பக்கங்கள்

வெள்ளி, பிப்ரவரி 19, 2021

நான்மணிக் கடிகை (08) திருவொக்கும் தீதில் ஒழுக்கம் !

நேர்மையான வாழ்வே அறவாழ்வு ஆகும் !

பதினெண் கீழ்க் கணக்கு என நமது முன்னோர்களால் வகைப்படுத்தப் பெற்றுள்ள நூல்களுள் ஒன்று நான்மணிக் கடிகை. கடைச் சங்க கால நூலான இதிலிருந்து ஒரு பாடல் !

---------------------------------------------------------------------------------------------------

பாடல் (08)

--------------------------------------------------------------------------------------------------

திருவொக்கும் தீதில் ஒழுக்கம்; பெரிய

அறனொக்கும் ஆற்றின் ஒழுகல்; பிறனைக்

கொலையொக்குங் கொண்டுகண் மாறல்;  புலையொக்கும்

போற்றாதார் முன்னர்ச் செலவு.

----------------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

----------------------

தீய எண்ணம் துளியும் கலவாத நல்லொழுக்கமானது  கிடைத்தற்கரிய பெரிய செல்வத்துக்கு ஒப்பானது !

வாழ்க்கையில் நேர்மையுடன் முறையாக ஒழுகுதல் மிகச் சிறந்த அறத்துக்கு ஒப்பானதாகும் !

ஒரு மனிதனுடன் நட்புப் பூண்டு ஒழுகிவிட்டு, பிறகு அதை மறந்து அவனைப் பற்றிப் புறங் கூறுதல் அவனைக் கொலை செய்வதற்கு ஒப்பாகும் !

அது போல், தம்மை மதியாதாரிடத்திற் சென்று அவரிடம் ஒன்றைக் கேட்டுக் கெஞ்சுதல்  என்பது மிக மிக இழிய செயலுக்கு ஒப்பாகும் !

----------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

------------------------------

திரு ஒக்கும் = கிடைத்தற்கரிய செல்வத்திற்கு ஒப்பானது; ஆற்றின் ஒழுகல் = வாழ்க்கையில் நேர்மையுடன் முறையாக ஒழுகுதல்; பிறனை = ஒரு மனிதனை; கொலை ஒக்கும் = கொலை செய்வதற்கு ஒப்பாகும்; கொண்டு = நட்புக் கொண்டு ; கண் மாறல் = பின்பு நட்பை மறந்து புறங்கூறல்; புலை  ஒக்கும் = மிக மிக இழிந்த செயலுக்கு ஒப்பாகும்; போற்றாதார் = நம்மை மதியாதார் ; முன்னர்ச் செலவு = முன்பாகச் சென்று உதவி கேட்டுக் கெஞ்சுதல்.

----------------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

----------------------------------

நல்லொழுக்கம்  செல்வம் போன்றது; முறையான இல்லற ஒழுக்கம் துறவறத்தைப் போன்றது; பிறரைப்  புறங்கூறல் அவரைக் கொலை செய்வதற்கு ஒப்பானது; தம்மை மதியாரை தாம் மதித்தல் இழிதகைமை ஆகும் !

------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2052,கும்பம் (மாசி),07]

{19-02-2021}

------------------------------------------------------------------------------------------------------

திருவொக்கும் தீதில்.

நான்மணிக் கடிகை (07) கல்லிற் பிறக்கும் கதிர்மணி !

அருளிற் பிறக்கும் அறநெறி !

----------------------------------------------------------------------------------------------------------

விளம்பி நாகனார் என்னும் பெரும் புலவர் இயற்றிய நான்மணிக் கடிகை என்னும் நூல் கி.பி. 2-ஆம்  நூற்றாண்டு வாக்கில் தோன்றிய இலக்கியம். பதினெண் கீழ்க் கணக்கு என்னும் நூற் பிரிவைச் சார்ந்தது இந்நூல். இதிலிருந்து ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------------------------

பாடல்: எண் (07).

----------------------------------------------------------------------------------------------------------

கல்லிற் பிறக்குங் கதிர்மணி; காதலி

சொல்லிற் பிறக்கும் உயர்மதம்மெல்லென்று

அருளிற் பிறக்கும் அறநெறி; எல்லாம்

பொருளிற் பிறந்து விடும்.

-----------------------------------------------------------------------------------------------------------

கண்களைப் பறிக்கும்  ஒளிமிகுந்த மணிகள் எல்லாம் கற்களில் (கல் வடிவில்) பிறக்கின்றன !

ஆடவனுக்கு எழுச்சி தரும்  வீரம் அவனால் விரும்பப்படும் காதலியின் சொல்லில் பிறக்கிறது !

மனதில் ஊறும் மென்மையான அருளுணர்வில் பிறக்கின்றன  அறம் பொருந்திய நல்வழிகள் !

ஆனால்,  அவ்வறத்தோடு இன்பம் முதலிய எல்லாப் நற்பேறுகளும்  செல்வத்தினாற்  கூடப் பிறக்கின்றன !

------------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-----------------------------------

கல்லில் = கல் வடிவில்; கதிர்மணிகள் = ஒளி பொருந்திய வைரம் முதலிய கற்கள்; உயர்மதம் = எழுச்சி மிக்க வீர உணர்வு; மெல்லென்று = மென்மையான ; அறநெறி = அறம் பொருந்திய நல்வழிகள்;  பொருளில் = செல்வத்தினால் .

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2052, கும்பம்(மாசி),07]

{19-02-2021}

-----------------------------------------------------------------------------------------------------------------------

கல்லிற் பிறக்கும்.

நான் மணிக் கடிகை (06) கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும் !

சேற்றில் தான் செந்தாமரை பிறக்கிறது !

----------------------------------------------------------------------------------------------------------

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய நான்மணிக் கடிகை  கடவுள் வாழ்த்து உள்பட 106 பாடல்களைக் கொண்டது.. இதை இயற்றியவர் விளம்பி நாகனார் என்னும் பெரும் புலவர். இதிலிருந்து ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------------------------

பாடல்: எண். (06)

-----------------------------------------------------------------------------------------------------------

கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும்; மான் வயிற்றில்

ஒள்ளரி  தாரம்  பிறக்கும்;  பெருங்கடலுள்

பல்விலைய முத்தம் பிறக்கும்; அறிவார்யார்

நல்லாள் பிறக்குங் குடி.

-----------------------------------------------------------------------------------------------------------

பொருள்:

----------------

காட்டில்,  தானாகவே தோன்றி வளர்வது கள்ளிச் செடி. எந்த உயிரினத்திற்கும்  எவ்வித பயனுமில்லாத இந்தக் கள்ளிச் செடிகளுக்கு நடுவில்தான்  பெருமதிப்புடைய அகில் தோன்றி வளர்கிறது !

கானகத்தே திரிந்து வாழ்கிறது மான். உண்பவர்க்கு அல்லால், பிறருக்கு எவ்வகையிலும் பயன்படாத   இந்த மானின்  வயிற்றில் தான் ஒப்பனைக் கலைக்குப் பெரிதும் உதவுகின்ற அரிதாரம் தோன்றுகிறது !

தாகம் ஏற்படுகையில்,   உண்பதற்கு ஒரு துளியும்   தகுதியில்லாதது உவர்நீர். இத்தகைய உவர்நீர் நிறைந்திருக்கும் பெருங்கடலில் தான் விலைமதிக்க முடியாத முத்து பிறக்கிறது !

இப்படி ஒவ்வொன்றின்  பிறப்பையும் அறியமுடிகிற  மனிதனால் நல்லொழுக்கம் மிக்க சான்றோர்  எந்தக் குடியில் பிறக்கிறார்கள் என்பதை மட்டும்   அறிய முடிவதில்லை  !  ஏன் ? இதுதான் இயற்கையின் திருவிளையாடலோ ?

----------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------

கள்ளி = கள்ளிச்செடி; அகில் = நெருப்பில் இட்டுப் புகைத்தால் நறுமணம் தரக் கூடிய அகில் என்னும் செடி; ஒள்ளரிதாரம் = மேன்மை மிக்க அரிதாரம்; பல்விலைய = பெருமதிப்புடைய ; முத்தம் = சிப்பியில் விளையும் முத்துகள்; அறிவார் யார் = அறிந்தவர் யாரோ;  நல்லாள் (நல்ல + ஆள்) = நல்லொழுக்கமும் நற்குணமும் நற்பண்புகளும் மிக்க ஆள்; பிறக்கும் குடி = பிறக்கும் மக்கள் குலம்.

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2052,கும்பம்(மாசி),07]

{19-02-2021}

-----------------------------------------------------------------------------------------------------------

கள்ளி வயிற்றில்.

நான்மணிக் கடிகை (05) மண்ணி அறிப மணி நலம் ! -

புரவியின் இயல்பை அதில் ஏறி நடத்திச் செல்கையில்    அறியமுடியும்  !

------------------------------------------------------------------------------------------------------------

பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்றான நான்மணிக் கடிகையை இயற்றியவர் விளம்பி நாகனார் என்னும் பெரும் புலவர்.  கி.பி. 2 –ஆம் நூற்றாண்டில் தோன்றியது இவ்விலக்கியம் ! இதிலிருந்து ஒரு பாடல் !
-----------------------------------------------------------------------------------------------------------
பாடல்
----------------------------------------------------------------------------------------------
மண்ணி   அறிப   மணிநலம்;   பண்ணமைத்து
ஏறியபின்   அறிப    மாநலம்;   மாசறச்
சுட்டறிப,  பொன்னின்   நலம்காண்பார்;  கெட்டறிப
கேளிரான்  ஆய பயன் !
-----------------------------------------------------------------------------------------------
பொருள்:
------------------

மாணிக்கம் முதலான மணிகளின் இயல்பை ஆய்ந்து அறியும் வல்லுநர்கள், அவற்றை நீரால் கழுவி அறிவார்கள் !

குதிரையின் இயல்பை ஆய்ந்து அறியும் வல்லுநர்கள், அதன் மேல் சேணம் பூட்டி ஏறி நடத்திச் சென்று அறிவார்கள் !

பொன்னின் இயல்பை ( மாற்றினை ) அறியும் வல்லுநர்கள் அதனைப் புடமிட்டு உருக்கி அறிவார்கள் !

ஆனால்,உறவினர்களின் இயல்பினை அறிய விரும்பும் ஒரு மனிதன், அவன் வறுமைக்கு உள்ளாகித் துன்பப்படும் காலத்தில் தான் உண்மையில் அறியமுடியும் !
------------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
-----------------------------------------
மண்ணி = நீரால் கழுவி; பண்ணமைத்து = சேணம் பூட்டி;  மா = குதிரை;  மாசற = செம்பு முதலியவற்றின் கலப்பு நீக்கி;  கெட்டறிப = கெட்டுப் போகும் காலத்தில் அறிவார்கள்;  கேளிர் = உறவினர்கள்
-------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2050,மடங்கல்(ஆவணி),31]

{17-09-2019}
------------------------------------------------------------------------------------------------------------
       ”தமிழ்ப்பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------------

நான்மணிக் கடிகை (04) பறைபட வாழா அசுணமா !

களங்கம்  நேர்ந்தால் சான்றோர் உயிர் துறப்பர் !

-----------------------------------------------------------------------------------------------------------

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக் கடிகை பல கருத்தான பாடல்களைக் கொண்ட இலக்கியம் ! முத்து முத்தான 101 பாடல்களைக் கொண்ட நீதி நூல் ! அதிலிருந்து ஒரு பாடல் !
------------------------------------------------------------------------------------------------------------
பாடல்
------------------------------------------------------------------------------
பறைபட வாழா அசுணமா; உள்ளம்
குறைபட வாழார் உரவோர்நிறைவனத்து
நெல்பட்ட கண்ணே வெதிர்சாம் தனக்கொவ்வா
சொல்பட்டால் சாவதாம் சால்பு !

-----------------------------------------------------------------------------
பொருள்
------------------------------------------------------------------------------------------------------------
அசுணமா என்னும் கேகயப் பறவைக்கு பறையொலி பிடிக்காது; பறையொலியைக் கேட்டால் அஃது உயிர் நீத்துவிடும் !

அறிவார்ந்த மக்கள் தமது மதிப்புக்கு மாசு நேர்வதை விரும்பமாட்டார்; நேர்ந்தால் உயிர் வாழத் துணியார் !

மூங்கில் தூர்களில் அதன் வாணாளில் ஒருமுறைதான் அரிசி விளையும்; விளைந்த பின் அவை உயிர் வாழாது பட்டுப் போகும் !

அதுபோல்,  நிறையுடைய சான்றோர் தம்மீது பழிச்சொல் ஏற்படுவதைப் பொறுக்க மாட்டார்; ஏற்பட்டால் அக்கணமே உயிர் துறப்பர் !

------------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற் பொருள்:
---------------------------------------
அசுணமா = கேகயப் பறவை (இதை மயில் என்கின்றனர் சிலர் ) உரவோர் = அறிவுடையோர் ; நிறைவனத்து = காட்டிலுள்ள ; வெதிர் = மூங்கில்  ; சாம் = மடிந்து போகும் ;  சால்பு = நிறையுடைய சான்றோர்

-------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2050,மடங்கல்(ஆவணி),31]

{17-09-2019}
-------------------------------------------------------------------------------------------------------------
                  ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------------------