name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

புதன், மே 05, 2021

இலக்கணம் (19) பா வகைகள்

ஆசிரியப் பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா!

------------------------------------------------------------------------------------------------------------


01. பா வகைகள் :- பா வகைகள் நான்கு வகைப்படும். அவை;- (01) வெண்பா (02) ஆசிரியப்பா (03) கலிப்பா (04) வஞ்சிப்பா.

 

02. வெண்பாவின் இலக்கணம் :-

 

01. ஈற்றடி முச்சீராகவும், ஏனைய அடிகள் நாற்சீராகவும் வரும்.

02. இயற்சீர் (மாச்சீர், விளச்சீர்), வெண்சீர் (காய்ச்சீர்) ஆகியவை வரும். பிற சீர்கள் வரா.

03. இயற்சீர் வெண்டளையும் (மாமுன் நிரை, விளமுன் நேர்), வெண்சீர் வெண்டளையும் (காய்முன் நேர்) வரும். பிற தளைகள் வரா.

04. ஈற்றடியின் ஈற்றுச் சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாடுகளுள் ஒன்று கொண்டு முடியும்.

05. செப்பலோசை பெற்று வரும்.

06. இரண்டடி முதல் பன்னிரண்டு அடிகள் வரை வரும்.

 

03. வெண்பாவின் வகைகள் (பக்216):- வெண்பாவின் வகைகள் ஆறு ஆகும். அவை;- (01) குறள் வெண்பா (02) நேரிசை வெண்பா (03) இன்னிசை வெண்பா (04) பஃறொடை வெண்பா (05) நேரிசைச் சிந்தியல் வெண்பா (06) இன்னிசைச் சிந்தியல் வெண்பா.

 

04. குறள் வெண்பா (பக். 216) :- வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று இரண்டு அடிகளைக் கொண்டு, ஒரு விகற்பத்தானும், இரு விகற்பத்தானும் வருவது குறள் வெண்பா. (விகற்பம் = வேறுபாடு) (எ-டு)

 

(01) அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி

       பகவன் முதற்றே உலகு.

(இரண்டு அடிகளும் ககர எதுகை பெற்று வந்துள்ளதால், இது ஒரு விகற்பம் எனப்படும்)

 

(02) பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்

       எண்ணிய தேயத்துச் சென்று.

(எதுகைக்குரிய இரண்டாமெழுத்து இரண்டு அடியிலும் ஒன்றி வராததால், இது இருவிகற்பம் எனப்படும்.)

 

05. நேரிசை வெண்பா (பக் 216) :- வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று, நான்கு அடிகளைக் கொண்டதாகவும், இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெற்றும், முதல் இரண்டடி ஒரு விகற்பமாகவும், நான்கடிகளும் ஒரே விகற்பமாகவும் வருவது நேரிசை வெண்பா எனப்படும்.

 

(எடுத்துக் காட்டுப்பாடலைப் புத்தகத்தில் பக்கம் 217-ல் காண்க.)

 

06. இன்னிசை வெண்பா :-வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று, (01) இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் இல்லாமல் நான்கடிகள் உடையதாய் வரும். (அல்லது) (02) இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெற்று, மூன்று விகற்பத்தான் வரும். (அல்லது) (03) மூன்றாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெற்று இரண்டு விகற்பத்தான் வரும்.

 

(எடுத்துக்காட்டுப் பாடலை புத்தகத்தில் பக்கம் 217-ல் காண்க)

 

07. பஃறொடை வெண்பா (பக். 217) :- வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று, ஐந்தடி முதல் பன்னிரண்டு அடி வரை பெற்று வருவது பஃறொடை வெண்பா. (எடுத்துக் காட்டுப்பாடலை புத்தகத்தில் பக்கம் 218-ல் காண்க)

 

08. நேரிசைச் சிந்தியல் வெண்பா (பக்.218):- வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று நேரிசை வெண்பாவைப் போல் இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெற்று, ஒரு விகற்பத்தானும், இரு விகற்பத்தானும் மூன்றடிகளாய் வருவது நேரிசைச் சிந்தியல் வெண்பா. (எடுத்துக்காட்டுப் பாடலை புத்தகத்தில் பக்கம் 218-ல் காண்க)

 

09. இன்னிசைச் சிந்தியல் வெண்பா (பக் 218):-வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று, மூன்றடி கொண்டதாய், தனிச்சொல் இன்றி, ஒரு விகற்பத்தானும், பல விகற்பத்தானும் வருவது இன்னிசைச் சிந்தியல் வெண்பா. (எடுத்துக் காட்டுப் பாடலை புத்தகத்தில் பக்கம் 218 –ல் காண்க)

 

10. ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் :-

 

(01) ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்கள் (அளவடி) பெற்று வரும்.

 

(02) இயற்சீர் (மாச்சீர், விளச்சீர்) கொண்டதாக வரும். பிற சீரும் அரிதாக வரும். ஆனால் வஞ்சி உரிச்சீர்கள் வரா.

 

(03) ஆசிரியத் தளைகள் பயின்று (கொண்டதாக) வரும். பிற தளைகளும் கலந்து வரும்.

 

(04) குறைந்த பட்சம் மூன்று அடிகளைக் கொண்டிருக்கும். அடிகளின் எண்ணிக்கையில் மேல்வரம்பு ஏதுமில்லை.

 

(05) அகவலோசை பெற்று வரும்.

 

(06) ஈற்றடியின் ஈற்றுச் சீர் என்னும் எழுத்தில் முடியும்.

 

11. ஆசிரியப் பாவின் வகைகள் (பக்.219):- (01) நேரிசை ஆசிரியப்பா (02) இணைக்குறள் ஆசிரியப்பா (03) நிலை மண்டில ஆசிரியப்பா (04) அடிமறி மண்டில ஆசிரியப்பா. (ஆசிரியப் பாவுக்கு அகவற்பா என்றும் ஒரு பெயர் உண்டு)

 

12. நேரிசை ஆசிரியப்பா :- ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் பெற்று, ஈற்றயலடி (கடைசிக்கு முந்திய அடி) முச்சீராயும், பிற அடிகள் நாற்சீராயும் வருவது நேரிசை ஆசிரியப்பா.

 

(எடுத்துகாட்டுப் பாடலை புத்தகத்தில் பக்கம் 220 –ல் காண்க)

 

13. இணைக்குறள் ஆசிரியப்பா (பக். 220):- ஆசிரியப் பாவின் பொது இலக்கணத்தோடு, முதல் அடியும் கடைசி அடியும் நாற்சீர் அடிகளாகவும், இடையில் உள்ள அடிகள் இருசீர் அடிகளாகவும் (குறளடி), முச்சீர் அடிகளாகவும் (சிந்தடி), வருவது இணைக்குறள் ஆசிரியப்பா. (எடுத்துக் காட்டுப் பாடலை புத்தகத்தில் பக்கம் 220 –ல் காண்க)

 

14. நிலைமண்டில ஆசிரியப்பா (பக்.220):- ஆசிரியப் பாவின் பொது இலக்கணம் பெற்று, எல்லா அடிகளும் நாற்சீர் அடிகளாய் (அளவடி), வருவது நிலைமண்டில ஆசிரியப்பா ஆகும். (எடுத்துக்காட்டுப் பாடலை புத்தகத்தில் பக்கம் 220 –ல் காண்க)

 

15. அடிமறி மண்டில ஆசிரியப்பா (பக்.220) :- ஆசிரியப் பாவின் பொது இலக்கணம் பெற்று, எல்லா அடிகளும் முன்பின்னாக மாற்றி மாற்றிப் படித்தாலும் ஓசையும் பொருளும் மாறாது வருவது, அடிமறி மண்டில ஆசிரியப்பா ஆகும். (எடுத்துகாட்டுப்ம்பாடலை புத்தகம் பக்கம் 221 –ல் காண்க.)

 

-------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,


வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[28-12-2018]

-------------------------------------------------------------------------------------------------------------

தமிழ்ப் பணி மன்றம்  முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை!
-------------------------------------------------------------------------------------------------------------