பக்கங்கள்

சனி, செப்டம்பர் 07, 2019

சிந்தனை செய் மனமே (09) ஆங்கிலத்திற்கு அடிமையான தமிழன் !

உடனடியாகத் திருந்து ! இல்லையேல் உன் அடையாளத்தை இழந்து விடுவாய் !

         
இனமென்பது மொழி வழியால் அமைவது. குலம் என்பது பழக்க வழக்கங்களால் அமைவது. தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட அனைவரும் தமிழர் என்னும் இனம் !

பிறப்பு முதல் இறப்பு வரைத் தமிழிலேயே பேசி, தமிழ் வழியாகவே கல்வி கற்று, தமிழிலேயே எழுதி, தமிழ் வழியாகவே அலுவல்களை நடத்தி, தமிழ் வழியாகவே இறைவனைத் தொழுது, தமிழ் வழியாகவே சிந்தித்து, வாழ்ந்து வந்தால் தான் தமிழ் நிலைத்து நிற்கும்; தமிழன் என்னும் அடையாளமும் நமக்குக் கிடைக்கும். தமிழ் நலிவடைந்தால், தமிழன் என்னும் அடையாளமும் நலிவடையும். இந்த மன்பதையில் [ சமுதாயத்தில் ] தமிழன் என்னும் அடையாளத்தை இழந்துவிட்டால், நாம் அனைவரும் ஏதிலிகளாக [ அநாதைகளாக ] இழிந்து போய்விடுவோம் !

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு தமிழ்நாட்டில் வாழும் மக்களில் எத்துணை பேர் வீட்டில் இன்று தமிழ் பேசப்படுகிறது ? மூன்று அகவைக் குழந்தை முதல் முதியோர் வரை, தமிழ் தள்ளி வைக்கப்பட்டு, ஆங்கிலமல்லவா அரசாட்சி செய்கிறது. குட்மார்னிங் (GOOD MORNING), காபி (COFFEE), நியூஸ் பேப்பர் (NEWS PAPER) , பாத்ரூம் (BATH ROOM ), பேஸ்ட் (PASTE), பிரஷ் (BRUSH ), டவல் (TOWEL ), சோப் (SOAP ), ஆயில் (OIL ),டேடி (DADY), மம்மி (MUMMY), ஹோம் ஒர்க் (HOME WORK), ஸ்கூல் வேன் (SCHOOL VAN) ,ஷூ (SHOE), யூனிபார்ம் ( ) குக்கர் ( ), ஸ்டவ் ( ), டிபன் பாக்ஸ் ( ), டாட்டா (TATA) பைபை (BYE BYE). காலை 8-00 மணி வரை தமிழன் வீட்டில் ஒலிக்கும் துன்பியல் இசை அல்லவா இது. வீட்டிலேயே தமிழை ஒதுக்கி வைக்கும் நமக்குத் தமிழன் என்று சொல்லிக் கொள்ள என்ன உரிமை இருக்கிறது.

! தமிழா ! நீ வாழ்வது இங்கிலாந்தா ? தமிழ்நாடா ? உன் தாய் ஆங்கிலேயக் குடும்பத்தில் பிறந்தவளா ? உன் உடலில் ஆங்கிலேயரின் அரத்தமா (BLOOD) ஓடுகிறது ? உன் பிள்ளைகள் அமெரிக்காவில் பணியமர்வு பெற்று, இலட்சம் இலட்சமாக வருமானம் ஈட்டி, உன்னைப் பணத்தால் முழுக்காட்டப் போகிறார்களா ? ஆங்கிலம் பேசுவதால் உன் வீட்டில் அகில் மணமா வீசுகிறது ?

! தமிழா ! நீ சிந்திக்கும் திறனை இழந்து விட்டாய் ! செம்மறி ஆட்டுக் கூட்டத்தில் முன் ஆடு துள்ளிக் குதித்தால், பின் ஆடும் துள்ளிக் குதிப்பதைப் போல, நீயும் காரணமில்லாமல், அடுத்தவனைப் பின் தொடர்கிறாய். அறிவியல் அறிஞர்கள் அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாத்துரை, அரியலூர் வளர்மதி போன்றவர்கள் அரசுப் பள்ளியில் தமிழ்வழியில் படித்தவர்கள் என்பதை எண்ணிப் பார்த்தால், உன் வீட்டில் தமிழ் புறக்கணிக்கப்படுவதும் ஆங்கிலத்தை அரியணையில் அமர்த்தி இருப்பதும் நிகழ்ந்திருக்காது !

தவறு செய்யும் தமிழனே ! திருந்து ! உடனடியாகத் திருந்து ! இல்லையேல் உன்னைத் தமிழனென்று சொல்லிக் கொள்ளாதே ! இனி, தலை நிமிந்து நில்லாதே !!

----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்
[தி.:2049, நளி,20.]
(06-12-2018)

-----------------------------------------------------------------------------------------------------------
                  
 ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .