பக்கங்கள்

செவ்வாய், செப்டம்பர் 03, 2019

திருப்பாவை - (13) புள்ளின் வாய் கீண்டானை !

கொக்கு வடிவத்தில் வந்த அசுரனைக் கொன்றவன் !



புள்ளின்வாய்  கீண்டானைப்  பொல்லா  அரக்கனை,
.........கிள்ளிக்  களைந்தானை,  கீர்த்திமை  பாடிப்போய்,
பிள்ளைகள்  எல்லாரும்  பாவைக்  களம்புக்கார் !
.........வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று !
புள்ளும் சிலம்பினகாண்  போதரிக் கண்ணினாய்,
.........குள்ளக் குளிரக்  குடைந்து  நீராடாதே !
பள்ளிக் கிடத்தியோ ? பாவாய்நீ  நன்னாளால்
.........கள்ளம் தவிர்த்துக் கலந்து ஏல் ஓர் எம்பாவாய் !

-----------------------------------------------------------------------------------------------------------

பொருள்:-
----------------

கொக்கு வடிவத்தில் வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து கொன்றவன் கண்ணன். அரக்கர் குலத்தைப் பூண்டோடு ஒழித்தவன் அந்தக் கார்மேக வண்ணன். அவனைப் பாடி நோன்பு நோற்கப் பெண்களெல்லாம் கோயிலுக்குச் சென்றுவிட்டார்கள். வெள்ளி கீழ்த்திசையில் எழுந்து விட்டது வியாழம் மேற்குத் திசையில் வீழ்ந்து விட்டது. பறவைகள் ஒலிக்கின்றன. மலர் போன்ற கண்ணுடையாய் ! குளிரக் குளிர நீராடி, அந்தக் கோவிந்தனைப் பாடாமல் பஞ்சணையில் கிடக்கின்றாயே !  அடி பாவாய் ! இது நல்ல நாளடி ! இந்தக் கள்ளத்தனத்தை விடு ! கண்ணனைப் பாடிக் நோன்பு நோற்க எழுந்து வா  !

-------------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-
--------------------------

புள் = பறவை (கொக்கு); கீண்டானை = கிழித்தவனை; பொல்லா அரக்கனை = அரக்கர் குலத்தவர்களை; கிள்ளிக் களைந்தானை = கொன்றொழித்தவனை; கீர்த்திமை = புகழினை ; பாடிப்போய் = பாடிக்கொண்டு; பிள்ளைகள் = நமது ஆயர் குலப் பெண்கள்; பாவைக் களம் புக்கார் = பாவை நோன்பு நோற்க, கோவிலுக்குச் சென்று விட்டனர்;  வெள்ளி = விடி வெள்ளி; வியாழம் = குரு; உறங்கிற்று = மேற்குத் திசையில் மறைந்துவிட்டது; புள்ளும் = பறவைகள் எல்லாம்; சிலம்பின = ஒலி எழுப்பிக் கொண்டு தமது கூட்டை விட்டு இரை தேடிப் புறப்பட்டுவிட்டன; போதரி = மலர் போன்ற செவ்வரி படர்ந்த; கண்ணினாய் = கண்களைஉடையவளே !; குள்ளக் குளிரக் குடைந்து = குளிரக் குளிர ; நீராடாதே = நீராடாமல்; பள்ளி = துயிலறையில் ; கிடத்தியோ = கிடக்கின்றாயே; பாவாய் = பதுமை போன்ற பெண்ணே ; நன்னாளால் = இந்த நல்ல நாளிலே; கள்ளம் = கள்ளத் தனத்தை; தவிர்த்து = கைவிட்டு; கலந்தது = எங்களுடன் சேர்ந்து வந்து ; ஏல் ஓர் = கண்ணனை பாடி நோன்பு நோற்க வாராய் !

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2049, சிலை,12.]
{27-12-2018}

-----------------------------------------------------------------------------------------------------------
         ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------------



2 கருத்துகள்:

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .