பக்கங்கள்

வியாழன், மே 05, 2022

புறநானூறு (13) இவன் யார் என்குவையாயின் !

விண்மீன்களுக்கு இடையே உலவரும் நிலவைப் போல யானை மீது அமர்ந்து வரும் இவன் யாரோ ?

-----------------------------------------------------------------------------------------------------------

பாடலின் பின்னணி:

-----------------------------------------------------------------------------------------------------------

பண்டைத் தமிழகத்து குறுநில மன்னன் ஒருவன் யானை மீது அமர்ந்து ஊர்ந்து வருகிறான். அவனைச் சுற்றிலும் வாளேந்திய படைவீரர்கள் சூழ்ந்து நடந்து வருகின்றனர். அந்நாட்டுக் குடிமகன் ஒருவனைப் பார்த்து வழிப்போக்கன் ஒருவன் ”இவன் யார்” என்று கேட்கிறான் ! இனி பாடலைப் படியுங்கள் !

-----------------------------------------------------------------------------------------------------------

இவனியா ரென்குவை யாயி னிவனே

புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய

எய்கணை கிழித்த பகட்டெழின் மார்பின்

மறலி யன்ன களிற்றுமிசை யோனே

களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும்

பன்மீ னாப்பட் டிங்கள் போலவும்

சுறவினத் தன்ன வாளோர் மொய்ப்ப

மரீஇயோ ரறியாது மைந்துபட் டன்றே

நோயில னாகிப் பெயர்கதி லம்ம

பழன மஞ்ஞை யுகுத்த பீலி

கழனியுழவர் சூட்டொடு தொகுக்கும்

கொழுமீன் விளைந்த கள்ளின்

விழுநீர் வேலி நாடுகிழ வோனே !

-----------------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்

-----------------------------------------------------------------------------------------------------------

இவன் யார்?” என்குவை ஆயின், இவனே   (01)

புலி நிறக் கவசம் பூம் பொறி சிதைய,

எய் கணை கிழித்த பகட்டு எழில் மார்பின்,

மறலி அன்ன களிற்று மிசையோனே;

களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும்,(05)

பல் மீன் நாப்பண் திங்கள் போலவும்,

சுறவினத்து அன்ன வாளோர் மொய்ப்ப,

மரீஇயோர் அறியாது, மைந்து பட்டன்றே;

நோய் இலன் ஆகிப் பெயர்கதில் அம்ம !

பழன மஞ்ஞை உகுத்த பீலி                                     (10)

கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும்,

கொழு மீன், விளைந்த கள்ளின்,

விழு நீர் வேலி நாடு கிழவோனே !                      (13)

-----------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-------------------------

வரி.(01). என்குவை ஆயின் = என்று கேட்பீராயின் ;

வரி.(02). புலி நிறம் = புலித்தோல் ; கவசம் = போர்வீரன் மார்பில் அணியும் பாதுகாப்பு சட்டை ; பூம்பொறி சிதைய = அழகிய தோலில் (ஆங்காங்கே துளை ஏற்பட்டுச்) சிதைவு ஏற்ப ;

வரி.(03).எய் கணை = எந்த அம்பு ;  கிழித்த = துளைத்த ; பகட்டு எழில் மார்பின் = வலிய அழகிய மார்பின் ;

வரி.(04). மறலி அன்ன = எமன் போன்ற; களிற்று மிசையோனே = யானை மேல் அமர்ந்திருப்பவன் ;

வரி.(05). களிறே = யானை ; முந்நீர் = கடல் ; வழங்கு நாவாய் போலவும் = செல்லும் மரக்கலம் போலவும்;

வரி.(06). பல் மீன் நாப்பண் = விண்மீன் கூட்டத்தின் நடுவில் ; திங்கள் போலவும் = அம்புலி போலவும் ;

வரி.(07). சுறவினத்து அன்ன = சுறா மீன் கூட்டத்தை போல ; வாளோர் மொய்ப்ப = வாள் ஏந்திய படை வீரர்கள் சூழ்ந்து வர ;

வரி.(08). மரீஇயோர் அறியாது = பின்தொடர்ந்து வரும் பாகர்கள் அறியாமலேயே ; மைந்து பட்டன்றே = யானை மதம் கொண்டது ;

வரி.(09). நோய் இலன் ஆகி = நலமுடன் ; பெயர்கதில் = திரும்பி வர வேண்டும் ; அம்ம = அசைச்சொல்.

வரி.(10). பழன மஞ்ஞை உகுத்த பீலி = வயல்களில் மேயும் மயில்கள் உதிர்த்த தோகை ;

வரி.(11). கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும் = உழவர்கள் நெல் அரியுடன் சேர்த்து எடுத்துச் செல்வர்;

வரி.(12). கொழு மீன் = கொழுத்த மீன் ; விளைந்த கள்ளின் = முதிர்ந்த கள்ளின் ;

வரி.(13). விழு நீர் = நீர்வளம் மிக்க ஊர் ; நாடு கிழவோனே = நாட்டின் தலைவனே !

----------------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

-----------------------

இவன் யார் என்று கேட்கிறாயா ? அம்புகளால் துளைக்கப்பட்டு ஆங்காங்கே புள்ளி புள்ளியாகச் சிதைந்து காணப்படும் புலித்தோலால் ஆகிய கவசத்தை இவன் தன் மார்பில் அணிந்து கொண்டு கூற்றுவன் போல யானை மீது வந்துகொண்டிருக்கிறான். அந்த யானை வருவது, கடலில் ஒரு மரக்கலம் வருவதைப் போலவும், பல் விண்மீன்களுக்கு நடுவே உலா வரும் நிலவைப் போலவும் காட்சியளிக்கிறது !

அந்த யானையைச் சுற்றிலும் சுறா மீன்கள் கூட்டம் போல் வாளேந்திய படைவீரர்கள் சூழ்ந்து வருகின்றனர்.  அவர்களுக்கு இடையே நடந்துவரும் யானைப் பாகர்கள் அறியாமலேயே அந்த யானைக்கு மதம் பிடித்துச் சினத்துடன் காணப்படுகிறது. இத்தகைய அடலேற்றின் நாட்டில், வயல்களில் மயில்கள் உதிர்த்த தோகையை உழவர்கள் நெல் அறுத்த அரியுடன் சேர்த்து அள்ளிச் செல்வார்கள் !

இவன் நாட்டில் கொழுத்த மீனும் முதிர்ந்து பக்குவப்பட்ட கள்ளும் எங்கும் கிடைக்கும். நீர்வளம் மிக்கதால் நிலவளம் மிகுந்த நாட்டுக்குத் இவன் தலைவனாகத் திகழ்கிறான். மதம் கொண்ட யானை மீது  ஊர்ந்துவரும் இவன் இன்னல்கள் ஏதுமின்றி நலமுடன்  திரும்பிச் செல்வானாக !

----------------------------------------------------------------------------------------------------------

காலக் கண்ணாடி:

-----------------------------------

இப்பாடலிலிருந்து நாம் வரலாற்றுச் செய்திகள் சிலவற்றையும் தெரிந்துகொள்ள முடிகிறது !

(01) பண்டைத் தமிழகத்தில் அயல்நாட்டு வாணிகம் மற்றும் நாட்டுப் பாதுகாப்பின் பொருட்டு, மரக் கலன்கள் பயன்பாட்டில் இருந்தன என்பது இப்பாடல் மூலம் தெரிய வருகிறது !

(02) மக்களின் முதன்மை உணவாக மீனும், கள்ளும் இருந்தமை இப்பாடல் வாயிலாக அறிய முடிகிறது. கள் என்பது உடல் வலிமைக்காக அருந்தும் நீராளமாகவே இருந்திருக்கிறது; வெறிமைக்காக அஃது அருந்தப்படவில்லை என்பது மன்னனே கள் அருந்தினான் என்பதிலிருந்து உறுதியாகிறது !

புறநானூறு  பண்டைய தமிழகத்தின் வளத்தையும் மாண்பையும் உணர்த்தும் காலக் கண்ணாடியாகத் திகழ்கிறது என்பது இப்பாடல் மூலம் உறுதிப்படுகிறது !

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்

(veda70.vv@gmal.com)

ஆட்சியர்,

“தமிழ்ப் பணி மன்றம்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 22]

{05-05-2022}

----------------------------------------------------------------------------------------------------------

புதன், மே 04, 2022

புறநானூறு (86) சிற்றில் நற்றூண் பற்றி நின் மகன் !

தாயே ! தங்கள் மகன் எங்கே ? சொல்லுங்களேன் !

-----------------------------------------------------------------------------------------------------------

பாடலின் பின்னணி:

----------------------------------

தாய் ஒருத்தியிடம் உன் மகன் எங்கே என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அந்தத் தாய், கேட்டவர் திகைக்கும் வண்ணம் மறுமொழி கூறுகிறாள் ! காவற்பெண்டு என்னும் பெண்பாற் புலவர் இயற்றிய அந்தப் பாடலைக் காணுங்கள் !

------------------------------------------------------------------------------------------------------------

புறநானூறு பாடல் எண்: (86)

------------------------------------------------------------------------------------------------------------

சிற்றில் நற்றூண் பற்றிநின் மகன்

யாண்டு ளனோவென வினவுதி; என்மகன்

யாண்டுள னாயினும் அறியேன்; ஓரும்

புலிசேர்ந் துபோகிய கல்லளை போல,

ஈன்ற வயிறோ விதுவே;

தோன்றுவான் மாதோ போர்க்களத் தானே !

-----------------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------------------------------------------------------------

சிற்றில் நல் தூண் பற்றிநின் மகன்

யாண்டு உளன்என வினவுதி; என் மகன்

யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓரும்

புலி சேர்ந்து போகிய கல் அளை போல

ஈன்ற வயிறோ இதுவே;

தோன்றுவான் மாதோ போர்க் களத்தானே !

-----------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-------------------------

வரி.(01). சிற்றில் = இந்தச் சிறிய வீட்டின் ; நல் தூண் பற்றி = வலிமையான தூணைக் கைகளால் பற்றிக் கொண்டு நிற்கும் தாங்கள் ; நின் மகன் = உன்னுடைய மகன்;

வரி.(02). யாண்டு உளனோ = எங்கிருக்கிறான் ; என வினவுதி = எனக் கேட்கிறீர்கள் ; என் மகன் = என்னுடைய மகன் ;

வரி.(03). யாண்டு உளன் = எங்கு இருக்கிறான் ; ஆயினும் அறியேன் = என்பதை நான் அறியேன் ; ஓரும் = இது ஒரு அசைச் சொல், இதற்குப் பொருள் பார்க்க வேண்டியதில்லை.

வரி.(04). புலி சேர்ந்து போகிய = புலி தங்கியிருந்துவிட்டுச் செல்லும் ; கல் அளை போல ; மலைக் குகையைப் போல ;

வரி.(5). ஈன்ற வயிறோ இதுவே =  மகனைப் பெற்ற வயிறு இங்கே இருக்கிறது ;

வரி.(06). தோன்றுவான் மாதோ போர்க்களத்தானே = (ஆனால்) அவன் போர்க்களத்தில் இருக்கக் கூடும் !

-----------------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

----------------------

இந்தச் சிறிய வீட்டின் வலிமையான தூணைப் பற்றிக் கொண்டு , “உன் மகன் எங்கே இருக்கிறான்எனக் கேட்கிறீர்கள். என் மகன் எங்கே இருக்கிறான் என்பதை யான் அறியேன். புலி குகையை விட்டுக் கிளம்பிய பின் அது எங்கு சென்றுள்ளது என்பதை யாரும் அறிய முடிவதில்லை !

அதுபோல அவனை ஈன்ற வயிறோ இங்கே இருக்கிறது; அவன் எங்கு சென்றுள்ளான் என்பதை யான் அறியேன். ஆனால் அவன் போர்க்களத்தில் தான் இருப்பான். அவனைக் காண விரும்பின் போர்க்களத்திற்குச் சென்று காண்பீராக !

---------------------------------------------------------------------------------------------------------

 காலக் கண்ணாடி:

-------------------------------- 

இப்பாடலிலிருந்து நாம் வரலாற்றுச் செய்திகள் சிலவற்றையும் தெரிந்துகொள்ள முடிகிறது !

(01)பண்டைத் தமிழகத்தில் தூண்களுடன் கூடிய குடியிருப்பு இல்லங்கள் கட்டப்பட்டு இருந்திருக்கின்றன என்பது இப்பாடல் மூலம் தெரியவருகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் கட்டடக் கலையில் சிறந்து விளங்கியிருக்கிறான் !

(02)தம் பிள்ளைகளை போர்க்களத்துக்கு அனுப்புவதற்கு பண்டைய தமிழகத் தாய்மார்கள் அச்சப்பட்டதில்லை என்பதும் வீர மிக்கவர்களாக அவர்கள் விளங்கியிருக்கிறார்கள் என்பதும் இப்பாடல் மூலம் விளங்குகிறது !

புறநானூறு என்பது பண்டைய தமிழகத்தின் வளத்தையும் மாண்பையும் உணர்த்தும் காலக் கண்ணாடியாகத் திகழ்கிறது என்பது இப்பாடல் மூலம் உறுதிப்படுகிறது ! 

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”தமிழ்ப் பணி மன்றம்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை)21]

{04-05-2022}

-----------------------------------------------------------------------------------------------------------

புறநானூறு (218) பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய !

எங்கோ பிறக்கும் மணிகள் தங்க அணிகலனில் இணைகையில் பெரும் மதிப்பைப் பெறுகிறது !

-------------------------------------------------------------------------------------------------------

பாடலின் பின்னணி:

--------------------------------------

கோப்பெருஞ் சோழன், பிசிராந்தையார் இருவரும் ஒருவரையொருவர் நேரில் பாராமலேயே நட்புப் பூண்டிருந்தனர். தான் பெற்ற  மக்களால் ஏற்பட்ட மனவருத்தத்தில் உயிரை மாய்த்துகொள்ள  எண்ணி உண்ணாமல் உறங்காமல் வடக்கு நோக்கி அமர்ந்திருந்தான் கோப்பெருஞ் சோழன். அவனைக் காண பிசிராந்தையார் வந்தார். சோழனின் நிலையை எண்ணி வருந்தி அவரும் வடக்கிருந்து மன்னனுடனேயே உயிரைத் துறந்தார். நட்பால் இணைந்தவர்கள் இறப்பிலும் ஒன்றிணைந்தார்கள் !

இந்த நிகழ்வு தூண்டு கோலாக அமைய புலவர் கண்ணகனார் ஒரு பாடலைப் படைக்கிறார். இதோ அந்தப் பாடல்:--

---------------------------------------------------------------------------------------------------------

பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய

மாமலை பயந்த காமரு மணியும்

இடைபடச் சேய ஆயினும் தொடைபுணர்ந்(து)

அருவிலை நன்கலம் அமைக்கும் காலை

ஒருவழித் தோன்றியாங்(கு) என்றும் சான்றோர்

சான்றோர் பாலர் ஆப

சாலார் சாலார் பாலர் ஆகுபவே.

--------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-------------------------------------

வரி.(01) பொன்னும் = தங்கமும் ; துகிரும் = பவளமும் ; முத்தும் =

சிப்பி விளை நன் முத்தும்;

வரி.(02) மாமலை = உயர்ந்த மலை ; பயந்த = தருகின்ற ; காமரு

மணியும் = அழகிய மாணிக்கமும்

வரி.(03) இடைபட = தோன்றுகின்ற இடங்கள் ; சேய ஆயினும் =

ஒன்றுக்கொன்று மிகத் தொலைவாயினும் ; தொடை புணர்ந்து =

இவற்றையெல்லாம் பதித்து;

வரி.(04) அருவிலை நன்கலம் = விலையுயர்ந்த அணிகலன்

செய்கையில் ;

வரி.(05) ஒருவழித் தோன்றியாங்கு = அனைத்தும் ஓரிடத்தில்

சேர்ந்திருப்பது போல ; என்றும் சான்றோர் = சான்றோர்கள்

எப்போதும் ;

வரி.(06) சான்றோர் பாலர் ஆகுப ; ஒருவரையொருவர் நாடிச்

சென்று ஒன்றிணைவார்கள்

வரி.(07) சாலார் சாலார் = சான்றோர் அல்லாதவர்களும் ; பாலர்

ஆகுபவே = ஒருவரையொருவர் நாடி ஒன்றிணைவார்கள்.

--------------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

----------------------

தங்கம் மண்ணிற்குடியிலிருந்து தோண்டி எடுக்கப்படுகிறது. கடலில் உருவாகும்   பவளப்பாறைகளிலிருந்து பவளம் பெறப்படுகிறது. மக்கள்  விரும்பும் மாணிக்கக் கற்கள் , உயர்ந்த மலைகளில் பிறக்கின்றன. இவ்வாறாக இவை ஒவ்வொன்றும் பிறக்குமிடங்கள் மாறுபட்டவை; ஒன்றுக்கொன்று இடைவெளியும் தொலைவும் உடையவை !

ஆனால், வற்றைக்கொண்டு விலையுயர்ந்த ணிகலன்கள் செய்யும்போது, அவை அவ்வணிகலனில் பதியப்பெற்று ஒரே இடத்தில் ஒன்றாகத் தோன்றுகின்றன. அதுபோல், நல்லியல்புகள் அமைந்த  சான்றோர் தொலைவிலிருந்தாலும், ஒருவரையொருவர் நாடி ஒன்றுசேர்வர். (இதனால் பயனுண்டு). நல்லியல்புகளற்ற கீழோரும் எங்கிருந்தாலும் ஒருவரையொருவர் நாடிச் சென்று இணைந்து கொள்வார்கள். (இதனால் பயனேதுமில்லை) !

எனவே, நாம் முதலில் நம்மை மதிப்புமிக்க பண்புடையவர்களாக ஆக்கிக்கொண்டால், அச்சான்றாண்மை தன்னினமான சான்றோரிடம் நம்மைக்கொண்டு சேர்க்கும் என்பதே இப்பாடல் சொல்லும் கருத்து !

நம் வாழ்க்கைக்கு வேண்டிய மணியான ஒழுக்கங்களை, விலையுயர்ந்த மணிகளை உவமைகளாகச் சொல்லி , நமக்கு நல்வழி காட்டுகிறார் கண்ணகனார் என்னும் நல்லிசைப்புலவர் !

-------------------------------------------------------------------------------------------------------

 காலக் கண்ணாடி:

-----------------------------------

இப்பாடலிலிருந்து நாம் வரலாற்றுச் செய்திகள் சிலவற்றையும் தெரிந்துகொள்ள முடிகிறது !

(01)பண்டைத் தமிழர்கள்  ஒன்பான்  (ஒன்பது) மணிகளையும் அவற்றைக் கொண்டு தங்கத்தினாலான அணிகலன்களையும் செய்வதில் வல்லவர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள் !

(02)சான்றோர்கள் தம்மையொத்த சான்றோர்களை நாடிச் சென்று அவர்களிடம் நல்லுறவு பூண்டு மக்களுக்கு நல்வழி காட்டியிருக்கிறார்கள் ! கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியிருக்கிறார்கள் !

புறநானூறு என்பது பண்டைய தமிழகத்தின் வளத்தையும் மாண்பையும் உணர்த்தும் காலக் கண்ணாடியாகத் திகழ்கிறது என்பது எவரும் மறுக்கமுடியாத  உண்மையாகும் !

-------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 21]

{04-05-2022}

-------------------------------------------------------------------------------------------------------

செவ்வாய், மே 03, 2022

புறநானூறு (351) படுமணி மருங்கின பணைத்தாள் யானையும் !

இளவரசியை மணக்காமல் இவர்கள் அமைதி கொள்ளப் போவதில்லை !

 --------------------------------------------------------------------------------------------------------

 பாடலின் பின்னணி :

 ----------------------------------------

குறுநில மன்னன் ஒருவனின் மகளை மணந்துகொள்ள அண்டை நாட்டு மன்னர்கள் சிலர் விரும்புகின்றனர். ஆனால் மகளைப் பெற்ற மன்னன் அவர்களில் யாருக்கும் அவளை மணம் செய்துகொடுக்க விரும்பவில்லை.  எப்படியும் இளவரசியை அடைந்தே தீருவது என்னும் கருத்துடன் அண்டை நாட்டு மன்னர்கள் தங்கள் படைகளுடன் இவன் நாட்டுக்கு வருகின்றனர். இவனது கோட்டைக்கு வெளியே அவர்களது  படைகள் அணி வகுத்து நிற்கும் ஆரவாரம் கேட்கிறது !

இந்தச் சூழ்நிலையைக் கண்ணுற்ற படைமங்க மன்னியார் என்னும் புலவர்இளவரசியை மணம் செய்து கொடுக்க  மன்னனோ உடன்படவில்லை; வந்திருக்கும் மன்னர்களோ அவளை அடையாமல் திரும்பப் போவதில்லை. போர் மூளுமோ அழகிய வளம் பொருந்திய இந்த நல்லூர் இனி என்னவாகுமோ என்று வருந்துகிறார்  புலவர் !  இதோ அந்தப் பாடல்:--

----------------------------------------------------------------------------------------------------------

படுமணி மருங்கின பணைத்தாள் யானையும்

கொடிநுடங்கு மிசைய தேரும் மாவும்

படையமை மறவரொடு துவன்றிக் கல்லெனக்

கடல்கண் டன்ன கண்ணகன் தானை

வென்றெறி முரசின் வேந்தர் என்றும்

வண்கை எயினன் வாகை அன்ன

இவள்நலம் தாராது அமைகுவர் அல்லர்;

என்னா வதுகொல் தானே; தெண்ணீர்ப்

பொய்கை மேய்ந்த செவ்வரி நாரை

தேங்கொள் மருதின் பூஞ்சினை முனையின்

காமரு காஞ்சித் துஞ்சும்

ஏமம்சால் சிறப்பினிப் பணைநல் லூரே !

----------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

----------------------------------------

வரி.(01). படுமணி = ஒலிக்கும் மணி ; மருங்கு = யானையின் விலாப் பக்கம் ; பணைத் தாள் = பருத்த கால் ;

வரி.(02). கொடி நுடங்கு = கட்டப்பட்ட கொடி அசைய ; மிசை = மேல் ; தேரும் = தேர்ப்படையும் ; மாவும் = குதிரைகளும் ;

வரி.(03) படையமை மறவரொடு = படை வீரர்களோடு ; துவன்றி = நெருக்கமாக ; கல்லென = சேர்ந்து ஒலியெழுப்ப

வரி.(04). கடல் கண்டன்ன = கடல் போன்ற ; கண் அகன் தானை = பரந்து விரிந்த படைகள் ;

வரி.(05) வென்று எறி முரசின் = வெற்றி முரசு கொட்டுகின்ற; வேந்தர் = அண்டை நாட்டு மன்னர்கள்

வரி.(06) வண்கை எயினன் வாகை அன்ன = வள்ளல் எயினனது வாகை என்னும் ஊரைப் போன்ற செழுமை பொருந்திய ;

வரி.(07) இவள் நலம் தாராது = இவளைத் திருமணம் செய்யாது ; அமைகுவர் அல்லர் = ஓயமாட்டார்கள்.

வரி.(08) என்னாவது கொல் தானே = என்ன நடக்குமோ தெரியவில்லை ; தெண்ணீர் = தெளிந்த நீரையுடைய  ;

வரி.(09) பொய்கை மேய்ந்த செவ்வரி நாரை = குளத்து மீன்களைப் பிடித்து உண்ட நாரைகள் ;

வரி.(10) தேங்கொள் மருதின் = தேன்மலர் நிறைந்த மருத மரத்து ; பூஞ்சினை முனையின் = பூஞ்கிளைகள் வேண்டாமென வெறுத்து ;

வரி.(11) காமரு காஞ்சித் துஞ்சும் = அழகிய காஞ்சி மரத்தின் கிளைகளுக்குச் சென்று அமர்ந்து அமைதியாக உறங்கும் ;

வரி.(12)  ஏமம் சால் = பாதுகாப்பு நிறைந்த ; சிறப்பின் = சிறப்புடைய ; பணை நல்லூரே = மருத நிலம் நிறைந்த இந்த நல்லூர். (இனி என்னவாகுமோ ?)

----------------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

---------------------

முதுகின் இருபுறமும் மணிகள் தொங்கவிடப்பட்டு ஒலியெழுப்ப, பருத்த கால்களையுடைய யானைகள்  இந்தக் கூட்டத்தில் காணப்படுகின்றன. கொடிகள் கட்டப்பட்ட தேர்ப்படைகள் இருக்கின்றன. விரைந்து நடைபோடும் குதிரைகளும், படைவீரர்களும் காணப்படுகின்றனர். இத்தகைய கடல் போன்ற பெரிய படையுடன் வெற்றிமுரசு கொட்டும் வேந்தர்கள் சிலர் இவளைத் திருமணம் செய்துகொள்ள வந்துள்ளனர் !

மகளைப் பெற்ற இந்த நாட்டு மன்னனோ அவர்கள் விருப்பத்திற்கு உடன்படவில்லை. ஆனால், முப்படைகளுடன் வந்துள்ள அண்டை நாட்டு மன்னர்கள் இவளை அடையாது திரும்ப மாட்டார்கள். போர் உறுதியாக நடக்கும் என்று தான் தோன்றுகிறது !

வளம் மிக்க இந்த நாட்டில், பொய்கையில் துள்ளித் திரியும் மீன்களைப் பிடித்து உண்டுவிட்டு நாரைகள் எல்லாம் மருத மரக் கிளைகளில் தங்காமல் காஞ்சி மரம் தான் தமக்குப் பாதுகாப்பானது என்று கருதி அதன் கிளைகளில் சென்றமர்ந்து இளைப்பாறுகின்றன. போர் மூண்டுவிட்டால் இந்த நாரைகள் இனி எங்கு செல்லும் ? இந்த வளநாடும் இனி என்னவாகும் ?

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 20]

{03-05-2020}

----------------------------------------------------------------------------------------------------------