பக்கங்கள்

செவ்வாய், செப்டம்பர் 03, 2019

திருப்பாவை - (06) புள்ளும் சிலம்பினகாண் !

வெள்ளைச் சங்கு இன்னிசை ஒலி எழுப்புகிறது ! 

புள்ளும்  சிலம்பினகாண்  புள்ளரையன்  கோயிலில்
.........வெள்ளை  விளிசங்கின்  பேரரவம் கேட்டிலையோ !
பிள்ளாய் எழுந்திராய் ! பேய்முலை நஞ்சுண்டு,
.........கள்ளச் சகடம் கலக்கழிய,  காலோச்சி,
வெள்ளத்து அரவில்  துயிலமர்ந்த வித்தினை,
.........உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்,
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்,
.........உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ  ரெம்பாவாய் !

------------------------------------------------------------------------------------------------------------

பொருள்:-
---------------
இதோ, பறவைகள் பாடுகின்றன ! கருடன் என்னும் பறவைக்கு அரசன் அல்லவா, நம் கண்ணன் ! அவன் கோவிலில் உள்ள வெள்ளைச் சங்கு இன்னிசை ஒலி எழுப்புகிறது ! அது உன் காதுகளுக்குக் கேட்கவில்லையா ?  ! பேதைப் பெண்ணே ! எழுந்திரு ! அரக்கர் குலக் கொடும் பெண்ணான பூதகியின் மார்பில் பாலுண்பது போலப் பாசாங்கு செய்து அவளது உயிரை உறிஞ்சிக் கொன்றவன் நம்  கண்ணன் ! கள்ளத் தனமாக சக்கர வடிவில் வந்த சகடாசுரனைக் காலால் உதைத்து எறிந்தவன் ! பாற்கடல் வெள்ளத்தில் பாம்பணையில் பள்ளி கொண்டவன் அவன் ! அந்த மூல விதையை மனதில் வைத்து முனிவர்களும், யோகிகளும் மெள்ள எழுந்துஅரி !  அரி ! “ என்று அழைக்கிறார்கள் அந்தப் பேரொலி கேட்டு உன் உள்ளம் குளிரவில்லையா ? அந்தக் கண்ணனைப் போற்றிப் பாடி வணங்கிடுவோம் வாரீர் !

------------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-
-------------------------

புள்ளும் சிலம்பின = பறவைகள் எல்லாம் ஒலி எழுப்பிக்கொண்டு பறக்கின்றன; புள்ளரையன் கோயிலில் = பறவைகளின் அரசனாகிய கருடனை வாகனமாகக் கொண்ட கண்ணபிரான் கோயிலில்; வெள்ளை விளி சங்கின் = வெண்ணிறச் சங்குகளின்; பேரரவம் = முழக்க ஒலி; கேட்டிலையோஉனக்குக் கேட்கவில்லையா ? பிள்ளாய் = பெண்ணே ! பேய் முலை நஞ்சு உண்டு = பூதகி என்னும் அரக்கியின் மார்பில் நச்சுப் பால் உண்டு; சகடம் = சக்கரம்; கலக்கழிய = அழிந்து போகுமாறு; கால் ஓச்சி = காலால் உதைத்து ; வெள்ளத்து = பாற்கடல் நீரில்; அரவில் = பாம்புப் படுக்கையில்; துயிலமர்ந்த = துயில் கொண்ட ; வித்தினை = மூல விதை போன்றவனை; உள்ளத்துக் கொண்டு = மனதில் எண்ணி; மெள்ள எழுந்து = எழுந்து நின்று ; அரி என்ற பேரரவம் =” அரி, அரிஎன்று உச்சரிக்கின்ற பேரொலி; உள்ளம் புகுந்து = உன் உள்ளத்தில் புகுந்து; குளிர்ந்து ஏல் ஓர் எம்பாவாய் = மனதை நெகிழ வைக்க, கண்ணனைப் போற்றிப் பாடி வணங்குவாயாக !

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2049, சிலை, 05.]
{20-12-2018}
-
------------------------------------------------------------------------------------------------------------
       
 “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .