பக்கங்கள்

செவ்வாய், செப்டம்பர் 03, 2019

திருப்பாவை - (20) முப்பத்து மூவர் !

தேவர்களுக்குத்  துன்பம் நேர்கையில்  !



முப்பத்து  மூவர்  அமரர்க்கு  முன்சென்று
.........கப்பம்   தவிர்க்கும்   கலியே  துயிலெழாய் !
செப்பம்   உடையாய் ! திறல்உடையாய்!  செற்றார்க்கு
.........வெப்பம்  கொடுக்கும்  விமலா ! துயிலெழாய் !
செப்பன்ன மென்முலை,  செவ்வாய்,  சிறுமருங்குல்,
.........நப்பின்னை நங்காய் ! திருவே ! துயிலெழாய் !
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
.........இப்போதே எம்மைநீ  ராட்டுஏல்ஓர் எம்பாவாய் !

----------------------------------------------------------------------------------------------------------

பொருள்:-
----------------

அடடா ! முப்பத்து மூன்று கோடித்  தேவர்களுக்கும் துன்பம் வரும் போது, தானே தளபதியாக நின்று, அவர்களது மயக்கத்தையும் கலக்கத்தையும் நீக்கும் கருணைக் கடலே ! கொஞ்சம் துயில் எழுந்து வா ! நாங்கள் உன் பிரிவால் வாடுகிறோம் ! அழகு மிகுந்தவனே ! ஆற்றல் மிகுந்தவனே ! காப்பதே கடமையாகக் கொண்டவனே ! பக்தருக்குப் பகைவர் வந்தால் அவர்களைச் சுட்டெரிப்பாய் ! அதிலே நீ வெப்பமாகத் தென்படுவாய் ! நிமலா ! கொஞ்சம் துயிலெழுந்து வா ! செப்பு முலையும் சிற்றிடையும் திருவாயும் கொண்ட நப்பின்னாய், நீயும் துயில் எழுந்து வா ! எங்கள் நோன்பு நிறைவேறுவதற்காக ஆலவட்டமும் கண்ணாடியும் தருகிறோம், அவற்றைக்  கண்ணனிடம்   கொடுத்து  அவன்  அருள்  மழையில் எங்களை நீராடச் செய், நப்பின்னாய் !

---------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-
-------------------------

கற்பம் = துன்பம்; கலி = கடல்; செப்பம் உடையாய் = பிறருக்கு உதவும் அருட்குணம் உடையவனே;  திறலுடையாய் = வலிமை நிறைந்தவனே ; செற்றார்க்கு = செற்றார்க்கு = பகைவர்க்கு; வெப்பம் கொடுக்கும் விமலா = சுட்டெரிக்கும் தீயாக மாறும் தூயவனே;  துயிலெழாய் = உறக்கம் நீங்கி எழுவாயாக ! செப்பு அன்ன = சிமிழ் போன்ற சிறு மருங்குல் = சிற்றிடை; நப்பின்னை நங்காய் = கண்ணனின் வாழ்க்கைத் துணைவியான நப்பின்னையே ; திருவே = அழகுப்பதுமையே; துயிலெயாய் = நீயும் எழுந்திரு; உக்கம் = ஆலவட்டம் (அரசனுக்கு இருபுறமும் இரு பெண்கள் நின்று கொண்டு பெரிய தூரிகை போன்ற விசிறியால் மன்னனுக்கு விசுறுவார்களே அது தான் ஆலவட்டம்) தட்டொளி = முகம் பார்க்கும் கண்ணாடி.

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[ தி.: 2050, சிலை,19.]
(03-01-2019)

-------------------------------------------------------------------------------------------------------------
      
  “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

------------------------------------------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .