name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

வியாழன், மார்ச் 04, 2021

நான்மணிக்கடிகை (11) நிலத்துக்கு அணியென்ப நெல்லும் கரும்பும்

குளத்துக்கு அணி என்ப கொள்ளை எழில்  தாமரைப் பூ !

-----------------------------------------------------------------------------------------------------------

கடைச்சங்க காலமான கி.பி. 2-ஆம் நூற்றாண்டு வாக்கில் தோன்றிய இலக்கியம் நான்மணிக் கடிகை என்னும் நூல். கடவுள் வாழ்த்து உள்பட 106 பாடல்களைக் கொண்டிருக்கும் இந்நூலில்  அனைத்துப் பாடல்களுமே வெண்பாக்களால் ஆனவை ! விளம்பி என்னும் ஊரைச் சேர்ந்த நாகனார் என்னும் புலவர் படைத்துள்ள இந்நூலில் இருந்து ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------------------------

பாடல்: எண் (11).

-----------------------------------------------------------------------------------------------------------

நிலத்துக்  கணியென்ப  நெல்லுங்  கரும்பும்;

குளத்துக்  கணியென்ப  தாமரை; பெண்மை

நலத்துக்  கணியென்ப  நாணந்  தனக்கணியாம்

தான்செல்  உலகத் தறம்.

-----------------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்;

-----------------------------------------------------------------------------------------------------------

நிலத்துக்கு  அணியென்ப  நெல்லும்  கரும்பும்;

குளத்துக்கு  அணியென்ப  தாமரை;  பெண்மை

நலத்துக்கு அணியென்ப  நாணம், தனக்கு அணியாம்

தான்செல்  உலகத்து அறம்.

-----------------------------------------------------------------------------------------------------------

பொருள்:

---------------

பச்சைப் பசேலென்று காணப்படும்   நெற்பயிரும், கரும்பின் பயிரும் வயலுக்கு அழகென்று உலகத்தார் சொல்வார்கள் !

தாமரைக் கொடியும் இலையும் மலரும்  நிறைந்து இருக்கும் கண் கொள்ளாக் காட்சியே குளத்திற்கு  அழகு என்றும் உலகத்தார்  சொல்வார்கள் !

பெண்மையே அழகுதான்; எனினும் பெண்களிடம் காணப்படும் நாணம் தான் உயர்வான அழகு என்றும் உலகத்தார்  சொல்வார்கள் !

அதுபோல், மனிதன் செய்கின்ற அறச் செயல்கள் தான்  அவன்  எங்கு சென்றாலும் அவனுக்கு மதிப்பு மிக்க அழகைத் தருகிறது  என்றும் உலகத்தார் சொல்வார்கள் !

------------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------

நிலத்துக்கு = வயலுக்கு; அணி = அழகு; குளத்துக்கு = நீர் நிறைந்த பொய்கைக்கு;  பெண்மை நலத்துக்கு = பெண்மைக்கு; தான் செல் உலகத்து = தான் செல்லும் இடங்களில்; அறம் = அறச் செயல்கள்.

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2052,கும்பம்(மாசி),20]

{04-03-2021}

-----------------------------------------------------------------------------------------------------------

நிலத்துக்கு அணி !
நிலத்துக்கு அணி !