பக்கங்கள்

புதன், பிப்ரவரி 05, 2020

வரலாறு பேசுகிறது (23) ஔவை.சு.துரைசாமிப் பிள்ளை !

மறைந்த தமிழறிஞர்கள் பற்றிய தொடர்


ஔவை.சு.துரைசாமிப் பிள்ளை


தோற்றம்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திற்கு அருகில் உள்ள ஔவையார் குப்பம் என்னும் சிற்றூரில் 1903 –ஆம் ஆண்டு, செப்டம்பர்த் திங்கள் 5-ஆம் நாள் துரைசாமி பிறந்தார். அவருடைய தந்தையார் பெயர் பாவலர். சுந்தரம் பிள்ளை. தாயார் சந்திரமதி அம்மையார் !

கல்வி:

ஔவையார்க் குப்பத்தில் தனது தொடக்கக் கல்வியைப் பெற்ற துரைசாமி, பின்னர் திண்டிவனத்திலிருந்த உயர்நிலைப் பள்ளியில்  பள்ளியிறுதி வகுப்பு வரைப் பயின்றார். அடுத்து வேலூர் ஊரிசுக் கல்லூரியில் இடைநிலை வகுப்பில் (INTERMEDIATE) படிப்பைத் தொடர்ந்தார். குடும்பச் செல்வ நிலை நலிவுற்றிருந்த காரணத்தால், கல்லூரிப் படிப்பை மேற்கொண்டு அவரால் தொடர இயலாமற் போயிற்று ! 

பணியில் சேர்வு:

படிப்பை நிறுத்தியதும், குடும்பத்திற்கு உதவும் பொருட்டுநலத் தூய்மைக் கண்காணிப்பாளர்பணியில் சேர்ந்தார். அவருக்குள் கனன்று கொண்டிருந்த தமிழார்வம், அவரை அப்பணியில் தொடர விட வில்லை ! தமிழை முறையாகப் பயின்று புலமை பெறுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். எனவே ஆறே மாதங்களில் அப்பணியிலிருந்து விலகினார் !

தமிழ்க் கல்வி:

தமிழை முறையாகப் பயில வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்த துரைசாமி, தஞ்சை, கரந்தைத் தமிழ்ச் சங்கப்பள்ளியில் தமிழவேள் உமாமகேசுவரன் பிள்ளையால் ஆசிரியராகப் பணியில் அமர்த்தப் பட்டார். அப்பணியில் இருந்து கொண்டே, தமிழ்ப்பாடம் பயின்று 1930 –ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்  வித்துவான்தேர்வில் தேர்ச்சிப் பெற்றார் !

திருமணம்:

ஔவை துரைசாமி அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் பெயர் உலோகாம்பாள். இவ்விணையருக்கு 4 பெண் பிள்ளைகளும் 5 ஆண் பிள்ளைகளும் பிறந்தனர். ஆண்மக்களின் பெயர் (01) ஔவை. து. நடராசன் (தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக மேனாள் துணை வேந்தர் (02) ஔவை .து. திருநாவுக்கரசு (03) ஔவை .து. திருஞான சம்பந்தம் (04) ஔவை .து. மெய்கண்டான் (மருத்துவர்) (05) ஔவை .து. நெடுமாறன் (மருத்துவர்). பெண்மக்களின் பெயர் (01) பாலகுசம் (02) மணிமேகலை (03) திலகவதி (04) தமிழரசி.

தமிழ்ப் பணி:

தமிழ்வித்துவான்தேர்வு எழுதியிருந்த நிலையில் காவேரிப்பாக்கம் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியேற்றார். ”வித்துவான்பட்டம் பெற்ற பிறகு செய்யாறு, செங்கம், போளூர் ஆகிய இடங்களில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் ஏறத்தாழ 12 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றினார். தமிழ்ப் பொழில், செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ் முதலிய இதழ்களில் தமிழ் இலக்கிய, இலக்கண ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதிவந்தார் !

திருப்பதி திருவேங்கடவன் கீழ்த் திசை மொழிகள் கல்லூரியில் 1942 –ஆம் ஆண்டு ஆராய்ச்சியாளராகப் பணியில் சேர்ந்தார். இங்கு ஓராண்டுப் பணிபுரிந்த  பின் , சிதம்பரம் அண்ணாமலைப் பலகலைக் கழகத்தில் 1943 -ஆம் ஆண்டு முதல் எட்டு ஆண்டுகள் ஆராய்ச்சித் துறையில் விரிவுரையாளராகப் பணி புரிந்தார். பின்னர்  மதுரைத் தியாகராயர் கல்லூரியில் பேராசிரியராக 1951 –ஆம் ஆண்டு பணியேற்றார்.

தமிழ் இலக்கியப் பணி:

மணிமேகலைக் காப்பியத்திற்குப் புத்துரை எழுதிக் கொண்டிருந்த நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் எதிர்பாராமல் இயற்கை எய்தியதைத் தொடர்ந்து, கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளையின் அழைப்பை ஏற்று, தஞ்சை வந்து மணிமேகலைக் காப்பியத்தின் இறுதி நான்கு காதைகளுக்கும் விளக்கவுரை எழுதிக் கொடுத்தார் !

படைப்புகள்:

ஔவையார்க் குப்பம் என்னும் தன் ஊர்ப் பெயரின் முன் பாதியைத் தன் பெயருடன் இணைத்துக் கொண்ட துரைசாமி, பின்பு ஔவை.துரைசாமி என்றே தமிழ் கூறும் நல்லுலகால் அழைக்கப்பட்டார். ஔவை.துரைசாமி அவர்கள் (01) சேர மன்னர் வரலாறு (02) சைவ இலக்கிய வரலாறு (03) ஐங்குறுநூறு உரை (04) நற்றிணை உரை (05) புறநானூறு உரை (2 பகுதிகள்) (06) பதிற்றுப்பத்து உரை (07) திருவருட்பா உரை (9 தொகுதிகள்) (08) தமிழ்ச் செல்வம் (09) தெய்வப் புலவர் திருவள்ளுவர் (10) பரணர் (11) வரலாற்றுக் காட்சிகள் (12) மதுரைக் குமாரனார் (13) பெருந்தகைப் பெண்டிர் (14) தமிழ்த் தாமரை (15) நந்தாவிளக்கு (16) சிலப்பதிகார ஆராய்ச்சி (17) மணிமேகலை ஆராய்ச்சி (18) சீவக சிந்தாமணி ஆராய்ச்சி (19) சூளாமணிச் சுருக்கம் (20) தமிழ் நாவலர் சரிதை உள்பட 33 நூல்களைப் படைத்துள்ளார். இவையன்றி எட்டு நூல்கள்  அச்சில் வராதவையாக இருந்தன !

உரைவேந்தர்:

மதுரைத் தியாகராயர் கல்லூரித் தாளாளர் திருமதி இராதா தியாகராசன் அவர்கள் ஔவை. துரைசாமி அவர்களின் தமிழ்ப் பணியைப் பாராட்டி அவருக்குஉரை வேந்தர்என்னும் பட்டத்தை அளித்து, தங்கப்பதக்கம் அணிவித்துப் பாராட்டிப் பெருமைப் படுத்தினார். இஃதன்றி, ”பல்துறை முற்றிய புலவர்”, “தமிழ்ப் பேரவைச் செம்மல்”, “தமிழ்த் தொண்டு செய்த பெரியார்போன்ற பட்டங்களும் ஔவை. துரைசாமி அவர்களுக்கு பல்வேறு அமைப்புகளின் சார்பில் வழங்கப் பெற்றுள்ளன !

பிற தமிழ்ப் பணிகள்:

கல்வெட்டுகளை ஆய்வு செய்து படியெடுத்தல், ஓலைச் சுவடிகளை ஆய்வு செய்து படியெடுத்தல், செப்பேடுகளை தேடியெடுத்து ஆய்வு செய்தல், ஆகிய பணிகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட ஔவை. துரைசாமி அவர்கள் தேர்ந்த இலக்கிய இலக்கண ஆய்வறிஞர் ஆவார்.  பேரவைத் தமிழ்ச் செம்மல், சித்தாந்த கலாநிதி என்று தமிழுலகால் போற்றப் பெற்றவர் ஔவை.துரைசாமி அவர்கள் !

மறைவு:

அன்னைத் தமிழுக்கு அளப்பரிய தொண்டுகளை ஆற்றியுள்ள ஔவை.சு.துரைசாமி அவர்கள் தமது தமிழ்ப் பணிக்கு முற்றுப் புள்ளியைச் சான்றாக வைத்து விட்டு 1981 –ஆம் ஆண்டு, ஏப்பிரல் மாதம், 3 –ஆம் தமது  78 –ஆம் அகவையில்  நம்மிடமிருந்து மறைந்து, போனார்; இவ்வுலக வாழ்வை நீத்துப் புகழுடம்பு எய்தினார் !

முடிவுரை:

அன்னைத் தமிழின் பால் அளப்பரியப் பற்றுக் கொண்டு, பணியாற்றிய தமிழ் சான்றோர் நூற்றுக் கணக்கில் இருக்கின்றனர். அவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர் ஔவை.சு.துரைசாமி அவர்கள் ! தமிழ் இலக்கியங்கள் பலவற்றுக்கு முற்கால நடையில் புரிந்து கொள்ளக் கடினமான வகையில் பலரால் உரை எழுதப் பெற்றிருந்தன. இந்நிலையை மாற்றி தமிழ் இலக்கியங்களை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் வண்ணம் எளிய நடையில் உரை எழுதி வெளியிட்ட அரிய தமிழறிஞர் ஔவை. சு.துரைசாமி அவர்கள் ! வாழ்க அவரது அரிய தமிழ்த் தொண்டு ! வளர்க அவரது  புகழ் !


------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ: 2051, சுறவம் (தை),22]
{05-02-2020}

------------------------------------------------------------------------------------------------------------
            
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

------------------------------------------------------------------------------------------------------------