பக்கங்கள்

▼

ஞாயிறு, மார்ச் 06, 2016

புதிய தமிழ்ச் சொல் (37) உருளி ( CYCLE )

புதுச்சொல்புனைவோம் !



உருளி = CYCLE
------------------------------------------------------------------------------------------


மேலை நாட்டினரால் கண்டுபிடிக்கப் பெற்ற “சைக்கிள்” வண்டிக்கு இரண்டு சக்கரங்கள் உடைய வண்டி என்ற கருத்தில் “பை-சைக்கிள்” என்று பெயரிடப்பட்டது. காலப் போக்கில் “பை-சைக்கிள்” மறைந்து “சைக்கிள்” என்ற சொல் நிலைபெற்று விட்டது !

“
பை-சைக்கிள்” என்பதை தமிழில் மொழிபெயர்த்த வடமொழி ஆர்வலர்கள் அதை ”துவிச்சக்கர வண்டி” என்றனர். பின்னாளில் அது “இரு சக்கர வண்டி” ஆயிற்று. வேறு சில தமிழறிஞர்கள் அதை “மிதி வண்டி” என்று அழைக்கலாயினர் !


தனித்தமிழில் ஈடுபாடு கொண்ட அறிஞர்கள் அதை “ஈருருளி” என்று மொழியாக்கம் செய்தனர். இரு + உருளி = ஈருருளி என்றாகும். ஈருருளி என்றால் இரண்டு உருளிகள் (சக்கரங்கள்) உடைய வண்டி என்று பொருள் !


“பை-சைக்கிள்” என்ற சொல் சுருங்கி “சைக்கிள்” ஆகிவிட்டது. பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் “சைக்கிள்” என்ற சொல்லே நிலை பெற்றுவிட்டது. எனவே நாமும் ”ஈருருளி”யைக் கைவிட்டு “உருளி” என்றே உரைப்போமே !


சரி ! “உருளி” என்ற சொல் பொருத்தம்தானா ? ஆம் எனில் எப்படி ? “உல்” என்னும் வேர்ச்சொல் “வளைதல்” கருத்தை உணர்த்தும். “உல் என்னும் வேரினின்று கிளைத்து, நீண்டு, திரிபடைந்து பல்வேறு சொற்கள் தமிழில் புழங்கி வருகின்றன. அவற்றுள் ஒன்று தான் “உருளி”. எப்படி ? உல் > உர் > உருள் > உருளி = (வளைதற் கருத்தை உணர்த்தும்) வட்ட வடிவமான ஆழி, அதாவது சக்கரம் என்று பொருள் !


“சைக்கிள்” என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு மிகச் சரியான மொழியாக்கம் “உருளி” என்பதே ! ஆகையால் “சைக்கிள்” என்பதை இனி “உருளி” என்றே சொல்வோம். “உருளி” யின் உறுப்புகள் பெயரெல்லாம் ஆங்கிலத்தில் இருக்கிறதே ! அவற்றையும் தமிழில் மொழியாக்கம் செய்ய வேண்டாமா ? செய்திருக்கிறோம் ! பாருங்களேன் !!

 

=================================================

CYCLE

= உருளி

CYCLE - FRAME

= பழுவம் (பழு > பழுவம்)

CYCLE - FORK

= கவைக்கால்

CYCLE - WHEEL

= ஆழி

CYCLE - RIM

= வட்டகை

CYCLE - WHEEL SPOKE

= ஆரை (ஆரக்கம்பி)

CYCLE - WHEEL HUB

= குடம் (ஒ.நோ: வண்டிக்குடம்)

CYCLE - HUB PLATE

= குடமூடி

CYCLE- - WHEEL AXLE

= இருசு

CYCLE - AXLE CONE

= குவிசுரை

CYCLE - TYRE

= தூம்புறை (தூம்பு + உறை)

CYCLE - CHAIN

= சங்கிலி

CYCLE-  PEDAL

= மிதியடி

CYCLE - CRANK WHEEL

= ஏராழி (ஏர் + ஆழி)

CYCLE - CRANK SHAFT

= ஏர்க்கால் (ஏர்=எழுதல்)

CYCLE - FREEWHEEL

= முள்ளாழி

CYCLE - CARRIER

= சுமைதாங்கி

CYCLE - MUD-GUARD

= மட்காப்பு

CYCLE - DANGER LIGHT

= சிவலை விளக்கு

CYCLE - REFLECTOR

= சொலிப்பு வில்லை

CYCLE - STAND

= உருளித் தளி

CYCLE - BRAKE

= தடையம்

CYCLE - BRAKE SHOE

= தடையக் கட்டை

CYCLE - BALLS

= பரல்கள்

CYCLE – BELL

= மணி

CYCLE - SADDLE

= இருக்கை

CYCLE- DYNAMO

= ஈமின்கூடு

CYCLE - DOOM

= குடவிளக்கு

CYCLE PARKING STAND

= உருளி நிறுத்தகம்

CYCLE REPAIR SHOP

= உருளிச் சீரகம்

CYCLE - OVERHAULING

= முற்றாய்வு.

 

==================================================== 

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

‘தமிழ்ப் பணி மன்றம்” முகநூல்.

{06-03-2016}

=====================================================



உருளி

புதிய தமிழ்ச் சொல் (36) வில்லூரி ( MART, STORES, STALL, EMPORIUM,SHOP )

புதுச் சொல் புனைவோம் !


வில்லூரி = EMPORIUM, MART, STORES

-----------------------------------------------------------------------------------------


“உல்” என்னும் வேர்ச் சொல் உள்ளொடுங்கும் கருத்தை உணர்த்துவது. உள்ளொடுங்கல் என்றால் குறிப்பிட்ட வரம்புக்குள் அடங்குதல் என்று பொருள்!

 

உல் > உர் > ஊர் = நாற்புறமும் எல்லைகளைக் கொண்டு, அவ்வெல்லைகளுக்கு உள்ளொடுங்கி அமைவதால் தான் அதற்கு “ஊர்” என்று பெயர். சிற்றூர், பேரூர் எதுவாக இருந்தாலும், நாற்புறமும் எல்லைகளைக் கொண்டு அவற்றுக்கு இடையே தானே அவை அமைகின்றன ! 

 

”உல்” எனும் வேர்ச்சொல், உல் > உர் > ஊர் > ஊரி என்று திரிந்து “குறிப்பிட்ட வரம்புகளுக்கு உட்பட்டு அமைந்துள்ள இடம்“ என்ற பொருளை உணர்த்தும் ! 


 

கல் + ஊரி = கல்லூரி. கல்லூரி என்ற சொல் இங்கு எதைக் குறிக்கிறது ? நாற்புறமும் குறிப்பிட்ட எல்லைகளை உடைய வளாகத்தில் (CAMPUS) அமைந்துள்ள கல்வி கற்பிக்கப்படும் கட்டடப் பகுதியைக் குறிக்கிறது அன்றோ ? இதிலிருந்து என்ன உணரப்படுகிறது ? 

 

“ஊரி” என்பது இளமை, சங்கு, முகில், புல்லுருவி ஆகிய கருத்துகளுடன் “இடம்” என்ற கருத்தையும் நமக்கு உணர்த்துகிறது. “ஊரி” என்பதை “இடம்” என்னும் சொல்லுக்குப் பகரமாக (பதிலாக) வைத்து வேறு பல சொற்களையும் நாம் உருவாக்க முடியும் !

 

வில் + ஊரி = வில்லூரி. பொருள்கள் விற்பனை செய்யப்படும் இடத்தை வில்லூரி எனச் சொல்வது பொருத்தம் தானே ? இப்போது MART, STORES, SHOP, STALL, EMPORIUM என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் “விற்பனையகங்களை” இனி “வில்லூரி” என்னும் ஒரே சொல்லால் அழைப்போமே !

 

===================================================----

 

FURNITURE MART..............

= அறைகலன் வில்லூரி

STATIONARY MART............

= எழுதுபொருள் வில்லூரி

BOOK SHOP...........................

= புத்தக வில்லூரி

FRUIT STALL........................

= தேங்கனி வில்லூரி

TEA STALL............................

= தேநீர் வில்லூரி

GROCERY STORES.............

= உண்பொருள்வில்லூரி

MEDICAL  STORES.............

= உறைபொருள் வில்லூரி

FANCY STORES.....................

= புனைபொருள் வில்லூரி

UTENZIL STORES.................

= அடுகலன் வில்லூரி

GLASS SALES EMPORIUM..

= கண்ணாடி வில்லூரி

COMPUTER SALES EMPORIUM.............................


=
கணினி வில்லூரி

HAND LOOM TEXTILES......

= கைத்தறித் துணி வில்லூரி

 

===================================================

 

கொல் + ஊரி = கொல்லூரி. ஆங்கிலத்தில் SLAUGHTER HOUSE என்று சொல்வதை ஆட்டுத் தொட்டி, மாட்டுத்தொட்டி என்றும் மிருகங்கள் வதைப்பிடம் என்றும் பலவாறு சொல்கிறோம். இதை “கொல்லூரி” என்ற ஒரே சொல்லால் குறிப்பிடலாம்.

 

SLAUGHTER HOUSE........................= கொல்லூரி

இது போன்ற புதுச்சொற்களை இன்னும் புனைவோம் ! தமிழில் சொல் வளத்தைப் பெருக்குவோம்!!

 

===================================================

 

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com0

ஆட்சியர்,

“தமிழ்ப் பணி மன்றம்” முகநூல்.

{06-03-2016}

 

====================================================



வில்லூரி