பக்கங்கள்

சனி, செப்டம்பர் 07, 2019

சிந்தனை செய் மனமே (11) குடமுழுக்கு என்று சொன்னால் ஆகாதோ ?

தமிழ் உணர்வு ஆழ்ந்த உறக்கத்தில் முடங்கிக் கிடப்பது  ஞாயம்தானா ?


சேரலாதன் : ஐயா ! என் பெயர் சேரலாதன். இவர் தமிழ்மணி. நாங்களிருவரும் ஆசிரியர்கள். பக்கத்து ஊரிலிருந்து வருகிறோம். பொது மக்களிடம் நன்கொடை பெற்று பிள்ளையார் கோயில் ஒன்று கட்டி இருக்கிறோம். எதிர்வரும் வெள்ளிகிழமையன்று ஜீர்னோத்தாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்  நடைபெற இருக்கிறது. விழாச் செலவுக்காக நன்கொடை கேட்கலாம் என்று வந்திருக்கிறோம். இயன்றதைத் தாருங்கள் !

கிருஷ்ணமூர்த்தி : ஆமாம் ! நீங்கள் இருவரும் ஆசிரியர்களா ? மகிழ்ச்சி  ! கோயில் கட்ட நன்கொடை கொடுத்தவர்கள் யார் ? நமது மக்கள் தானே ?

சேரலாதன் : ஆமாம் ஐயா !

கிருஷ்ணமூர்த்தி : விழா அழைப்பிதழை ஊர் மக்களுடன் கலந்து பேசித் தானே தயாரித்தீர்கள் ?

சேரலாதன்: இல்லை ஐயா ! கோயிலுக்கு நியமனம் செய்யப்பட்டிருக்கும் அர்ச்சகர் சொல்லச் சொல்ல நாங்கள் எழுதினோம். அவர் படித்துப் பார்த்து ஒப்புதல் தந்தபின் அச்சடித்தோம் !

கிருஷ்ணமூர்த்தி : சரி சேரலாதன் ! ஜீர்னோத்தாரன அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் என்பது என்னவென்று எனக்கு விளங்கவில்லை ! சற்று  சொல்லுங்களேன் !

தமிழ்மணி : அதுதான் ஐயா கும்பாபிஷேகம் !

கிருஷ்ணமூர்த்தி :  ! குடமுழுக்கா ? கோயில் கட்ட நன்கொடை தந்தது தமிழ் மக்கள். நன்கொடை திரட்டியவர்கள் ஆசிரியர்கள் சேரலாதனும் தமிழ் மணியும் ! விழா அழைப்பிதழில் சொற்களை வடிவமைத்தவர் கோயில் அர்ச்சகர். ஜீர்னோத்தாரன அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் என்றால் என்ன பொருள் என்பதை ஆசிரியர்களால்கூட விளக்க இயலவில்லை !

சேரலாதன்: ஐயா நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் ?

கிருஷ்ணமூர்த்தி :  தமிழ்நாட்டில் பிறந்து  வளர்ந்து தமிழ் படித்து, ஆசிரியர்களாகவும் பணிபுரியும் உங்களுக்கு, ”எனது மொழி தமிழ் ! நான் தமிழன் ! ” என்ற உணர்வு ஏன் வரவில்லை ? நன்கொடை கொடுத்த மக்களுக்குப் புரியும் மொழியில் விழா அழைப்பிதழை வடிவமைக்க உங்களுக்குப் போதிய தமிழ் அறிவு இல்லையா ? உங்களுக்குச் சோறு போடும் தமிழுக்கு நீங்கள் காட்டும் நன்றி இது தானா ? தமிழ் படித்த நீங்கள் ஜீர்னோத்தாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் என்று உங்கள் கையால் எழுதக் கூசவில்லையா ?

தமிழ்மணி : ஐயா ! இது கோயில் விஷயம் ! அர்ச்சகர் சொற்படி தானே நாங்கள் செயல்பட முடியும் !

கிருஷ்ணமூர்த்தி : அர்ச்சகர் என்பவர் யார் ? கோயிலில் பூசை செய்ய நீங்கள் நியமித்திருக்கும் ஒரு பணியாளர். இந்தப் பணியாளர் சொற்படிதான் கோயில் சொந்தக்காரர்களாகிய ஊர் மக்களின் பிரதிநிதிகளான நீங்கள் நடக்க நடக்கவேண்டுமா ? உங்கள் தத்துவம் புரியவில்லையே !

கிருஷ்ணமூர்த்தியின் பேரன் : தாத்தா ! தமிழன் என்று சொல்லடா ! தலை நிமிர்ந்து நில்லடா ! என்றால் என்ன பொருள் என்று விளக்குங்களேன் !

கிருஷ்ணமூர்த்தி : (கோபமாக) எலேய் அரசு ! இப்போதைய தமிழகச் சூழலுக்குப் பொருத்தமில்லாத பாடலடா இது ! தமிழ்நாட்டில் யாருக்கும் தமிழ் உணர்வு இல்லைதமிழன் என்ற உணர்வு இல்லை - தமிழ் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் உள்பட ! இனிமேல் நீ பாடவேண்டிய பாட்டு என்ன தெரியுமா ? “தமிழனென்று சொல்லாதே ! தலை நிமிர்ந்து நில்லாதே !”

சேரலாதன் , தமிழ்மணி : ஐயா ! எங்கள் கண்களைத் திறந்துவிட்டீர்கள் ! எங்களை மன்னித்து விடுங்கள் ! வடமொழிப் பெயரை வைத்துக் கொண்டிருந்தாலும் தமிழ் உணர்வு தங்களிடம் பொங்கி வழிகிறது. தமிழ்ப் பெயர்கள் தாங்கிய எங்களிடம் இதுவரைத் தமிழ் உணர்வு உறங்கிப்போயிருந்தது ! எங்கள் செயலை எண்ணி வெட்கப்படுகிறோம். மீண்டும் எங்களை மன்னித்து விடுங்கள் ! புதிய அழைப்பிதழுடன் விரைவில் தங்களைச் சந்திக்கிறோம் !

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்
.[தி.:2049, நளி,24.]
(10-12-2018)

----------------------------------------------------------------------------------------------------------
 ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற உரையாடல் கட்டுரை !
-----------------------------------------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .