name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

வியாழன், நவம்பர் 26, 2020

தனிப்பாடல் (640) நாகம் சிறந்த மலர்க்காவில் !

தலைவிரி கோலமாக அந்தப் பெண்  ஓடி வருகிறாள்.   சேலை  கலைந்திருக்கிறது  !

(நாகம் என்னும் ஒற்றைச் சொல்லை வைத்துக் கொண்டு, நல்ல பாடலை நமக்களித்த புலவரின் பெயர் தெரியவில்லை.  அவரது பாடலையாவது  சுவைத்து மகிழ்வோம் !)

-----------------------------------------------------------------------------------------------------------

தலைவிரி  கோலமாக மகள் ஓடி வருகிறாள்.  அவள் சேலை கலைந்திருக்கிறது. மூச்சு வாங்குகிறது. முகமெல்லாம் வேர்வைத் துளிகள். “ஏனடி ? என்ன நடந்தது ? ஏன் இப்படி ஓடி வருகிறாய் ?” “அம்மா ! சொல்கிறேன் ! கேள் !”

-----------------------------------------------------------------------------------------------------------

நாகஞ்   சிறந்த   மலர்க்காவிற்   போய்வரும்   நன்னுதலே !

நாகஞ்   சரித்திட்ட   வாறுசொல்   லீர்நம   னார்தமைப்போல்,

நாகந்   துரத்திய   தாலே   யென்மேனி   நடுநடுங்கி  

நாகஞ்   சரிந்த   தடீயெனை   யீன்றருள்   நாயகமே !

------------------------------------------------------------------------------------------------------------

ஒன்றும் புரியவில்லையா ? சரி ! சந்தி பிரித்து எழுதித் தருகிறேன் !  அப்புறமாவது விளங்குகிறதா, பார்க்கலாம் !

-------------------------------------------------------------------------------------------------------------

நாகம்   சிறந்த   மலர்க்   காவில்   போய்வரும்   நல் நுதலே !

நாகம்   சரிந்திட்ட  ஆறு  சொல்லீர் !  நமனார்   தமைப்போல்,

நாகம்   துரத்தியதாலே   என்   மேனி   நடுநடுங்கி

நாகம்   சரிந்தது !   அடீ !  எனை  ஈன்ற   அருள்   நாயகமே !

-----------------------------------------------------------------------------------------------------------

 சொற்பொருளுரை:

---------------------------------

நாகம் சிறந்த மலர்க்காவில் = சுரபுன்னை  மரங்கள் நிறைந்த  பூஞ்சோலைக்கு ; (மலர் கொய்துவர) போய்வரும் = சென்று வரும் ; நல் நுதலே = அழகிய என் பெண்ணே ! ; நாகம் சரிந்திட்ட ஆறு = நீ உடுத்தியிருக்கும் சேலை  சரிந்து தளரும் விதத்தில் (அப்படி என்ன நடந்தது) சொல்லீர் = சொல்லடி பெண்ணேநாகம் நமனார் தமைப் போல்  துரத்தியதாலே = யானை ஒன்று,என்னை எமன் துரத்துவது போல் துரத்தியதாலே ; என் மேனி நடு நடுங்கி = என் உடலெல்லாம் நடு நடுங்கப் (பதறிப் போய் ஓடி வந்தேன்) ; நாகம் சரிந்தது அடீ = அடி என் தாயே,  (அதனால்) என் சேலை சரிந்து தளர்ந்திருக்கிறது : எனை ஈன்ற = என்னைப் பெற்ற ; அருள் நாயகமே ! = அருள் மிகுந்த என் தாயே !

----------------------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

-------------------

பூஞ்சோலைக்கு மலர் கொய்து வரச் சென்ற என் பெண்ணே ! ஏனடி இப்படி   ஓடி   வருகிறாய் ?  உன் சேலை தளர்ந்து சரிந்திருக்கிறது; மேனி நடுங்குகிறது ; அப்படி என்ன நடந்தது அங்கே ?

என்னைப் பெற்றவளே ! அருள்மிகுந்த தாயே ! யானை ஒன்று எமன் போல என்னைத் துரத்தி வந்தது ; அதனால் அச்சமுற்று,  மேனி நடுநடுங்க உயிர் பிழைக்க ஓடி வந்தேன். அதனால்தான் என் சேலை  தளர்ந்து சரிந்திருக்கிறது ! வேறொன்றுமில்லை என் தாயே ! 

------------------------------------------------------------------------------------------------------------

நாகம் = சுரபுன்னை மரம், சேலை, யானை

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப்பணி மன்றம்,

[தி.பி: 2051, துலை (ஐப்பசி),14]

{30-10-2020}

-----------------------------------------------------------------------------------------------------------

                     தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை !

----------------------------------------------------------------------------------------------------------