கள்

செவ்வாய், செப்டம்பர் 03, 2019

திருப்பாவை -(22) அங்கண்மா ஞாலத்து !

      உன் காலடியில் வந்து  கூடிக் கிடப்பார்கள் !


அங்கண்மா ஞாலத்து  அரசர்  அபிமான
.........பங்கமாய்  வந்துநின்  பள்ளிக்கட்  டிற்கீழே,
சங்கமிருப்  பார்போல்  வந்து தலைப்பெய்தோம் !
.........கிண்கிணி  வாய்ச்செய்த  தாமரைப் பூப்போல,
செங்கண்  சிறுச்சிறிதே  எம்மேல்  விழியாவோ !
..........திங்களும்  ஆதித்  தனும்எழுந்  தாற்போல்
அங்கணிரண்  டும்கொண் டெங்கள்மேல்  நோக்குதியேல்,
.........எங்கள்மேற்  சாபம்  இழிந்தேலோ  ரெம்பாவாய் !

----------------------------------------------------------------------------------------------------

பொருள்:-
----------------

மன்னாதி மன்னரெல்லாம் தங்கள் அரசபோகத்தைக் கைவிட்டு, கைகட்டி வாய் புதைத்து உன் காலடியில் வந்து  கூடிக் கிடப்பார்கள் !  அவர்களைப் போலவே நாங்களும், எல்லாவற்றையும் வெறுத்து விட்டு, நீயே கதி என்று நம்பி வந்து விட்டோம் ! உனது திருவிழிகள், காற் சதங்கை வாய் பிளந்தாற்போல்  பாதியாவது  திறந்து பாராதோ ! தாமரைப் பூப் போன்ற உன் சிவந்த விழிகள் மெல்லத் திறந்து எம்மைப் பாராவோ ? திங்களும் கதிரவனும் ஒரே நேரத்தில் எழுந்து வந்ததைப் போல ஒளி வீசும், உன் இரண்டு கண்களும் எங்களைப் பார்த்தால், நாங்கள் செய்த பாவங்களும் தீவினைகளும்  பறந்தோடிப் போய்விடுமே ! கொஞ்சம் கண்களைத் திற கண்ணா !  ஏல் ஓர் எம்பாவாய் = வாருங்கள் பாவையரே ! நம் கண்ணனைப் பாடி வணங்குவோம் !

----------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-
--------------------------

அங்கண் = அவ்விடத்தில்; மாஞாலத்து = இந்தப் பரந்த பூமியின் ; அரசர் = மன்னர்கள்; அபிமான பங்கமாய் = செருக்கை எல்லாம் விட்டொழித்து; வந்து நின் பள்ளிக் கட்டில் கீழே = வந்து நீ துயில் கொள்ளும் கட்டிலின் கீழே; சங்கம் = கூடி ; இருப்பார் போல் = இருப்பதைப் போல; வந்து = நாங்களும் இங்கு வந்து; தலைப் பெய்தோம்= கூடி இருக்கிறோம்; கிங்கிணி = கால்களில் கட்டும் சதங்கை; வாய்ச் செய்த = சதங்கையின் சிறிய வாய் போல, தாமரைப் பூப்போல = தாமரை மலர் போல; செங்கண் = உன சிவந்த விழி இரண்டும் ; சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ = சிறிதாவது  திறந்து எம்மைப் பார்க்கலாகாதோ !;  திங்களும் ஆதித்தனும் = சந்திரனும் சூரியனும்; எழுந்தாற்போல் = ஒருசேர எழுந்து வந்தாற் போல; அங்கண் = உன் அழகிய கண்கள்; இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் = இரண்டையும் மெல்லத் திறந்து எங்களைப் பார்த்தாயானால்; எங்கள் மேற் சாபம் = நாங்கள் செய்த பாபங்களும் தீவினைகளும் ; இழிந்து = பறந்தோடிப் போய்விடுமே கண்ணா ! ஏல் ஓர் எம்பாவாய் = நம் கண்ணனை போற்றிப் பாடி வணங்குவோம் வாருங்கள் பாவையரே !

-----------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2049, சிலை, 21.]
(05-01-2019)

-----------------------------------------------------------------------------------------------------
       
”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .