பக்கங்கள்

சனி, ஆகஸ்ட் 31, 2019

மூதுரை (13) கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே !

மரத்திற்கு ஒப்பான மனிதன் யார் ? 

பாடத் திட்டத்தில் அடிக்கடி ஏற்படும் மாற்றத்தினால் நல்வழி, நன்னெறி, மூதுரை, திருவருட்பா போன்ற நீதி நெறி வழிகாட்டும் நூல்களிலிருந்து பாடல்களைப் படிக்கும் வாய்ப்பினை மாணவர்கள்  இழந்து விட்டனர். எனவே, இளைய தலைமுறைக்குப் பயன்படும் வகையில் மூதுரையிலிருந்து ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------------------------
பாடல்.13.
-----------------------------------------------------------------------------------------------------------

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள்சவைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டா தவன்நன் மரம்.

------------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:
------------------------------------

கவையாகி = கவை போன்ற கிளைகளையும்; கொம்பாகி = நீண்ட குச்சிகளையும் உடையதாகி ; காட்டகத்தே = காட்டில் ; நிற்கும் = வளர்ந்து நிற்கும் ; அவை = அந்த மரங்கள் ; நல்ல மரங்கள் அல்ல = நல்ல மரங்கள் ஆகா; சவை நடுவே = கற்றோர் நிறைந்த அரங்கத்தில் ;நீட்டு ஓலை = (ஒருவர்) நீட்டிய ஓலையை ; வாசியா நின்றான் = வாசிக்க மாட்டாமல் நின்றவனும் ; குறிப்பு அறிய மாட்டாதவன் = பிறர் முகக் குறிப்பை அறிந்து செயல்படாதவனுமே ; நன் மரம் = நல்ல மரங்களாம்.

------------------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:
----------------------

கவை போன்ற கிளைகளையும், நீண்டு வளர்ந்ததிருக்கும் போத்துகளையும் (தடித்த நீண்ட குச்சி) உடையதாகி, காட்டில் செழித்து வளர்ந்திருக்கும் மரங்கள் எல்லாம் நல்ல மரங்கள் அல்ல. கற்றோர் நிறைந்த அரங்கத்தில், ஒருவர் தருகின்ற  ஓலைச் சுவடியைப் படித்துப் பார்த்து  அதில் உள்ள கருத்துகளை எடுத்துரைக்க வல்லமை இன்றி, வெளிறிய முகத்துடன் நிற்பவனும், மற்றவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை அவர்களது முகக் குறிப்பைப் பார்த்துச் செயல்படாதவனுமே காட்டில் உள்ள மரங்களை விட மேலான  மரங்களாகும் !

------------------------------------------------------------------------------------------------------------

சுருக்க விளக்கம்:
-----------------------------
ஆறு அறிவுடைய மனித குலத்தில்  பிறந்து இருந்தாலும், கல்வி இல்லாதவனும், ஒருவருடைய குறிப்பை அறியாதவனும், ஓரறிவுடைய மரத்தினும் கடையர் ஆவார் !

------------------------------------------------------------------------------------------------------------

  ”தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,மடங்கல்(ஆவணி),17]
{03-09-2019}

------------------------------------------------------------------------------------------------------------

4 கருத்துகள்:

  1. "நீட்டோலை வாசியா நின்றான்" என்பதற்கு நீங்கள் கொடுத்துள்ள விளக்கம் தவறானது.

    "கிறு", "கின்று", "ஆநின்று" ஆகிய மூன்றும் நிகழ்கால இடை நிலைகள். (இவற்றுள் "ஆநின்று" வழக்கொழிந்து போயிற்று.) எனவே, "நீட்டோலை வாசியா நின்றான்" என்பது ஓலையை வாசிக்காமல் நின்றான் எனப்பொருள் படாது; அது "ஓலையை வசிப்பவனின்" என்றே பொருள் படும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் பொருள் தவறு. வாசியான் என்றான் என்றால் வாசிக்காமல் நின்றவன் என்று தான் பொருள் அவனைத்தான் நல்ல மரம் என்று இழி பொருளில் கூறியிருக்கிறார்

      நீக்கு
  2. தங்கள் கருத்தை இன்னும் தெளிவு படுத்துக !

    பதிலளிநீக்கு
  3. KPS, I strongly believe நீட்டோலை வாசி may have different meaning.
    For the past 50 years this poem intrigued me a lot and I am afraid if any tamil scholars unearthed the real meaning.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .