பக்கங்கள்

செவ்வாய், செப்டம்பர் 03, 2019

திருப்பாவை - (08) கீழ்வானம் வெள்ளென்று !

வானம் வெளுத்துவிட்டதுவெள்ளி முளைத்து விட்டது !


கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
.........மேய்வான்  பரந்தனகாண்  மிக்குள்ள  பிள்ளைகளும்
போவான்  போகின்றாரைப் போகாமல்  காத்துஉன்னைக்
.........கூவுவான்  வந்துநின்றோம்  கோது குலமுடைய
பாவாய் எழுந்திராய் ! பாடிப் பறைகொண்டு
.........மாவாய்ப் பிளந்தானை  மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
.........ஆவாஎன்று  ஆராய்ந்து  அருளேல்ஓர்  எம்பாவாய் !

------------------------------------------------------------------------------------------------------------

பொருள்:-
--------------

கிழக்கு வானம் வெளுத்துவிட்டது; வெள்ளி முளைத்துவிட்டது; எருமைக் கூட்டங்கள் புல்மேயப் புறப்பட்டுவிட்டன; இளம் பெண்கள் எல்லாம் கண்ணனைச் சேவிக்கப் புறப்பட்டார்கள். எங்கள் தலைவியாகிய நீ இல்லாமல் போவதா ?  நாங்கள் தான் அவர்களை நிறுத்தி வைத்திருக்கிறோம். அதனால்தான் உன்னைக்  கூவி அழைக்கிறோம். அடி பாவாய் ! எழுந்திராய் ! குதிரை வடிவம் கொண்ட கேசி என்ற அசுரனின் வாயைப் பிளந்தவன் கண்ணன். கம்சனுடைய வீர்ர்களை வென்றவன். அவன் தேவாதி தேவன். அவனைச் சென்று நாம் சேவித்தால், தேடி வந்துவிட்டோமே  என்று ஆராய்ந்து அருளுவான். வா ! எழுந்து வா !

--------------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-
------------------------

கீழ் வானம் வெள்ளென்று = கீழ் வானம் வெளுத்துவிட்டது; சிறுவீடு = மாட்டுத் தொழுவம்; மேய்வான் பரந்தன காண் = மேய்ச்சலுக்குப் புறப்பட்டுவிட்டன; மிக்குள்ள பிள்ளைகள் = ஆயர்குல இளம்பெண்கள்; போவான் = சேவிக்கப் புறப்பட்டார்கள்; போகின்றாரை = அப்படிச் செல்கின்றவர்களை; போகாமற் காத்து = போகவிடாமல் தடுத்து நிறுத்தி; உன்னைக் கூவுவான் வந்து நின்றோம் = உன்னையும் அழைத்துப் போக வந்துள்ளோம்; கோது குலம் = நற்குலத்தில் பிறந்த; பாவாய் = பெண்ணே !; எழுந்திராய் = எழுந்துவா ! பாடிப் பறை கொண்டு = கண்ணனைப் போற்றிப் பாடி அவன் அருளைப் பெற வந்துள்ளோம். மா வாய்ப் பிளந்தானை = குதிரை வடிவ அசுரனின் வாயைப் பிளந்து கொன்றவனை; மல்லரை மாட்டிய = கம்சனுடைய வீரர்களை வென்றவனை; நாம் சேவித்தால் = நாம் வணங்கினால்; வா என்று ஆராய்ந்து = அவனைத் தேடி வந்துவிட்டோமே என்று எண்ணி ஆராய்ந்து; அருளேலோர் = அருள் புரிவான்; எம்பாவாய் = எம் தலைவியாகிய பெண்ணே !

-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2049, சிலை,07.]
{22-12-2018}

-------------------------------------------------------------------------------------------------------------
        “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------------------





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .