பக்கங்கள்

வியாழன், ஆகஸ்ட் 12, 2021

நான்மணிக் கடிகை (28) அலைப்பான் பிறவுயிரை ஆக்கலும் குற்றம் !

 

நான்மணிக்கடிகை !

------------------------------------------------------------------------------------------------------------

சங்க காலத்திய நூலான நான்மணிக்கடிகை 106 வெண்பாக்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலிலும் நந்நான்கு கருத்துகள் வலியுறுத்தப்படுகின்றன ! மொத்தம் 106 பாடல்களைக் கொண்ட இந்நூலை இயற்றியவர் விளம்பி நாகனார் என்னும் பெரும் புலவர். இதிலிருந்து ஒரு பாடல் !

-------------------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (28)

---------------------------

அலைப்பான் பிறவுயிரை ஆக்கலும் குற்றம்

விலைப்பாலில் கொண்டூன் மிசைதலும் குற்றம்

சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம்

கொலைப்பாலும் குற்றமே யாம்.

-------------------------------------------------------------------------------------------------------------

பொருள்:

--------------

விலங்குகள்பால் உண்மையான பரிவு கொள்ளாமல், அவற்றைக் கொன்று உண்பதற்காகவே ஆடு, மாடு, கோழி, பன்றி போன்ற உயிரினங்களுக்கு இரைபோட்டு வளர்த்தல் ஞாயப்படுத்த முடியாத குற்றமாகும் !

 

இரக்கமில்லாமல் வேறொரு மனிதன் கொன்று விற்றாலும் கூட விலைகொடுத்து வாங்கி வந்து  பிற உயிரினங்களின் இறைச்சியை, சமைத்துப் பக்குவபடுத்தி உண்பதும் ஞாயப்படுத்த முடியாத குற்றமாகும் !

 

எத்துணைச் சினவுணர்வை உன்மனதில் ஒருவன் ஏற்படுத்தினாலும் கூட, சொல்லக் கூடாத, பண்பாடில்லாத, அருவருப்பான சொற்களை அவனை நோக்கிக் சொல்லுதலும் ஞாயப்படுத்த முடியாத குற்றமாகும் !

 

அதுபோல், தாய்க்கு நிகரான நம் மொழியைச் சிதைத்துக் கொலை செய்தலும், நண்பர்கள் நம் மீது வைத்திருக்கும் நட்புணர்வைச் சிதைத்து நட்புக் கொலை செய்தலும், நற்பண்புகளைச் சிதைத்துப் பண்புக் கொலை செய்தலும், நம்பிக்கைக் கொலை போன்ற பிற கொலை வகைகளும் எவ்வகையிலும் ஞாயப்படுத்த முடியாத குற்றங்களேயாகும் !

-----------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-----------------------------------

அலைப்பான் = கொன்று உண்பதற்காக ; பிற உயிரை = ஆடு, மாடு, கோழி, பன்றி போன்ற பிற உயிர்களை ; ஆக்கலும் குற்றம் = வீட்டில் வளர்ப்பதும் குற்றம் ; விலைப்பாலின் = விலை கொடுத்து ; ஊன் கொண்டு = இறைச்சியைப் பெற்று வந்து ; மிசைதலும் குற்றம் = சமைத்து உண்பதும் குற்றமாகும் ; சொலற்பால அல்லாத = சொல்லும் வகையின அல்லாத சொற்களை ; சொல்லுதலும் குற்றம் = உரைத்தலும் குற்றம் ; கொலைப்பாலும் = மொழிக்கொலை, நட்புக் கொலை, பண்புக் கொலை, நம்பிக்கைக் கொலை போன்றவையும் ; குற்றமே ஆம் = குற்றமே ஆகும்.

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.ஆ:2052, கடகம் (ஆடி),12]

{28-07-2021}

------------------------------------------------------------------------------------------------------------