பக்கங்கள்

சனி, ஏப்ரல் 30, 2022

வீரராகவர் பாடல் (07) மாலே நிகராகும் சந்திரவாணன் !

சந்திரவாணன் நாட்டில் தேன்மாரி பெய்கிறதாம் !

-------------------------------------------------------------------------------------------------------

பிறவியிலேயே கண்பார்வை இழந்தவர் என்பதால் “அந்தகக் கவி” என்னும் அடைமொழி பெற்றவர் வீரராகவ முதலியார். “அந்தகம்” என்னும் வடமொழிச் சொல்லுக்கு பார்வை யின்மை என்று பொருள். பார்வையை இழந்து விட்டாலும் படிப்புத் திறனை அவர் இழந்து விடவில்லை ! 

தமிழைத் துளக்கமறக் கற்று   தமிழ்ப் புலமை அடைந்தவர் அந்தகக்கவி வீரராகவ முதலியார் !இவருடைய பாடல்கள் சொற்சுவையும் பொருள் நயமும் உடையவை. ஒருமுறை இவர் சந்திரவாணன் என்பவர் மீது கோவை பாடிக்கொண்டிருந்தார் !

-------------------------------------------------------------------------------------------------------

 அவர் பாடிய கோவைச் செய்யுள் வருமாறு:-

-------------------------------------------------------------------------------------------------------

மாலே நிகராகுஞ் சந்திர வாணன் வரையிடத்தே

பாலே ரிபாயச்செந் தேன்மாரி பெய்யநற் பாகுகற்கண்

டாலே யெருவிட முப்பழச் சாற்றி னமுதவயன்

மேலே முளைத்த கரும்போவிம் மங்கைக்கு மெய்யெங்குமே !

-------------------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-------------------------------------------------------------------------------------------------------

மாலே நிகராகும் சந்திரவாணன் வரை இடத்தே !

பால் ஏரி பாயச் செந்தேன் மாரி பெய்ய நற்பாகு கற்கண்டாலே !

எருவிட முப்பழச் சாற்றின் அமுத வயல் மேலே முளைத்த

கரும்போ இம் மங்கைக்கு மெய் எங்குமே !

-------------------------------------------------------------------------------------------------------

இந்தச் செய்யுளை வீரராகவர் தன் மாணவனுக்குச் சொல்லி அவரை ஏட்டில் எழுதப் பணித்தார். அதனைக் கேட்டுக்கொண்டிருந்த திருப்பனைங்காட்டைச் சேர்ந்த அம்மைச்சி என்னும் மங்கை நல்லாள் கவிராயருக்குக் கண்தான் கெட்டது மதியும் கெட்டதோ? கரும்பு சேற்றில் முளைக்காது என்பது தெரியவில்லையேஎனச் சொன்னார் !

இதனைச் செவிமடுத்த புலவர் அம்மங்கையின் கூற்றை ஆய்ந்து அவள் சொல்வது சரிதான் என்பதை உணர்ந்து தன் மாணவனிடம் கொம்பை வெட்டி காலை நடுஎன்றார். மாணவரும் அதனைத் தெரிந்து கொண்டு சேற்றின் என்பதனைச் சாற்றின் என மாற்றம் செய்து படித்தார். கேட்டுக் கொண்டிருந்த புலவர் பெருமக்கள் யாவரும் மிக்க களிப்பெய்தனர் !
-------------------------------------------------------------------------------------------------------

பாடலின் பொருள்:

-----------------------------------

திருமாலைப் போன்று புகழ் பெற்று விளங்கும் சந்திரவாணன் ஆள்கின்ற நாட்டில் ஏரிகளில் இருந்து  பால் பெருக்கெடுத்துப் பாய்ந்து வயல்கள் எல்லாம் செழித்து விளங்க, வானிலிருந்து செந்தேன் மாரியாகப் பொழிகிறது !

கற்கண்டுப் பாகு  வயல்களுக்கு எருவாகிட அவ்வயல்களில் முக்கனிச் சாறு தேங்கி நிற்க  அச்சாற்றில் விளைந்த கரும்பின் சுவையை ஒத்திருக்கிறது இம்மங்கையின் மேனி !

-------------------------------------------------------------------------------------------------------

கொம்பை வெட்டிக் காலை நடு:

-------------------------------------------------------------------------------------------------------

இதன் பொருள் என்ன ? ”முக்கனிச் சேற்றின் அமுத வயல்” என்று புலவர் முன்னதாகச் சொன்னார். அம்மைச்சி என்னும் மங்கை ”கரும்பு சேற்றில் முளைக்காது” என்றதும் புலவர் “சேற்றில்” என்பதில் வரும் கொம்பை (இரட்டைச் சுழி) வெட்டிவிட்டு, காலை நடு என்றார். அதாவது “சேற்றில் “ என்பதை  “சாற்றில்” என்று மாற்றியமைத்தார் புலவர் !

குழுமியிருந்த அவைக்களப் புலவர்கள் யாவரும் வீரராகவரின் கவித்திறத்தை விதந்து பாராட்டினர்; நெஞ்சார வாழ்த்தினர் !

இப்படி ஓர் அருமையான பாடலைப் பாடிய கவிராயர், பாடலைக் கேட்க வந்த மங்கை சொன்ன திருத்தத்தையும் ஏற்றுச் செயல்பட்டது அவரது பணிவையும் பெருந்தன்மையையும் காட்டுகிறது !

------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 17]

{30-04-2022}

-------------------------------------------------------------------------------------------------------

வீரராகவர் பாடல் (06) முன்னாள் இருவர்க்கும் யாக்கை !

பின்னாளில் நம் நிலை எப்படியோ ?

----------------------------------------------------------------------------------------------------

அந்தகக் கவி வீரராகவ முதலியார் தன் மனைவியுடன் உரையாடுவது போல் காட்சியை அமைத்து எழுதியது இந்தப் பாடல் !

வாழ்க்கையே நிலையில்லாதது. அதிலும் ஒவ்வொரு பருவமும் நிலையின்றி மாறிக்கொண்டே இருக்கக்கூடியது. மாறிவரும் வாழ்க்கைப் பருவங்களைப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்தப் பாடல் !

----------------------------------------------------------------------------------------------------

முன்னா ளிருவர்க்கும் யாக்கை யொன்றாக முயங்கினமால்

பின்னாட் பிரியன் பிரியை யென்றாயினம் பேசலுறும்

இந்நாட் கொழுநன் மனைவி யென்றாயின மின்னமுமோர்

சின்னாளி லெப்படியோ வையநீயின்று செப்புகவே.(4)

------------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------------------

முன்னாள் இருவர்க்கும் யாக்கை ஒன்றாக முயங்கினம் ஆல்

பின்னாள் பிரியன் பிரியை என்று ஆயினம் பேசல் உறும்

இந்நாள் கொழுநன் மனைவி என்று ஆயினம் இன்னமும் ஓர்

சின்னாளில் எப்படியோ ஐய நீ இன்று செப்புகவே !

-----------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

-----------------------

முன்பு களவொழுக்கம் பூண்டிருந்த காலத்தில் (முன்னாளில்) ஒருவருக்குள் ஒருவராக நம் உடம்பைப் புகுத்திக்கொண்டு ஓருடம்பாய்க் கிடந்தோம். பின்னர்  காதலன் என்றும் காதலி என்றும் ஆனோம். இப்போது கணவன் மனைவி என்று வாழ்கிறோம். சில நாள்களுக்குப் பிறகு (நம்மில் ஒருவர் காலமானால்)  எப்படி இருப்போமோ ?

-----------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

------------------------

முன்னாள் = பிறருக்குத் தெரியாமல் மறைந்து மறைந்து பழகிய களவொழுக்கக் காலத்தில் ; இருவர்க்கும் யாக்கை ஒன்றாக = ஓருடல் ஈருயிராக ; முயங்கினமால் = இணைந்து கிடந்தோம் ; பின்னாள் = அதற்குப் பிந்திய காலத்தில் ; பிரியன் பிரியை ன்று ஆயினம் = காதலன் காதலி என்று நம்மை ஊருக்கு வெளிப்படுத்திக் கொண்டு வாழ்ந்தோம் ; 

பேசலுறும் இந்நாள் = இப்பொழுது ; கொழுநன் மனைவி ன்றாயினம் = திருமணம் செய்துகொண்டு கணவன் மனைவியாக வாழ்ந்து வருகிறோம் ; இன்னமுமோர் சின்னாளில் = இன்னும் சிறிது காலம் சென்ற பிறகு ; எப்படியோ = நம்மில் ஒருவர் மறைந்த பிறகு என்னவாகுமோ ? ; ஐய நீ ன்று செப்புகவே = என் மனைவியே நீ செப்புவாயாக !

----------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 17]

{30-04-2022}

-----------------------------------------------------------------------------------------------------

வீரராகவர் பாடல் (05) வாழுமிலங்கைக் கோமானில்லை !

தம்பிக்கு எதிராக கைகளில் வில்லை ஏந்திடலாமா ?

-----------------------------------------------------------------------------------------------------

சீர்காழிப் பகுதியை ஆண்ட சிற்றரசன் அபிராமன். அவனுடைய தம்பி அபிராமனுக்கு எதிராகச் செயல்பட்டதால், அவனுடன் போரிட்டு அடக்க முடிவு செய்து, கைகளில் வில்லுடன் போர்க்களம் புக முற்பட்டான் அபிராமன் !

இதைக் கேள்விப்பட்ட வீரராகவர், அபிராமனிடம் சென்று பரதனுக்கு எதிராக இராமன் போர் தொடுத்ததில்லை. அபிராமன் தன் தம்பிக்கு எதிராக வில்லைக் கையில் எடுக்கலாமா என்று சொன்ன நல்லுரை அபிராமனின் போர் முடிவைக் கைவிடச் செய்தது !

சிற்றரசன்  அபிராமனை இராமாயணக் கதை இராமனோடு ஒப்பிட்டு வீரராகவர் பாடிய பாடல் இதோ:

-----------------------------------------------------------------------------------------------------

வாழுமிலங்கைக் கோமானில்லை, மானில்லை !

ஏழுமரா மரமோ வீங்கில்லை - ஆழி

அலையடைத்த செங்கை யபிராமா வின்று

சிலையெடுத்த வாறெமக்குச் செப்பு.

-----------------------------------------------------------------------------------------------------

 பொருளுரை:

-------------------------

(அபி) ராமா ! நீ இலங்கைக் கோமான் இராவணனும் இல்லை; மாய மானை அனுப்பி சீதாபிராட்டியை ஏமாற்றியவனும் இல்லை; ஏழு மரா மரங்களுக்குப் பின்புறம் ஒளிந்திருந்து அம்பு விட்டு வாலியைக் கொன்றவனும் இல்லை ! நீ இராமனில்லை;  உன் பெயர் அபிராமன். சீர்காழி நகருக்குள் கடல் அலை பெருகி வந்தமையால், அதைத் தடுக,  தடுப்புச் சுவர் அமைத்து மக்களைக் காத்தவன் நீ ! அத்தகைய மாட்சிமை பொருந்திய நீ உன் தம்பிக்கு எதிராக  உன் கைகளில்  சிலையை (வில்) எடுக்கலாமா ? சொல் !

------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------

வாழும் இலங்கைக் கோமான் இல்லை = இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் நீ இராவணனுமில்லை  ; மானில்லை = மாயமானை அனுப்பி யாரையும் ஏமாற்றியவனும் இல்லை ; ஏழு மரா மரமோ ஈங்கு இல்லை = ஏழு மரா மரங்களும் இங்கு இல்லை ; ஆழி அலை அடைத்த = கடல் அலைகள் பெருகி வந்த போது அதற்குத் தடுப்புச் சுவர் எழுப்பி காப்புச் செய்த நீ (இராமாயணக் காலத்து இராமனில்லை; இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் அபிராமன்)  ; செங்கை அபிராமா = சிவந்த கைகளையுடைய அபிராமா ; இன்று = இத்தகைய மாண்புடைய நீ இப்பொழுது ; சிலை எடுத்த ஆறு = தம்பிக்கு எதிராக உன் கைகளில் வில்லை ஏந்தியது ஏன் ; எமக்குச் செப்பு = எனக்குச் சொல்வாயாக !

-------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 17]

{30-04-2022}

-------------------------------------------------------------------------------------------------------

வீரராகவர் பாடல் (04) செஞ்சுடரின் மைந்தனையும் !

பரதனையும் இராமனையும் பார் !

-----------------------------------------------------------------------------------------------------

சீகை எனப்படும் சீர்காழியில் வாழ்ந்து வந்த ஒரு சிற்றரசன் இராமன்; இவரது முழுப்பெயர் அபிராமன். இவருடைய தம்பி இவருக்கு எதிராகச் செயல்பட்டதால் தம்பி மீது போர் தொடுக்க எண்ணிக் கிளர்ந்தெழுந்தார் அபிராமன் !

இதைக் கேள்விப்பட்ட வீரராகவர் அபிராமனிடம் சென்று, வில் வீரர்களான  கன்னன் (சூரியனின் மகன்), இராவணன், அருச்சுணன் ஆகியோரை நினைத்துக்கொண்டு வில்லைக் கையில் எடுக்காதே !

பரதனுக்கு நாட்டைத் தந்த இராமனையும், இராமன் பாதுகையை அரியணை ஏற்றி வைத்துக்கொண்டு நாடாண்ட பரதனையும் எண்ணிப்பார். தம்பி மீது போர் தொடுக்கும் எண்ணத்தைக் கைவிடுவாயாக என்று அபிராமனிடம் எடுத்துச் சொன்னார் !

மனம் தெளிவடைந்த அபிராமன் தம்பி மீது போர் தொடுக்கும் திட்டத்தைக் கைவிட்டார் ! வீர்ராகவர் தனது கருத்தை ஒரு வெண்பா மூலம் அபிராமனுக்குத் தெரிவித்தார்.

------------------------------------------------------------------------------------------------------

இதோ அந்த வெண்பா !

------------------------------------------------------------------------------------------------------

செஞ்சுடரின் மைந்தனையுந் தென்னிலங்கை வேந்தனையும்

பஞ்சவரிற் பார்த்தனையும் பாராதே விஞ்சு

விரதமே பூண்டிந்த மேதினியை யாண்ட

பரதனையும் ராமனையும் பார்.

------------------------------------------------------------------------------------------------------

  சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------------------

செஞ்சுடரின் மைந்தனையும் தென் இலங்கை வேந்தனையும்

பஞ்சவரில் பார்த்தனையும் பாராதேவிஞ்சு

விரதமே பூண்டு இந்த மேதினியை ஆண்ட

பரதனையும் இராமனையும் பார் !

-----------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

-----------------------------------------------------------------------------------------------------

அபிராமா ! சிறந்த வில் வீரர்களான சூரியதேவனின் மைந்தனாகிய கர்ணனாகவும், இலங்கை மன்னனாகிய இராவணனாகவும், பாண்டவர்களில் ஒருவனான அருச்சுனனாகவும் உன்னை  எண்ணிக்கொண்டு உன் தம்பிக்கு எதிராகப் போர் புரிய வில்லினை எடுக்காதே !

நாடாளும் உரிமையைப் பரதனுக்கு விட்டுக் கொடுத்த இராமனையும், அண்ணன் இருக்கையில் தான் அரியணையில் அமர்வதா  என்று கூறி அண்ணனின் மிதியடிகளை அரசனின் இருக்கையில் வைத்து, அண்ணன் சார்பாக ஆட்சியைக் கவனித்த பரதனையும் எண்ணிப்பார் !

பெருந்தன்மையாக நடந்துகொள்வதில் தான் ஒரு அரசனின் மாட்சிமை உலகிற்கு வெளிப்படும். எனவே உன் தம்பி மீது போர் தொடுக்கும் எண்ணத்தைக் கைவிடுவாயாக !

-----------------------------------------------------------------------------------------------------

சொற்பொருளுரை:

-----------------------------------------------------------------------------------------------------

செஞ்சுடர் = சூரியன்; மைந்தன் = மகன்; தென்னிலங்கை = தெற்கில் உள்ள இலங்கை நாடு; வேந்தனையும்= இராவணனையும்; பஞ்சவரில் = பஞ்ச பாண்டவரில் ; பார்த்தனையும் = அருச்சுனனையும் ; பாராதே = உன்னை அவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்காதே; விரதமே பூண்டு = மனத்தில் உறுதி ஏற்று ; மேதினி = நாட்டை ;

கன்னன்